Published : 02 Jun 2023 07:04 AM
Last Updated : 02 Jun 2023 07:04 AM

77 வயதிலும் நீச்சல் கற்றுத்தரும் மூதாட்டி: வீட்டுக்கே சென்று பாராட்டிய நாகை எஸ்.பி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்கும் ராமாமிர்தம்.

நாகப்பட்டினம்: 77 வயதிலும் சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட பலருக்கு நீச்சல் கற்றுத்தரும் மூதாட்டியை நாகை மாவட்ட எஸ்.பி ஹர்ஷ் சிங் நேற்று வீட்டுக்கேச் சென்று பாராட்டினார்.

நாகை முகமதியர் தெருவைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மனைவி ராமாமிர்தம்(77). நீச்சல் கலையில் சிறந்து விளங்கும் இவர், தனது முதுமையையும் பொருட்படுத்தாமல் சிறுவர், சிறுமிகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார்.

இவர், இளம் வயதில் எந்தப்போட்டியிலும் பங்கேற்று கோப்பைகளை வென்றவர் இல்லை. ஆனாலும், சிறு வயதில் தான் கற்றுக்கொண்ட நீச்சல் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத்தர வேண்டும் என்பதற்காக, சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் என ஆர்வத்துடன் கேட்கும் அனைவருக்கும் இலவசமாக நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், தனது நோய் மற்றும்வயோதிகம் குறித்து கவலைப்படாமல் தனது ஓய்வு நேரத்திலும், குழந்தைகளின் விடுமுறை நாட்களிலும் உற்சாகத்துடன் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார்.

நாகை முகமதியர் தெருவில் உள்ள ராமாமிர்தம் வீட்டுக்கு நேற்று
சென்று, அவருடன் உரையாடிய எஸ்.பி ஹர்ஷ் சிங்.

இதுதொடர்பாக, ராமாமிர்தம் கூறியது: என்னுடைய 5-வது வயதில் என் தந்தையுடன் குளத்தில் குளித்தபோது, அவரது வேஷ்டியைப் பிடித்துக்கொண்டு நீச்சல் கற்றுக்கொண்டேன். நான்கற்றுக்கொண்ட நீச்சல் கலையைஎன் மகன், மகள், பேரக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தேன்.

தற்போது, யார் வந்து கேட்டாலும் நீர்நிலைகளுக்கு அழைத்துச் சென்று இலவசமாக நீச்சல் கற்றுத் தருகிறேன். தற்போது நீர்நிலைகள் தண்ணீர் இல்லாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்துக்கு அழைத்துச் சென்று கற்றுத் தருகிறேன் என தெரிவித்தார்.

ராமாமிர்தம் குறித்து கேள்விப்பட்ட நாகை எஸ்.பி ஹர்ஷ் சிங் நேற்று அவரது வீட்டுக்கே நேரில் சென்று, அவருடன் நீச்சல் பயிற்சி குறித்து உரையாடினார். பின்னர், மூதாட்டிக்கு எஸ்.பி ஹர்ஸ் சிங் நினைவுப் பரிசு வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x