Published : 17 Sep 2019 12:04 PM
Last Updated : 17 Sep 2019 12:04 PM

பெண் ஆளுநர்களின் புதிய சாதனை!

தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன். அவரையும் சேர்த்து இந்தியாவில் பெண் துணை நிலை ஆளுநர், பெண் ஆளுநர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஒரே நேரத்தில் பெண் ஆளுநர்கள் அதிக அளவில் பதவியில் இருப்பது இப்போதுதான் முதன் முறை.

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு பிறகு இதுவரை தமிழிசையோடு சேர்த்து வெறும் 24 பெண்கள் மட்டுமே மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரே நேரத்தில் பெண் ஆளுநர்கள் பதவியில் இருந்ததும் மிகக் குறைவுதான். 1988-90-ம் ஆண்டு காலகட்டத்தில் குமுத்பென் ஜோஷி (ஆந்திரா), ராம் துள்ரி சின்ஹா (கேரளா), சரளா கிரிவால் (மத்திய பிரதேசம்) ஆகியோர் ஒரே நேரத்தில் பெண் ஆளுநர்களாக இருந்ததுதான் அதிகம் என்ற நிலை இருந்தது.

அந்தப் பெருமை 2009-10-ம் ஆண்டுவாக்கில் தகர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் ஆளுநர்கள் பதவியை அலங்கரித் தார்கள். பிரபா ராவ் (இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான்), மார்கரெட் ஆல்வா (உத்தர காண்ட்), கமலா பென்னிவால் (குஜராத்), ஊர்மிளா சிங் (இமாச்சலபிரதேசம்) ஆகிய நால்வர் இந்தக் காலகட்டத்தில்தான் ஆளுநர்களாக இருந்தார்கள்.

தற்போது முந்தைய சாதனையும் முறியடிக்கப்பட்டு விட்டது. மிருதுளா சின்ஹா (கோவா), திரவுபதி முர்மு (ஜார்கண்ட்), நஜ்மா ஹெப்துல்லா (மணிப்பூர்), ஆனந்திபென் பட்டேல் (உத்தரப்பிரதேசம்), பேபி ராணி மவுரியா (உத்தரகாண்ட்), அனுசுயா யுகே (சட்டீஸ்கர்), தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா) ஆகியோர் ஆளுநர் பதவியில் இருந்துவருகிறார்கள். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பணியாற்றிவருகிறார். ஒரே நேரத்தில் 7 ஆளுநர்கள், 1 துணை நிலை ஆளுநர் பதவியில் பெண்கள் இருப்பது சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறை.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது இரண்டாவது முறையாக நடந்திருக்கிறது. தமிழிசைக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஜோதி வெங்கடாச்சலம் 1977 அக்டோபர் முதல் 1982 அக்டோபர்வரை கேரள ஆளுநராக இருந்திருக்கிறார். இவர் பர்மாவில் பிறந்தவர். தமிழகத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். இவர் தேசிய கட்சியான காங்கிரஸைச் சேர்ந்தவர். அவருக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆளுநர் ஆகியிருக்கிறார்.

தெரியுமா?

# இமாச்சலப் பிரதேச மாநிலத்தில்தான் மிக அதிகமாக 4 முறை பெண் ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள். அடுத்ததாக ராஜஸ்தானில் 3 முறை பெண் ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள்.

# புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 முறை பெண் துணை நிலை ஆளுநர்கள் பதவி வகித்திருக்கிறார்கள்.

# தமிழகத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே பெண் ஆளுநராக இருந்திருக்கிறார். 1997-2001-ம் ஆண்டுவரை பதவி வகித்த அவர் ஃபாத்திமா பீவி. ஆளுநராக பதவியேற்ற முதல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் இவரே.

# இந்தியாவில் நீண்ட காலம் ஆளுநராக இருந்த பெண், பத்மஜா நாயுடு. 1956 நவம்பர் முதல் 1976 மே வரை மேற்கு வங்காள ஆளுநராக இவர் இருந்திருக்கிறார்.

# ஆளுநராக இருந்து குடியரசுத் தலைவரானவர், பிரதிபா பாட்டீல். குடியரசுத் தலைவர் பதவிக்கு இவருடைய பெயர் அறிவிக்கப்பட்டபோது ராஜஸ்தான் ஆளுநராக இருந்தார்.

- டி.கார்த்திக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x