Published : 02 Oct 2017 10:07 AM
Last Updated : 02 Oct 2017 10:07 AM

அதிமுக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஓரிரு தினங்களில் நிறைவேறும்: ஸ்டாலின்

தமிழக மக்களை வாட்டி வதைக்கும் ‘குதிரை பேர’ அரசு முடிவுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஓரிரு தினங்களில் நிறைவேறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.  

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ''இன்றைக்கு தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இந்த 'குதிரை பேர' ஆட்சியின் மீது அளவுகடந்த கோபத்தில் இருக்கிறார்கள். இந்த ஆட்சியை இன்னும் கலைக்காமல், அகற்றாமல் இருக்கிறீர்களே என்று எங்கள் மீதும் அதிக கோபத்தில் இருக்கிறார்கள். அந்தளவுக்கு இந்த ஆட்சியின் மீது கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். இந்தியாவின் தலைநகரமாக உள்ள டெல்லியில் இன்றைக்கும் தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பிச்சையெடுத்து, சாலையில் உருண்டு, மொட்டையடித்து, சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு, அரை நிர்வாணம், முழு நிர்வாணம் என்று பலவிதமாகப் போராடி வருகிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் நெசவாளர்கள் போராடி வருகிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் எல்லாம் போராடுகிறார்கள். நெடுவாசலில் 172 வது நாளாக போராட்டம் தொடர்கிறது. தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் போராட்டம் நடக்கிறது. டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி தாய்மார்கள் ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகிறார்கள். இப்படி கொந்தளிப்பான நிலையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் இத்தனை வேதனைகளுக்கும் பரிகாரம் காண வேண்டும் என்ற உறுதியோடு இன்றைக்கு இந்த ஊட்டிக்கு நாமெல்லாம் வந்திருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகில் தான் கொடநாடு இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்க அடிக்கடி வந்த பகுதி இது. இன்றைக்கு அவரது மரணம் மர்மமான நிலையில், விடை காண முடியாமல் தள்ளப்பட்டு இருக்கிறது. அவரது சமாதியில் தியானம் செய்கின்ற, ஓங்கி அடித்து சத்தியம் செய்கின்ற, சமாதியில் முட்டி மோதிக் கொண்ட காட்சிகளை எல்லாம் பார்த்தோம். தமிழக அமைச்சர்கள் எல்லாம் ஒவ்வொரு நாளைக்கு, ஒவ்வொரு செய்தியாக பேசுகின்ற நிலையையும் பார்க்கிறோம். அவர்கள் சொல்வதெல்லாம் ஒவ்வொன்றும், ஒவ்வொரு முறையும், வெவ்வேறு விதமாக இருக்கின்றன. வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'முதல் மரியாதை' திரைப்படத்தில் ஒருவர். 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று சொல்வது போல, நமக்கெல்லாம் ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும் என்ற நிலை மதிப்புக்குரிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்டு இருக்கிறது. 'இட்லி சாப்பிட்டார், காபி குடித்தார், ஐஸ்கிரீம் சாப்பிட்டார், சிரித்துப் பேசினார்' என்றெல்லாம் சொன்ன அமைச்சர்கள், 'அப்படி சொன்னதெல்லாம் பொய், எனவே மக்களிடத்தில் மன்னிப்பு கேட்கிறோம்' என்று சொல்கிறார்கள்.

மருத்துவமனையில் 75 நாட்கள் என்ன நடந்தது என்று யாராவது உண்மையை வெளியிட்டு இருக்கிறார்களா? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பொய்களை மட்டுமே சொல்லி வருகிறார்கள். நீதிமன்றங்களில் ஒரு கூண்டில் குற்றவாளிகளை நிறுத்தி, நான் சொல்வதெல்லாம் உண்மை, என சொல்வதுபோல, இன்றைக்கு அமைச்சர்கள் எல்லாம், 'நாங்கள் சொன்னதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறல்ல' என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது.

தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, 'தமிழக முதலமைச்சராக இருப்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார், அவரது உடல் நலம் குறித்த விவரங்களை முறைப்படி அரசின் சார்பில் வெளியிடாமல் இருப்பது ஏன்? இதே தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அரசின் சார்பில் முறைப்படி மக்கள் நல்வாழ்வுத்துறை, சுகாதாரத்துறை அமைச்சர்கள் தினசரி அவர்களின் உடல் நலம் குறித்த விவரங்களை வெளியிட்டனர். ஆனால், அம்மையார் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து அதிகாரபூர்வமாக எந்தவித அறிவிப்பும் வரவில்லை' என்று சுட்டிக்காட்டினார். உடனே, அரசியல் காழ்ப்புணர்வோடு பேசுகிறார் என்று தெரிவித்தனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவருடைய இலாகாக்களை எல்லாம் பெற்றிருந்த, இன்றைக்கு துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், அப்போது துணை இருந்தவர் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்து விட்டார் என்று அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஓபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பிறகு, ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை வரவழைத்து, பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, 'ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சைகள், உயர் ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டன' என்றார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர், அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ்.

