Published : 24 Sep 2019 11:29 AM
Last Updated : 24 Sep 2019 11:29 AM

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

தொகுப்பு: கனி

இந்தியர்கள் முதலிடம்

செப்டம்பர் 18: சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதாக ஐ.நா.வின் ‘2019 சர்வதேச புலம்பெயர்ந்தோர் இருப்பு’ அறிக்கை தெரிவித்துள்ளது. உலக அளவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 27.2 கோடியாக அதிகரித்துள்ளது. 1.75 கோடி இந்தியர்கள் உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் மெக்ஸிகோ, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

செப்டம்பர் 18: பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரவீந்திர பட், இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி. ராமசுப்ரமணியன், கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷேகேஷ் ராய் ஆகிய நான்கு பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்திருக்கிறார். நான்கு நீதிபதிகளின் நியமனத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தன் முழு அளவான 34-ஐ எட்டியிருக்கிறது.

11-ம் வகுப்பில் ஐந்து பாடங்கள்

செப்டம்பர் 18: பதினோறாம் வகுப்பு மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் (2020-21) ஆறு பாடங்களுக்குப் பதிலாக ஐந்து பாடங்களைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது என்று தமிழகக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர்த்து, நான்கு முக்கிய பாடங்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக மூன்று பாடங்களைத் தேர்வுசெய்து படித்தால் போதுமானது என்று இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைவிட, தமிழக மாணவர்கள் ஒரு பாடம் அதிகமாகப் படிக்கிறார்கள் என்பதாலும், போட்டித் தேர்வுளில் கவனம் செலுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி: 2600 ஆண்டுகள் பழமையான நாகரிகம்

செப்டம்பர் 19: தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவந்த தேர்வுகளில் நான்காம் கட்ட முடிவைத் தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இந்த முடிவில், வைகை நதிக்கரை நாகரிகமான கீழடியின் காலகட்டம் கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் 1-ம் நூற்றாண்டுவரை என்று கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் முன்னர் கணக்கிடப்பட்டதைவிட மேலும் 300 ஆண்டுகள் பழமையானவை என்று நான்காம் கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவருகிறது.

விமானப்படையின் புதிய தலைவர்

செப்டம்பர் 19: நாட்டின் விமானப்படைத் தலைவராக ராகேஷ் குமார் சிங் பதவுரியா நியமிக்கப்பட்டிருக்கிறார். வரும் செப்டம்பர் 30 அன்று அவர் விமானப்படைத் தலைவராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப் படைத் தலைவராக இருக்கும் பி.எஸ். தனோவாவின் பதவிக் காலம் முடிவடைவதால் விமானப்படைக்குப் புதிய தலைவராக ராகேஷ் குமார் சிங் பதவுரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு

செப்டம்பர் 20: உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் பரவலாக இருக்கும் சாதிப் பாகுபாடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட வேண்டுமென்று மறைந்த மாணவர்கள் ரோஹித் வெமுலா, மருத்துவர் பாயல் ஆகியோரின் தாயார்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழுவை இதுதொடர்பாகப் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

பெருநிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு

செப்டம்பர் 20: உள்நாட்டு, புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான ‘கார்ப்பரேட்’ வரி 30 சதவீதத்திலிருந்து 25.2 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அத்துடன், குறைந்தபட்ச மாற்று வரி எனப்படும் ‘மேட்’ வரியும் 18.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். நாட்டில் உற்பத்தி, முதலீட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

2 மாநிலங்களுக்குச் சட்டப் பேரவைத் தேர்தல்

செப்டம்பர் 21: மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 அன்று நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்திருக்கிறார். மகாராஷ்டிர சட்டப்பேரவை 288 தொகுதிகளையும் ஹரியாணா சட்டப்பேரவை 90 தொகுதிகளையும் கொண்டவை. மகாராஷ்டிரத்தில் 8.94 கோடி வாக்காளர்களும், ஹரியாணாவில் 1.82 கோடி வாக்காளர்களும் வாக்களிக்க இருக்கிறார்கள். அத்துடன், 18 மாநிலங்களில் காலியாக இருக்கும் 64 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 22 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயா தஹில்ரமானியின் ராஜினாமா ஏற்பு

செப்டம்பர் 21: சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவிவகித்துவந்த விஜயா கே. தஹில்ரமானியின் ராஜினாமாவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாறுதல் வழங்கப்பட்ட கொலிஜியத்தின் முடிவைத் தொடர்ந்து விஜயா கே. தஹில்ரமானி தன் பதவியை செப்டம்பர் 6 அன்று ராஜினாமா செய்தார்.

வெப்பமான ஐந்து ஆண்டுகள்

செப்டம்பர் 22: உலகின் சராசரி வெப்பநிலை 2015-2019 இதுவரை பதிவாகாத அளவுக்கு வெப்பமாக இருந்ததாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது. உலகின் முன்னணிப் பருவநிலை நிறுவனங்கள் இந்த அறிக்கையைத் தயாரித்திருக்கின்றன. ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், பசுமைக்குடில் வாயுக்கள் குறைப்பு இலக்கை அதிகரிக்குமாறு நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x