Published : 15 Sep 2015 12:39 PM
Last Updated : 15 Sep 2015 12:39 PM

வாழ்க்கையைத் தேடி: பூதாகரமாகும் அகதிகளின் துயரம்

உலகம் திடீரென்று கண்விழித்துக் கொண்டதுபோல் இருக்கிறது. ஆம், குழந்தை ஆலன் குர்தி கரையொதுங்கிய புகைப்படம்தான் உலகத்தைக் கண் திறக்கச் செய்திருக்கிறது. அகதிகள், புலப்பெயர்வு, மரணம் இந்தச் சொற்களையெல்லாம் உலகெங்கும் உச்சரிப்பதற்கு ஒரு குழந்தை கரையொதுங்க வேண்டியிருந்திருக்கிறது. அகதிகள் பிரச்சினை பூதாகரமாகியிருக்கிறது. இது புலப்பெயர்வு பிரச்சினை என்றே உலகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. அப்படிச் சொல்வது பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதே. உண்மையில் இது அகதிகள் பிரச்சினைதான்.

செப்டம்பர் முதல் வாரம் வரை, ஐரோப்பாவில் தஞ்சம் புக முயன்று பலியானவர்களின் எண்ணிக்கை 2,760 என்கிறது ஒரு கணக்கு. இதனால், 2014-ஐ விட 2015 மிகவும் கொடுமையான ஆண்டாகியுள்ளது. 2014-ம் மோசமான ஆண்டுதான். இதுபோன்ற விபத்துகளில் கடந்த ஆண்டு பலியானோரின் எண்ணிக்கை 3,000-க்கும் அதிகம்.

மோசமான குடிவரவுக் கொள்கை

ஐரோப்பாவின் தெற்குப் பகுதியையொட்டி இருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் பொருளாதாரக் குலைவு, போர், கடுமையான தண்டனை முறைகள், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன. இந்தப் புலப்பெயர்வைச் சமாளிக்க முடியாமல் ஐரோப்பியத் தரப்பு திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உருப்படியாக ஒரு குடிவரவுக் கொள்கையைக் கூட அவர்கள் இயற்றவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆட்களைக் கடத்துபவர்களுக்கு இது எல்லாமே சாதகமாக அமைந்துவிடுகிறது.

இனி வரும் காலங்களில் ஐரோப்பாவை நோக்கிப் படையெடுக்கவிருக்கும் அகதிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். ஐரோப்பாவுக்கு இது நிரந்தரப் பிரச்சினையாக மாறிவிடும்.

உள்நாட்டுப் போர்கள்

அடைக்கலம் தேடிவருவோரின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டிருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள சோமாலியா, எரித்ரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக் கணக்கானோர் அடைக்கலம் தேடி ஐரோப்பா வருகிறார்கள். லிபியாவிலும் சிரியாவிலும் உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து அகதிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஐநா அகதிகள் முகமையின் கணக்குப்படி 2011-லிருந்து 1,20,000-க்கும் மேற்பட்ட சிரியர்கள் ஐரோப்பாவுக்கு அடைக்கலம் தேடிவந்திருக்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்த அகதிகளை ஐரோப்பாவுக்குக் கொண்டுசெல்வோர் அனைவருமே கடத்தல்காரர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதில் பல நாடுகளோடு சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். எந்த ஒழுங்குமுறைக்கும் உட்படாதவர்கள், அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பவர்கள். பாலஸ்தீன அகதி ஒருவர் தனது அனுபவத்தைச் சொன்னார்.

காஸாவில் உள்ள ஒரு ‘பயண ஏற்பாட்டாளர்’ மூலமாக சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவுடன் எகிப்து துறைமுகம் ஒன்றுக்கு அவர் கொண்டுவரப்பட்டிருக்கிறார். அங்கிருந்து பஸ் மூலமாக கப்பலுக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார். (கப்பல் என்பது பெரும்பாலும் படகைப் போல்தான் இருக்கும்). கப்பல் ஏறியதும் நடுக் கடலில் மூன்று முறை வெவ்வேறு கப்பல்களுக்கு அவரை மாற்றியிருக்கிறார்கள். ஆகவே, இது போன்ற காரியங்களின் தடங்களைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிக்கலான காரியம்.

இத்தகைய காரியங்களை தடுக்க, இத்தாலிய மீட்புக் குழு கிட்டத்தட்ட ஓர் ஆண்டு செயல்பட்டது. இதனால் மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி டாலருக்கும் மேல் இத்தாலியக் கடற்படைக்குச் செலவானது. இந்தச் சுமையை மற்ற அண்டை நாடுகளும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று இத்தாலி விரும்பியது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மீட்புக் குழுவான ட்ரிட்டன், இத்தாலிய மீட்புக் குழுவுக்குப் பதிலாகச் செயல்பட ஆரம்பித்தது. இத்தாலி செலவிட்டதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தக் குழு செலவழித்தது. இதைக் கொண்டு கடலில் 30,000 சதுர மைல்களைக் கண்காணிப்பது நடக்கின்ற காரியமா?