ஆனால், ஓபிஎஸ்ஸுக்கும், சசிகலாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது, அவரை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, சசிகலாவை அதில் அமர வைக்க முயன்றபோது, இதே ஓபிஎஸ் முதல்வர் பதவி பறிபோனதும் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று தியானத்தில் அமர்ந்து விட்டு, 'ஜெயலலிதா ஆவியோடு பேசினேன், தர்மயுத்தம் தொடங்கி விட்டேன், ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி சிபிஐ விசாரணை தேவை' என்று சொன்னார். ஆக, முதல்வராக இருந்தவரை, காவல்துறை உள்பட முக்கியமான அத்தனை துறைகளும் அவர் கையில் இருந்தபோது ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றி ஓபிஎஸ் கவலைப்படவில்லை.

அதுமட்டுமல்ல, இப்போது முதல்வராக இருக்கின்ற ஈபிஎஸ் சசிகலாவின் காலில் விழுந்து, ஆசிர்வாதம் பெற்று முதல்வரான காட்சிகளை எல்லாம் பார்த்து இருப்பீர்கள். அப்படி முதல்வரானதும், மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளரைக் கூப்பிட்டு, 06.03.2017 அன்று அறிக்கை வெளியிடச் செய்தார். சுகாதாரத்துறையின் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நான் மேயராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியபோது என்னோடு பணியாற்றியவர், இதுவரை இல்லாதவகையில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக அதே பொறுப்பில் இருந்து வருபவர். அந்தளவுக்கு அந்த ஆட்சிக்கு நம்பிக்கையானவர். அரசியல்வாதிகள் வெளியிடுவது போல வெளியான அந்த அறிக்கையில், 'எயிம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்படுவதெல்லாம் தவறு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை எயிம்ஸ் மருத்துவர்களே மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்கள்' என்று அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் லண்டன் டாக்டரை வைத்து பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். ஈபிஎஸ் அரசு செயலாளரை வைத்து அறிக்கை விடச்செய்தார். இப்போது அந்த ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் ஒன்றாக இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து நடத்தியிருக்கின்ற மிகப்பெரிய நாடகங்கள், அதன் முடிவாக இப்போது ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர், 'விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்கிறார், அப்படி அமைத்தால் முதல் நபராக ஓபிஎஸ்ஸை தான் விசாரிக்க வேண்டும்' என்றார். அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த ஓபிஎஸ், 'விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதற்கு நாங்கள் தயார், ஆனால் அக்யூஸ்ட் எண் 1 அமைச்சர் விஜயபாஸ்கர் தான்' என்றார். இப்படி மாறி மாறி அடித்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்போது ஒரே அமைச்சரவையில் இருக்கிறார்கள்.

திமுக தொடர்ந்து வலியுறுத்துவது என்ன? நாம் தொடர்ந்து கேட்டு வருவதெல்லாம், ஜெயலலிதா வெறும் நடிகை மட்டுமல்ல. குடிமகள் மட்டுமல்ல. ஒரு நாட்டின் முதல்வராக இருந்தவர். நமக்கும் அவருக்கும் என்னதான் கருத்து மாறுபாடுகள், வேறுபாடுகள் இருந்தாலும், அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதனால் தான் அன்றைக்கு தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பினார். இப்போதும் நாம் தொடர்ந்து சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறோம் என்றால், ஜெயலலிதா மறையும் வரையில் அவருக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது, தனியாக அவர் காரில் எங்கும் சென்று வர முடியாது, அவர் வெளியில் சென்றால் இருபது கார்கள் முன்னாடியும், இருபது கார்கள் பின்னாடியும் வரும், அதோடு ஒரு ஆம்புலன்ஸ் வண்டியும் வரும், அதுதான் இசட் பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு.

