Published : 17 Sep 2019 12:04 PM
Last Updated : 17 Sep 2019 12:04 PM

வேலை வேண்டுமா? - சிவில் நீதிபதி ஆகலாம்! 

தமிழகத்துக்கு உட்பட்ட நீதித்துறையில் 176 சிவில் நீதிபதி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.

இதற்குப் பணியில் உள்ள வழக்கறிஞர்களும் சட்டப் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். பணியில் உள்ளவர்கள் எனில் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணிஅனுபவம் அவசியம்.

தகுதி

சட்டப் பட்டதாரிகளாக இருந்தால் சட்டப் படிப்பைக் கடந்த 3 ஆண்டுகளில் முடித்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை, தற்போது நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவராக இருந்தால் குறைந்தபட்சம் 25 ஆகவும் அதிகபட்சம் 35 வரையிலும் இருக்கலாம்.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் (பி.சி., எம்.சி.பி., எஸ்.சி., எஸ்.டி.) எனில் வயது வரம்பு 40. புதிதாகச் சட்டப் படிப்பு முடித்தவர்களாக இருப்பின் வயது குறைந்தபட்சம் 22 ஆகவும் அதிகபட்சம் 27 வரையிலும் இருக்கலாம். இந்த வயது வரம்புத் தகுதி இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் உள்பட அனைத்துப் பிரிவினருக்கும் பொருந்தும்.

தேர்வுமுறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது.

முதல்நிலைத் தேர்வில் சட்டப் பாடத்தில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் தவறான பதிலுக்கு மைனஸ் மதிப்பெண் அளிக்கப்படும். ஒவ்வொரு தவறான விடைக்கும் கால் மதிப்பெண் குறைக்கப்படும். அதாவது 4 கேள்விகளுக்குத் தவறாக விடையளித்திருந்தால் 1 மதிப்பெண் கழிக்கப்படும். ‘ஒரு காலியிடத்துக்கு 10 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் முதல்நிலைத் தேர்வில் இருந்து மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவர்.

மெயின் தேர்வில் மொழிபெயர்ப்புத் தாள், சட்டம் தாள்-1, சட்டம் தாள்-2, சட்டம் தாள்-3 என மொத்தம் 4 தாள்கள் இருக்கும். மெயின் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 100 மதிப்பெண் வீதம் மொத்தம் 400 மதிப்பெண். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் வாய்மொழித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

இதற்கு 60 மதிப்பெண். இறுதியாக, மெயின் தேர்வு மதிப்பெண், வாய்மொழித் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் 176 பேர் சிவில் நீதிபதி பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர்.

உரிய கல்வித் தகுதியும் வயதுத் தகுதியும்

உடைய வழக்கறிஞர்களும் சட்டப் பட்டதாரிகளும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தைப் (tnpsc.gov.in) பயன்படுத்தி அக்டோபர் 9-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையம், தேர்வுக்குரிய பாடத்திட்டம் போன்ற விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

- ஜெ.கு.லிஸ்பன் குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x