Published : 24 Sep 2019 11:37 am

Updated : 24 Sep 2019 11:37 am

 

Published : 24 Sep 2019 11:37 AM
Last Updated : 24 Sep 2019 11:37 AM

கரும்பலகைக்கு அப்பால்: பெண் என்னும் கனவு

the-girl-s-dream

ரெ.சிவா

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் விதமாக ஏதாவது குறும்படம் இருந்தால் உரையாட ஏதுவாக இருக்கும் என்று நினைத்தேன். ‘கொட்டாங்கச்சி’ என்ற படத்தைத் திரையிட்டேன். ஒளிப்படக் கலை மீது ஆர்வம் கொண்ட ஒரு சிறுவன் கொட்டாங்கச்சியை கேமராபோல வைத்து விளையாடுகிறான்.


அதன் பிறகு தனது கனவை வளர்த்து ஒளிப்படக் கலைஞராகவும் ஆகிறான். அந்த ஒளிப்படக் கலைஞர் ஒரு பெண்ணைக் கடற்கரையில் படம் எடுப்பதுபோன்ற காட்சி. பெண்ணைப் பார்த்ததுமே அறையின் கடைசியில் அமர்ந்திருந்த ஒருவனிடமிருந்து ‘ஸ்....’ என்ற ஒலி எழுந்தது. சிலரின் சிரிப்பும் முணுமுணுப்பும் சேர்ந்து அந்த ஒலி தொடர்ந்துகொண்டே இருந்தது.

ஆண் உலகில் பெண்

எனக்குக் கோபம் கொப்பளிக்கத் தொடங்கியது. அவர்கள் யாரென்று திரும்பிப்பார்க்க நினைத்தேன். வேண்டாம் என்று பொறுமை காத்தேன். பெண்ணைப் பார்த்ததுமே ஒரு வளரிளம் பருவச் சிறுவனுக்கு உடல் சார்ந்த உணர்வுகள் எழுகின்றன. சமூகமும் ஊடகங்களும் நண்பர்களுடனான பேச்சும் பெண்ணை உடலாகவே பார்க்க வைத்திருக்கின்றன. பெண் ஆணுக்கு ஒரு கனவாகவே இருக்கிறாள்.

பெண் குறித்த கற்பனைகளும் கட்டுக்கதைகளும் சூழ்ந்ததாகவே ஆணின் உலகம் இருக்கிறது. வயது முதிர்ந்தவர்களிலும் பலரும் இப்படியான கருத்துகளோடுதான் இருக்கிறார்கள். இந்த வயதில் இவர்களுக்கு இதை எப்படிப் புரியவைப்பது? கொஞ்சம் கொஞ்சமாக உரையாடலாம் என்று தோன்றியது.
மறுநாள் ‘ஆடை’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன். இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான படம். படம் முடிந்ததும் உரையாடல் தொடங்கியது. ஆங்காங்கே அவர்களுக்குள் பேச்சும் சிரிப்பும் மெதுவாகக் கேட்டன.

“அவங்க ஏரியா பசங்க. தப்பானவங்க அதான் அந்தப் பொண்ணு அலர்ட் ஆயிருச்சு.”
“அவங்க ஷால் போட்டிருக்கணும்.”
“உடையை ஒழுங்கா போடணும்.”
“பெண்ணைத் தப்பான எண்ணத்தோடு பார்க்கக் கூடாது” என்று சிலர் கூறினர்.

ஆண் குணம், பெண் குணம்!