ஆனால், அவர் அப்போலோ மருத்துவமனையில் சேரும்போது, மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வண்டி போயஸ் தோட்டத்துக்குப் போயிருக்கிறது. போயஸ் தோட்டத்தில் நிரந்தரமாக இருந்திருக்க வேண்டிய ஆம்புலன்ஸ் வண்டி எங்கு போனது? அங்கு அது இருந்ததா, இல்லையா? அங்கு என்னதான் நடந்தது? இரு தினங்களுக்கு முன்பாக இந்தச் செய்திகளை எல்லாம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஆதாரங்களோடு வெளியிட்டார்களே, அதில் முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.

ஜெயலலிதாவின் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, மயங்கிய நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அடுத்தநாள் அந்த மருத்துவமனை சார்பில் பொத்தாம்பொதுவாக வெளியிடப்பட்ட செய்தியில், 'முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர் சத்துக் குறைபாடு, இரண்டு தினங்களில் சரியாகி விடும், நாளையோ அல்லது அடுத்த நாளோ அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்' என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இரு தினங்களுக்குப் பிறகு, 'ஜெயலலிதா ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார், முக்கிய உயரதிகார்கள் மற்றும் அமைச்சர்களுடன் காவிரி பிரச்னை குறித்து அங்கு விவாதித்தார்' என்ற செய்தி வெளியிடப்பட்டது. இந்த ஆலோசனை தொடர்பாக, 'முதல்வரின் அறிவுரையை, ஆலோசனையைப் பெற்று, அவரது வழிகாட்டுதலோடு, அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லிக்கு செல்கிறார்கள்' என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

நான் கேட்கிறேன், ஐசியுவில் உள்ள நோயாளியை மற்றவர்கள் சந்திக்க மருத்துவமனை அனுமதிக்குமா? ஆனால், காவிரி பிரச்சினை பற்றி அதிகாரிகள், அமைச்சர்கள் புடைசூழ ஆலோசனை நடந்தது எப்படி சாத்தியம்? மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் இசட் பிரிவுப் பாதுகாப்பில் இருந்த கருப்புப் பூனைப்படைகள் எங்கு சென்று இருந்தனர்? அந்தப் பாதுகாப்பில் இருப்பவர் எங்கு செல்கிறார், யாரை சந்திக்கிறார், என்ன செய்கிறார் என்ற விவரங்களை எல்லாம், இசட் பிரிவு அதிகாரிகள் டெல்லியில் உள்ள உயரதிகாரிகளுக்கு சொன்னார்களா அல்லது சொல்லவில்லையா? டெல்லியில் உள்ள உயரதிகாரிகள், மத்திய அமைச்சர்கள், பிரதமர் ஆகியோருக்கு அந்த விவரங்கள் தெரியுமா, தெரியாதா?

அதனால் நான் உறுதியாகவே சொல்கிறேன், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மத்திய அரசுக்கு முழுமையான விவரங்கள் தெரியும். அதனால் தான் அவர் மறையும் வரையிலும் பிரதமர் மோடி இங்கு வரவில்லை. அவர் இறந்ததும், பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்பட்ட பிறகு வந்து, பார்த்துவிட்டுச் சென்றாரே தவிர, அதற்கு முன்பாக அவர் வரவில்லை. இங்குள்ள கவர்னரோ, மத்திய அமைச்சர்களோ, மாநில அமைச்சர்களோ, யாரும் மருத்துவமனைக்குள் சென்று அவரைப் பார்க்கவில்லை என்று இப்போது சொல்கிறார்கள். திமுக சார்பில், முதல்வரை யாரும் சந்திக்க அனுமதிக்கவில்லையே, என்று கேட்டோம். ஆனால், அனைவரும் உள்ளே சந்தித்ததாக சொன்னார்கள்.

