Published : 31 Oct 2017 11:12 AM
Last Updated : 31 Oct 2017 11:12 AM

வெற்றி நூலகம்: சத்யா நாதெள்ளா உருவான கதை!

மை

க்ரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய செயல் நிறுவனர் சத்யா நாதெள்ளாவின் சுயசரிதை புத்தகமான ‘ஹிட் ரெஃப்ரஷ்’ (Hit Refresh), விரைவில் தமிழில் வெளியாகவிருக்கிறது. ‘வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ்’ வெளியிடும் இந்தப் புத்தகத்தை இரா. மோகனசுந்தரம் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி…

பன்னிரண்டாம் வகுப்பில், என் கனவு குறித்து நீங்கள் கேட்பீர்கள் என்றால், அது இதுதான் - ஒரு சிறிய கல்லூரியில் சேர்ந்து படிப்பது, ஹைதராபாத்துக்காக கிரிக்கெட் விளையாடுவது, அப்புறம் ஒரு வங்கியில் வேலை செய்வது. அவ்வளவுதான். பொறியாளர் ஆகி மேற்திசை நாடுகளுக்குப் போவதெல்லாம் எனக்குத் தோன்றியதே இல்லை. எனது திட்டங்களில் அம்மா சந்தோஷமடைந்தார்.

ஐ.ஐ.டி.யில் தோல்வி

“அற்புதம் மகனே.” ஆனால், தந்தை விவகாரத்தை வலிய இழுத்தார். அவர் சொன்னார், “பாரு நீ ஹைதராபாத்தை விட்டு வெளிய வர வேண்டும். இல்லையானால் உன்னை நீயே பாழாக்கிக் கொள்வாய்.” அப்போது அது ஒரு சிறந்த அறிவுரை. ஆனால், ஹைதராபாத் இப்போது இருப்பதைப்போல தொழில்நுட்ப மையமாக மாறும் என்று அன்றைக்கு மிகச் சிலர்தான் கணித்திருக்க முடியும். என் நட்பு வட்டத்திலிருந்து பிரிவது கடினமாக இருந்தது. ஆனால், அப்பா சொன்னது சரிதான். நான் என் லட்சியத்தில் மாகாணத்துக்குள்ளேயே இருந்தேன். எனக்கு நோக்கங்கள் தேவையாக இருந்தன. கிரிக்கெட் எனது விருப்பமாக இருந்தது. அதற்கு அடுத்து நெருக்கமாக இருந்தது கம்ப்யூட்டர்.

ஆனால், இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் தோற்றுப்போனேன். அந்த நேரத்தில் இந்தியாவில் வளர்ந்துகொண்டிருந்த நடுத்தரக் குடும்பத்துச் சிறுவர்களுக்கு ஐ.ஐ.டி. கல்விதான் சொர்க்கவாசல். எல்லா நுழைவுத் தேர்விலும் வெற்றியடைந்த என் தந்தை, என் தோல்வியால், அதிர்ச்சியைவிட ஆச்சரியம் அடைந்தார்.

உள்ளுணர்வு சரிதான்

ஆனாலும், அதிர்ஷ்டவசமாக, பொறியியல் படிப்பைத் தொடர எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. மெஸ்ரா நகரில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படிக்கவும், மணிபால் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. நான் மணிபால் வாய்ப்பைத் தேர்வு செய்தேன். எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படிப்பதன் மூலம் கம்ப்யூட்டர் மென்பொருளுக்கு நெருக்கமாக இருக்கலாம் என்கிற உள்ளுணர்வு இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த உணர்வு சரியாக இருந்தது. படிப்பளவில் அது என்னைச் சிலிகான் வேலிக்கும், தொடர்ந்து மைக்ரோசாப்ட்டுக்கும் செல்லப் பாதை வகுத்தது.

மணிபாலில் நான் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸில் பயிற்சி பெற்றேன் - ஒருங்கிணைந்த சர்க்யூட் மற்றும் கணிப்பொறி தயாரிக்கும் கோட்பாடுகள் கற்றேன்.

எலக்ட்ரிகல் என்ஜினியரிங் பட்டம் பெற்றதும் என்ன செய்வது என்பது பற்றிய திட்டங்கள் ஏதும் இல்லை. அம்மாவின் வாழ்க்கைத் தத்துவத்தைத்தான் சொல்லியாக வேண்டும். “உன் விஷயத்தைச் செய்யும்போது வேகம் தானே வரும். நீ அதை விரும்பிச் செய்யும்போது கவனமாக நன்றாகச் செய். அதில் நேர்மையான நோக்கம் இருக்கட்டும். வாழ்க்கையில் தோற்றுப்போக மாட்டாய்” என்பார் அம்மா. அந்தத் தத்துவம்தான் என்னை வாழ்க்கை முழுவதும் தாங்கி நின்றது. பட்டம் பெற்ற பின், அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தேன்.

அத்தனை எளிதானது அல்ல

1988-ல், என் 21-ம் பிறந்தநாளில், புதுடெல்லியிலிருந்து சிகாகோ ஓஹேர் விமான நிலையத்துக்குப் பறந்தேன். அங்கிருந்து ஒரு நண்பர் என்னைக் கல்லூரி வளாகத்துக்குக் கொண்டு போய்விட்டார். அது கோடைகாலம். அழகாக இருந்தது. அமெரிக்காவில் என் வாழ்க்கை அப்போது தொடங்கியிருந்தது.

நிச்சயமாக, எனக்கும் வீட்டு நினைப்பு வரும், எல்லாரையும்போல. அதனால், அமெரிக்கா வரவேற்கத்தக்கதாக இல்லாமல் போயிருக்கும். என் கதை மற்ற இடங்களில் சாத்தியப்படுமா என்று எனக்குத் தெரியவில்லை, இன்று நான் என்னை அமெரிக்கக் குடிமகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்கிறேன். இருப்பினும், பின்னோக்கிப் பார்க்கும்போது என் கதை கொஞ்சம் செயல்நிரல் செய்யப்பட்டது போன்று தோன்றும் எனக் கருதுகிறேன். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் மகன் கடினமாகப் படிக்கிறான், பொறியியல் பட்டம் பெறுகிறான், அமெரிக்காவுக்குப் போகிறான், தொழில்நுட்பத்தில் சாதிக்கிறான் எனத் தோன்றும். ஆனால், இது அத்தனை எளிதானது அல்ல. . நான் கல்வியில் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. சிலிக்கான் வேலியைக் குறிக்கும் நேர்சொல்லாக மாறிய ஐ.ஐ.டி.-யில் நான் படிக்கவில்லை. படித்த கல்லூரியைச் சார்ந்து வார்த்தெடுத்த மனிதனாக இல்லாவிட்டாலும்கூட, என்னைப் போன்ற ஒருவருக்கு அமெரிக்காவில்தான் தன்னை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x