புலப்பெயர்வின் வழித்தடங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஃபிரான்ட்க்ஸ் முகமையின் வருடாந்திர அறிக்கை இந்த புலம்பெயர்வின் வழித்தடங்களை சித்தரித்துக் காட்டியிருக்கிறது. இந்தத் தடங்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரே விதத்தில்தான் இருக்கின்றன. சில நேரங்களில் குறிப்பிட்ட சில தடங்களுக்குப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அதிகமான கிராக்கி ஏற்பட்டிருக்கிறது.

உதாரணத்துக்கு, 2012-ல் கிரீஸ், பல்கேரியா ஆகிய நிலம் வழித் தடங்கள் வழியாக அகதிகள் அதிகம் வந்திருக்கிறார்கள். 2009-ல் கொஸவோ, அல்பேனியா ஆகியவற்றின் வழியாக அதிகமாக நுழைந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நிகழ்ந்த படகு விபத்துகளை வைத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும் கடந்த ஆண்டு கடல் வழியையே அதிகமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது. அப்படி வந்து இத்தாலி வழியாக ஐரோப்பாவில் நுழைந்திருக்கிறார்கள். மால்டா, கிரீஸ் வழியாகவும் கடந்த ஆண்டில் அகதிகள் நுழைந்திருக்கிறார்கள்.

தொடக்கப் புள்ளி: லிபியா

லிபியாதான் இதுபோன்ற பயணங்களைத் தொடங்குவதற்குப் பெரும்பாலும் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. அங்கு சட்டம் ஒழுங்கு எதுவும் கிடையாது. அந்தப் பகுதியில் உள்ள மத்தியத் தரைக்கடல் பகுதியில் ரோந்தும் கிடையாது. இதனால் அகதிகளுக்கும் கடத்தல்காரர்களுக்கும் வசதியாகப் போனது. சஹாராவுக்குத் தெற்கிலிருந் தும், சிரியா போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும்தான் நிறைய அகதிகள் இந்தத் தடத்தை உபயோகித் தார்கள். லிபியர்களும் இப்படிப் புறப்படுவதுண்டு. எந்த நாட்டில் குழப்பம் அதிகரித்தாலும் அதன் விளைவுகள் இங்கே தெரிவதுண்டு. உதாரணமாக, 2013-ல் 4,000 பாலஸ்தீனர்கள் அடைக்கலம் தேடி இந்த வழியில் சென்றிருக்கி றார்கள். அதற்கு முந்தைய ஆண்டைவிட இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகம்.

மூழ்கும் வாழ்க்கை

ஏழை நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு மக்கள் இப்படி வந்து குவிவது பணம் சம்பாதித்துத் தங்கள் குடும்பத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதால்தான் என்று ஒரு கண்ணோட்டம் உண்டு. எகிப்து, பாலஸ்தீனம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படும் பொருளாதாரப் பிரச்சினைகள்தான் இதற்குக் காரணம் என்பது உண்மைதான். ஆனால், உள்நாட்டுப் போர்கள், ஸ்திரமற்ற அரசியல் சூழல், கலவரங்கள் போன்றவைதான் பொருளாதாரப் பிரச்சினைகளைவிட அதிகக் காரணம்.

மால்டாவில் படகு விபத்திலிருந்து தப்பித்த ஒருவர் தனது கொடிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். பல நாட்களாக மிதவையொன்றின் உதவியால் கடலில் அவர் மிதந்திருக்கிறார். அவரோடு ஒரு பையனும் மிதந்திருக்கிறான். இதய நோயாளியாக இருக்கும் தன்னுடைய தந்தையின் மருந்துச் செலவுக்காகச் சம்பாதிக்க வேண்டும் என்று வந்து இப்படி மாட்டிக்கொண்டிருக்கிறான். மீட்புக் குழு வருவதற்கு முன்பு அந்தப் பையன் மூழ்கி இறந்துவிட்டான்.

பொருளாதாரக் காரணங்கள் போலவேதான் உள்நாட்டுப் போர்களும். சிரியா, எரித்ரியா, சோமாலிய ஆகிய மூன்று நாடுகளிலிருந்து உள்நாட்டுப் போர்கள், மனித உரிமை மீறல் ஆகிய காரணங்களுக்காகத்தான் பெரும்பாலானோர் தப்பித்து வருகிறார்கள் என்று ஐநா அகதிகள் முகமை சொல்கிறது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றின் அரசுகள் வீழ்ச்சியடைந்ததும், செயல்படாமல் போனதும் ஐரோப்பாவை நோக்கிப் பெரிய சுரங்கப் பாதையைத் தோண்டிவிட்டிருக்கிறது!

‘தி கார்டியன்’ இதழில் வெளிவந்த கட்டுரையின் தழுவல் இது.

தமிழில் சுருக்கமாக: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x