Published : 02 Jun 2023 06:14 AM
Last Updated : 02 Jun 2023 06:14 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை முன் பனகல் சாலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தால், நெரிசல் குறைந்துள்ளது. இதைஅனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட முறை ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருகின்றன.போக்குவரத்து மிகுந்த பனகல் சாலையில் மருத்துவமனை அமைந்துள்ளதால் நோயாளிகள், அவர்களோடு வரும் உறவினர்கள் மட்டுமின்றி, அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் கடும் சிரமம் அடைந்தனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து குறித்த நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வர முடியாமல் சிரமப்பட்டார்கள்.இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், பனகல் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றத்தை மாநகர காவல் துறை மேற்கொண்டது.
அதன்படி, திருவள்ளுவர் சிலை, அண்ணா பஸ் நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் இளங்கோ மேல்நிலைப் பள்ளி அருகே தடை செய்யப்பட்டு, இடதுபுறமாக திரும்பி வைகை வடகரை சாலையின் வலதுபுறமாக சென்று செல்லூர், தத்தனேரி மற்றும் திண்டுக்கல் சாலைக்குச் செல்கின்றன.
தமுக்கம், தல்லாகுளம் செல்லும்வாகனங்கள் வைகை வடகரை சாலையை பயன்படுத்தி குமரன் சாலையில் வலதுபுறமாக திரும்பி பாலம் ஸ்டேஷன் சாலை, கோரிப்பாளையம் வழியாக செல்கின்றன. சிம்மக்கல் வழியாக பெரியார் பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள், வைகை வடகரை சாலை வழியாக புதிதாக கட்டப்பட்ட ஓபுளா படித்துறை பாலம், முனிச்சாலை சந்திப்பு, யானைக்கல் வழியாக செல்கின்றன. மருத்துவர்கள், ஊழியர்கள் சிவசண்முகம்பிள்ளை சாலை கிழக்கு வாசல் வழியாக மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.
இந்த போக்குவரத்து மாற்றத்தால் தற்போது அரசு மருத்துவமனை முன் பகுதியில் உள்ள பனகல் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் எளிதாக அப்பகுதியை கடந்து செல்கின்றனர். மருத்துவமனை பணியாளர்களும் மெயின் கேட் வழியாக எளிதாக வெளியேறி தேவர் சிலை, மற்றும் அண்ணா பேருந்து நிலையப் பகுதிகளுக்கு செல்கிறார்கள். அதனால் போக்குவரத்து மாற்றத் துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT