Published : 08 Oct 2017 11:04 AM
Last Updated : 08 Oct 2017 11:04 AM

பழங்குடி இன பட்டியலில் சேர்க்க மீனவர்கள் வலியுறுத்தல்

மண்டல் குழு பரிந்துரைப்படி மீனவர்களை பழங்குடி இனப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மீனவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு- புதுச்சேரி மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் நிறுவனர் இரா.மங்கையற்செல்வன், வழக்கறிஞர் எட்வின் ஆகியோர் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:

மீனவர் போன்ற பாரம்பரிய தொழில் சார்ந்த சமூகத்தினர் இந்தியாவின் பல பகுதிகளில் இன்னும் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். மீனவர்கள் மீது இழுவலையை திணித்ததாலும், அணு உலை, அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளை கடற்கரையில் அமைத்ததாலும் கரையிலிருந்து 20 மைல் வரை மீன்வளம் முற்றாக அழிந்துவிட்டது.

தற்போது ஆழ்கடலில்தான் மீன்வளம் அதிகமாக உள்ளது. ஆனால் பாரம்பரிய மீனவர்களை புறக்கணித்துவிட்டு ஆழ்கடல் மீன்வளத்தை பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டங்களைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதனால் ஏற்கெனவே வறுமையில் உள்ள மீனவ சமூகம் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கும் அபாயம் உள்ளது.

சின்ன பட்டினவர், செம்படவர், கரையாளர், பரவர், முத்தரையர் போன்ற மீனவ சமூகத்தினர் தமிழக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால் அரசியல், அரசு உயர் பதவிகளில் மீனவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இவர்களை பட்டியல் சாதியிலோ அல்லது பழங்குடியினர் சாதியிலோ சேர்க்க வேண்டும் என மண்டல் கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேற்குவங்கம், ஒடிசா, புதுடெல்லி ஆகிய மாநிலங்களில் மீனவர்கள் பட்டியல் பிரிவிலும், மராட்டியத்தில் பழங்குடியின பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மற்றும் ஆந்திரா அரசுகள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளன. எனவே மண்டல் குழு பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் அரசியல் துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். மீனவர்களின் பொது மேம்பாட்டுக்காக கடற்கரை பகுதிகளைக் கொண்டு தனி கரையோரத் தொகுதிகள் அமைக்க வேண்டும் என்ற என்.என்.சட்டநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

நீதிக்கான மக்கள் கழக அமைப்பாளர் ரஜினி, தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலர் சர்ச்சில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x