அடுத்த நாள் கரும்பலகையில் ‘ஆண்’ என்று எழுதினேன். தம்பிகளா ஆண் அப்படின்னு சொன்னதும் மனத்தில் என்ன தோணுது?
மீசை, தாடி என்று சில குரல்கள் எழுந்தன. ஆணோட உருவத்தை விட்டுருங்க. வேற என்ன தோணுது என்றேன். வகுப்பறை அமைதியானது. கொஞ்ச நேரம் கழித்து ஆணுடைய குணங்கள் என்று யோசிங்க என்றேன்.
பயமில்லாமை, தைரியம், எதிர்த்துப் பேசுதல், அதிகக் கோபம், தலை நிமிர்ந்து நடப்பது, பலம், எந்த வேலையையும் செய்வது, பிரச்சினை என்றால் முன்னால் நிற்பது, எப்போது வேண்டுமானாலும் தைரியமாக வெளியே செல்வது, ஸ்டைல், சிகரெட் பிடிப்பது…

என்று மாணவர்கள் கூறியவற்றை எல்லாம் கரும்பலகையில் எழுதினேன். மகிழ்ச்சி. இப்போது இதற்குச் சொல்லுங்கள். ‘பெண்’ என்று எழுதினேன். அடக்கம், பணிவு, அன்பு, வெட்கம், பொறுமை, நேர்மை, அகங்காரம், ஏன் என்ற குரல் இல்லாதவர்கள், மரியாதை, கடைசிவரை கைவிடாதவர்கள், படிப்பு, வாக்கைக் காப்பது, திமிர், வீட்டுவேலை, புறணி, சீரியல் பார்ப்பது, பூ, பொட்டு, மேக்கப், பெருந்தன்மை, பேராசை, நல்ல உள்ளம், கடவுள் நம்பிக்கை, அழுவது, தன்னம்பிக்கை, பேச்சு, சண்டை, ஆடம்பரம், ஆணோடு போட்டி, விட்டுக்கொடுப்பது என்று நிறையக் குணங்களை மளமளவெனச் சொன்னார்கள்.
‘ஆணும் பூ வைப்பான்!’

தம்பிகளா, நம்மைப் பற்றி நமக்கு நல்லாத் தெரியும். ஆணைப் பற்றிச் சொல்லியிருப்பவை கொஞ்சமா இருக்கு. பெண்ணைப் பற்றி எப்படி இவ்வளவு செய்திகளைச் சொல்ல முடிந்தது என்று கேட்டேன்.
வகுப்பறையில் அமைதி சூழ்ந்தது. இங்கே எழுதியிருக்கிற ஆணின் குணங்களில் எதெல்லாம் பெண்ணுக்குப் பொருந்தும் என்று கேட்டேன். ஒவ்வொன்றாக அனைத்தும் பெண்ணுக்கும் பொருந்தின. அவ்வப்போது அதே குணம் உடைய சில பெண் ஆளுமைகளின் பெயர்களைச் சொன்னேன்.

பெண்ணின் குணங்கள் ஆணுக்கும் பொருந்தின. ‘பூ’ மட்டும் தனியே நின்றது. அது குணம் இல்லை என்று ஒரு குரலும் சில பழங்குடியின குழுக்களில் ‘ஆணும் பூ வைப்பான்!’ என்று ஒரு குரலும் எழுந்தன.
என்னடா, இது எல்லாம் எல்லோருக்கும் பொருந்திடுச்சே! ஆண், பெண்ணுக்குத் தனித்தன்மையான குணங்கள் இருக்கா, இல்லையா?

- என்று கேட்டேன். அமைதி நிறைந்தது. யோசிக்கத் தொடங்கியிருப்பார்கள். எத்தனை வயதானாலும், எவ்வளவு படித்தாலும் ஆணின் மனதுள் இளம்பருவத்தில் கதைகளாக நுழைந்த பெண் குறித்த கற்பிதங்கள், கனவுகள் தானே உண்மைபோல நிலைகொண்டுள்ளன. ஆணின் மனக்குப்பைகளை வெளியேற்றினால் மட்டுமே பெண்ணைச் சக உயிராக மதிக்கும் எண்ணத்தை உருவாக்க முடியும். அதைவிட எளிது வளரிளம்பருவத்தினரிடம் பெண் குறித்து உரையாடுவது.

படத்தின் பெயர் : ஆடை
நேரம் : 1.33 நிமிடங்கள்.
Youtube link : https://bit.ly/2kUWHi7


கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைகரும்பலகைக்கு அப்பால்பெண்கனவுஆண்கற்பனைகள்ஆண் குணம்பெண் குணம்மீசைதாடி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author