ஆனால், இப்போது திண்டுக்கல் சீனிவாசன், 'கவர்னரையே சந்திக்க அனுமதிக்கவில்லை' என்று சொல்கிறார். அதற்கு கவர்னர் மாளிகையில் இருந்து ஏதாவது பதில், விளக்கம் சொல்லப்பட்டதா என்றால் இல்லை. பொறுப்பு கவர்னராக இருந்தபோது நேராக மருத்துவமனைக்குச் சென்றவர், வெளியில் என்ன செய்தி வந்தது? கட்டை விரலை முதல்வர் உயர்த்திக் காட்டினார் என்று செய்தி வந்ததா இல்லையா? ஆனால், இன்றைக்கு அதெல்லாம் பொய் என்று திண்டுக்கல் சீனிவாசன் சொல்லி இருக்கிறாரே. ஆனால், இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல், புத்திசாலித்தனமாக அந்த கவர்னரை மாற்றிவிட்டு, புதிய கவர்னர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த மாநிலத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு, அந்த அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டு இருக்கிறது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒரு அசாதாரணமான சூழல் ஏற்பட்டு இருக்கிறது, ஆனால், பொறுப்பு கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மத்திய அரசு தமிழகத்துக்கு நிரந்தரமான கவர்னரையும் நியமிக்கவில்லை. ஆனால், இப்போது விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, ஒரு அமைச்சரே ஆளுநர் சொன்னது பொய் என்று சொல்லி இருக்கிறார், இந்த நிலையில் கவர்னர் சிக்கி விடுவார் போலிருக்கிறது, அவர் சிக்கினால் மத்திய அரசுக்கு ஆபத்து வந்துவிடும், என்ற நிலை ஏற்பட்டதும், உடனடியாக முதலில் அவரை மாற்றி விட்டார்கள்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 3 தொகுதிகளில் இடைத்தேர்தல்களை நாம் சந்தித்தோம். ஆனால், அதிமுகவின் சார்பில் போட்டியிட்டவர்களுக்கு சின்னத்தை ஒதுக்க, அவர்களின் வேட்புமனுக்களில் அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டு இருந்ததே, நான் கேட்கிறேன், அவரால் கையெழுத்துப் போட முடியவில்லை என்பதால் கைரேகை பதிவு செய்ததாக சொன்னார்களே, ஆனால், அதற்கு இரு தினங்களுக்குப் பிறகு, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் வைத்து வெளியான ஜெயலலிதாவின் அறிக்கையில் அவரது கையெழுத்து எப்படி வந்தது? ஆக, இடைத்தேர்தலில் போர்ஜரி நடந்துள்ளதா இல்லையா? அதை செய்தது அதிகாரிகளா, அமைச்சர்களா? இந்த உண்மைகள் எல்லாம் வெளியாக வேண்டுமென்றால், சிபிஐ விசாரணை அமைத்தால் மட்டுமே வெளியாகும்.

ஜெயலலிதா வகித்த பொறுப்புகளை எல்லாம் ஆளுநர் மாற்றிக் கொடுத்தபோது, ஜெயலலிதா ஒப்புதலோடு தந்ததாக அறிவித்தார்களே, மயங்கிய நிலையில் இருந்தவர் எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்? அவரது மரணச்செய்தி அறிவிக்கப்பட்ட அடுத்த விநாடியே, கவர்னர் மாளிகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்று, அவரது அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு இரவு 2 மணிக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தக் கேள்விகளை ஒட்டுமொத்த தமிழக மக்களும் இன்றைக்கு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, இப்போது அமைக்கப்பட்டுள்ள தனிநபர் விசாரணைக் கமிஷனால் லண்டனில் உள்ள மருத்துவரை அழைத்து வந்து விசாரிக்க முடியாது. மத்திய – மாநில அமைச்சர்களை சுதந்திரமாக அழைத்து விசாரிக்க முடியுமா? டெல்லி எயிம்ஸ் மருத்துவர்கள் என்ன சிகிச்சையை அளித்தார்கள் என்று விசாரிக்க முடியுமா? மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை விசாரிக்க முடியுமா? என்றால் எதுவுமே முடியாது.

அதனால் தான் உங்களுடைய உள்ளங்களில் எழுந்துள்ள, என்னைப் பார்த்து நீங்கள் கேட்கின்ற ஒரே கேள்வி என்னவென்றால், 'இந்த ஆட்சிக்கு எப்போது முடிவுகட்டப் போகிறீர்கள்?' என்பதுதான். தமிழக மக்களின் சுயமரியாதையை இன்றைக்கு டெல்லியில் அடகுவைத்து, டெல்லியில் இருப்பவர்களுக்கு சரணாகதி அடைந்து கிடக்கும், தமிழகத்தின் நலன்களை எல்லாம் இன்றைக்கு டெல்லியில் அடகு வைத்திருக்கும் இந்த ஆட்சிக்கு, எப்போது முடிவு கட்டப்போகிறீர்கள் என்பது தான், இன்றைக்கு தமிழக மக்கள் எங்களைப் பார்த்து கேட்கின்ற ஒரே கேள்வியாக உள்ளது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, சட்டமன்றத்தில் 25.04.2013 அன்று, 110 விதியைப் பயன்படுத்தி இதே உதகைக்கு 7,000 கோடி மதிப்பில் அறிவித்த சின்ஹெல்லா திட்டத்தில் இதுவரை ஒரு துரும்பாவது நிறைவேற்றப்பட்டதா? அந்தத் திட்டத்தில் ஒரு திருத்தம் செய்ய வேண்டும் என்று நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் கோடி கோடியாக கொள்ளையடிக்க திட்டமிட்டவர்கள் இன்றைக்கு ஆட்சியில் இருக்கலாமா?

