Published : 17 Sep 2019 12:04 PM
Last Updated : 17 Sep 2019 12:04 PM

சேதி தெரியுமா? - ராம் ஜெத்மலானி மறைவு

செப்டம்பர் 8: மூத்த வழக்கறிஞர், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 95. ஆறு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், வாஜ்பாயி தலைமையிலான அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பதவிவகித்துள்ளார். நாட்டின் முன்னணி வழக்கறிஞராகத் திகழ்ந்த இவர், தன் எழுபது ஆண்டுகாலப் பணிவாழ்க்கையிலிருந்து 2017-ம் ஆண்டு ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.

நீலகிரி வரையாடுகள் 27% அதிகரிப்பு

செப்டம்பர் 9: தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகரி வரையாடுகளின் எண்ணிக்கை முக்கூர்த்தி தேசியப் பூங்காவில் மூன்று ஆண்டுகளில் 27 சதவீதம் அதிகரித்துள்ளன. 2018-ம் ஆண்டில் 568-ஆக இருந்த வரையாடுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 612-ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் வரையாடுகளில் எண்ணிக்கை இதுவரை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிரதமரின் முதன்மைச் செயலாளர்

செப்டம்பர் 11: பிரதமர் நரேந்திர மோடியின் புதிய முதன்மைச் செயலாளரராக பிரமோத் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மாதம் ராஜினாமா செய்ததால், புதிய முதன்மைச் செயலாளராக பிரமோத் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வாழ்க்கைத் திறன்கள் பாடத்திட்டம் அறிமுகம்

செப்டம்பர் 11: நாடு முழுவதும் உள்ள இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு ‘வாழ்க்கைத் திறன்கள்’ என்ற புதிய பாடத்திட்டத்தைப் பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களின் அறிவு, உணர்வு, தகவல் தொடர்பு, தலைமைப் பண்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தப் புதியப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மனிதவளத் துறையின் இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார்.

நீடித்த பொருளாதார மந்தநிலை தொடரும்

செப்டம்பர் 12: ஆபத்தான, நீடித்த பொருளாதார மந்தநிலையை நாடு எதிர்கொள்ளவிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்தப் பொருளாதார மந்தநிலையைச் சீர்படுத்த எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லையென்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். அத்துடன், ஆட்டோமொபைல் துறையில் நிலவும் மந்தநிலையைச் சரிசெய்ய உடனடி வரிச் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றால், பத்து லட்சம் பேர் வேலையிழக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகக் கணக்குகள், ஆதார் இணைப்பு?

செப்டம்பர் 12: சமூக ஊடகக் கணக்குகளை ஆதார் எண்களுடன் இணைப்பதைப் பற்றிய பிரச்சினையில் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, பம்பாய் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் இதுதொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றும்படி பேஸ்புக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதில் ஆட்சேபனையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பலவீனமாகும் பொருளாதார வளர்ச்சி

செப்டம்பர் 12: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலை எதிர்ப்பார்த்ததைவிட மிகவும் பலவீனமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. பெருநிறுவன, சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையில் நிலவும் நிச்சயமற்றத்தன்மை, சில வங்கி-சாரா நிதி நிறுவனங்களின் நீடித்த பலவீனம் ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பலவீனப்படுத்தியிருப்பதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வாழும் திறனுள்ள கோள் கண்டுப்பிடிப்பு

செப்டம்பர் 12: சூரிய மண்டல புறக்கோளான ‘கே2-18பி’யில், வாழ் வதற்கான அடிப்படை அம்சமான நீரும், பூமியில் நிலவும் தட்பவெப்பநிலையும் இருப்பதாக வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ‘நேச்சர் ஆஸ்ட்ரானமி’ என்ற இதழில் இதுதொடர்பான ஆய்வுகள் வெளியாகியுள்ளன. ‘கே2-18பி’ என்ற இந்தப் புறக்கோள் பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு

செப்டம்பர் 13: நடப்புக் கல்வியாண்டில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி என்ற கொள்கையை மாற்றி, தற்போது 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்று அறிவித்திருப்பது ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றி இந்த மாற்றத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

- தொகுப்பு: கனி

சேதி தெரியுமா, சென்ற வார செய்திகள், நாட்டுநடப்பு, பொது அறிவுத் தகவல், போட்டித் தேர்வு தயாரிப்பு,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x