

புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியமான ஏனா முக்கு பயணம் செய்வது என்பது கடும் சிரமமானது. அதனால், செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடா செல்லும் தினசரி ரயிலை புதுச்சேரியிலிருந்து இயக்க வேண்டும் என புதுவை மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 7-ம் தேதி புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கம்சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்பேரில், ஆளுநரும் கடந்த மார்ச் மாதம் ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ் ணவை சந்தித்து வலியுறுத்தினார். அவரும் காக்கிநாடா சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சேரி வரை நீட்டிக்கப்படும் என மார்ச் 10ல் அறிவித்தார். ஆனால், 3 மாதங்கள் ஆகும் நிலையிலும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் புதுவை வரை நீட்டிக்கப்படவில்லை. இது புதுவை மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி ரயில் பயணிகள் சங்க தலைவர் சாமி (எ) கருப்பசாமி கூறுகையில், "கடந்த 2018ல் புதுச்சேரியில் 4வது பிளாட்பார்ம் தயாரானவுடன் சர்க்கார் எக்ஸ்பிரஸ் நீட்டிக்கப்படும் என்றனர். ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. மத்திய ரயில்வே அமைச்சர் கடந்த மார்ச் மாதம்நீட்டிப்பு செய்வதாக அறிவித்தார்.
ஆனால், அறிவிப்பு வெளியாகி 3 மாதங்களாகியும் இதுவரைசெயல்பாட்டுக்கு வராதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலைத் தொடர்ந்தால் விரைவில் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.