ஜெயலலிதா ஓய்வெடுத்து வந்த கொடநாடு பங்களாவிலேயே இன்றைக்கு, கொலை கொள்ளைகள் நடக்கின்றன. அதையெல்லாம் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, 4,000 தொழிலாளர்கள் உள்ள இந்துஸ்தான் தொழிற்சாலையை மூடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறதே? அதற்குத் துணை நிற்கும் 'குதிரை பேர' ஆட்சி தொடரலாமா? 

மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதால் தான் ஆட்சி சிறப்பாக நடப்பதாக முதல்வர் எடப்பாடி சொல்கிறாரே, வர்தா புயல் நிவாரண நிதியாக நீங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கியதா? நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் சேர்ந்து சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்களை ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பியது என்னவானது? அதை செயல்படுத்தினால்தான் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கொடுப்போம் என்று சொல்லும் தகுதி இருந்ததா? காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிமன்றம் உத்திரவிட்டும், அதை செயல்படுத்த மத்திய அரசிடம் வாதாடி, போராடும் திறமை, இணக்கம் ஏதும் இல்லை.

ஆனாலும், மத்திய அரசிடம் முழுமையாக மண்டியிட்டு இருப்பதற்கு என்ன காரணமென்றால், வருமான வரித்துறை சோதனை என்ற பயம் தான். ஆர்.கே.நகர் தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டது? வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்த விவரங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டில் வெளியானதால் நிறுத்தப்பட்டது. முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை யார் யாரிடம் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை பால் கணக்கு எழுதுவது போல எழுதி வைத்திருந்தார். 

அடுத்து, கொடிய புற்றுநோய் வருவதற்குக் காரணமான போதைப் பொருளான குட்காவை சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பகிங்கரமாக விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய விவரம் வருமான வரித்துறையின் சோதனையில் வெளியானது. இதுபற்றி நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியிருந்தாலும், அதை தவறு என்று அவர்கள் மறுத்ததால், குட்கா விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு நாங்களே நேரில் சென்று, அதையெல்லாம் நாங்கள் வாங்கி, அந்த ஆதாரங்களை எல்லாம் சட்டமன்றத்தில் காட்டினோம். அப்படி ஆதாரம் வேண்டுமென்பதற்காக படமெடுத்து வைத்திருக்கிறோம். அவையெல்லாம், இந்த ஆட்சி மாறி திமுக ஆட்சி வந்ததும் வெளியாகும்.

இப்போது எதை எதையோ சொல்லி தப்பித்தவர்கள் எல்லாம் அப்போது தப்பிக்கவே முடியாது. அதில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 40 கோடி ரூபாய் மாமூல் வழங்கப்பட்டு இருப்பது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. இப்போது டிஜிபியாக இருக்கும் ராஜேந்திரனுக்கு மாமூல் கொடுக்கப்பட்டு உள்ளது. இரு தினங்களுக்கு முன் ஓய்வுபெற்ற முன்னாள் கமிஷனர் ஜார்ஜுக்கு மாமூல் வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. வருமான வரித்துறை சோதனையில் வெளியானது. ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ஆதாரங்களோடு செய்தி வெளியானது. இந்த விவகாரத்துக்கு பயந்துதான் மத்திய அரசிடம் இவர்கள் மண்டி போட்டு இருக்கிறார்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் இருந்து, ஆட்சியதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தால், இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் எல்லாம் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், திமுக ஆட்சியமைந்ததும், உரிய விசாரணை நடைபெறும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

என்றைக்கும் திமுக கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராது, ஆனால், பாஜகவின் அடிமைகளாக உள்ள ஆட்சியைத் தூக்கி எறிவதற்கு, பாஜகவிடம் நம்முடைய மானத்தையே அடமானம் வைக்கின்ற ஆட்சியை அகற்ற, தமிழ்நாட்டை நாம் காப்பாற்ற, நீதிமன்றத்தினை நாம் நாடியுள்ளோம். எதிர்வரும் 4 ஆம் தேதி அந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது. எனவே, இன்னும் இரண்டு, மூன்று தினங்கள் மட்டும் பொறுத்திருங்கள் நாங்கள் மட்டுமல்ல இந்தத் தமிழகமே எதிர்பார்க்கும் முடிவு வரும்'' என்று ஸ்டாலின் பேசினார்.  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x