Published : 10 Sep 2019 10:11 am

Updated : 10 Sep 2019 10:11 am

 

Published : 10 Sep 2019 10:11 AM
Last Updated : 10 Sep 2019 10:11 AM

முயற்சிக்கத் தவறலாமா?

fail-to-try

மாலன்

நல்ல பசி. எதிரே உணவை எடுத்து வைத்துப் பரிமாறியும் விட்டார்கள். பிசைந்து உருட்டி ஒரு கவளம் எடுத்து வாயருகே கொண்டு செல்லும்போது, என்ன நடந்தது என்று தெரியவில்லை. கவளம் கையிலிருந்து விழுந்து சிதறியது. மனது எப்படியிருக்கும்?

1975. பொங்கல் நேரம். கிளைவ் லாயிட், கிரீனிட்ஜ், ரிச்சர்ட்ஸ், காளி சரண், பாய்ஸ், ஆண்டி ராபர்ட்ஸ் உள்ளிட்ட ஜாம்பவான்கள் நிறைந்த, ‘உலகின் நம்பர் ஒன்’ என்று கொண்டாடப்படும் மேற்கிந்திய தீவுகளை எதிர்த்து இந்தியாவின் ஜி.ஆர். விஸ்வநாத் ஆடிக் கொண்டிருக்கிறார். அபாரமான ஆட்டம். 96 ரன் எடுத்துவிட்டார். ஓர் அசத்தலான ஸ்கொயர் கட். பந்து எல்லைக் கோட்டை நோக்கி விரைகிறது.

பாய்ஸ் மாதிரி ஒரு அபாரமான ஃபீல்டரைப் பார்க்க முடியாது. ஆனால், பாய்ஸ் என்ன அவர் அப்பா வந்தால்கூட இந்தப் பந்தைத் தடுக்க முடியாது என்று நினைத்து, விஷியின் செஞ்சுரியைக் கொண்டாட எழுந்து நிற்கிறோம். எங்கிருந்தோ வந்தார் பாய்ஸ். மீன் கொத்தி மீனை அள்ளுவதுபோலப் பந்தைப் பாய்ந்து எடுத்தார். விஷி ஓடுவதை நிறுத்தி விட்டார். (ஓடியிருந் தால் ரன் அவுட் ஆகி இருப்பார்.)

தவறியத் தருணம்!

அவரோடு ஜோடியாக ஆடிக் கொண்டிருந்தவர் கடைசி ஆட்டக்காரரான சந்திரசேகர். அவர் நல்ல பந்து வீச்சாளர். ஆனால், கடைசி பேட்ஸ்மென்களை மிரட்டியே அவுட் ஆக்கிவிடுவார்கள். ஆண்டி ராபர்ட்ஸ் பந்து வீசினார். மட்டையை மோசமாகச் சுழற்றி சந்திரசேகர் அவுட் ஆனார். அவ்வளவுதான், எல்லா விக்கெட்களும் விழுந்து விட்டதால் அந்த இன்னிங்ஸ் முடிந்து விட்டது. விஸ்வநாத்தின் செஞ்சுரி கனவு தகர்ந்தது. அதில் மனமொடிந்தது அவர் மட்டுமல்ல, நாங்களும்தான்.

வாய் அருகே வந்த கவளத்தைத் தவற விட்டபோது, விஷி செஞ்சுரியைத் தவறவிட்டபோது ஏற்பட்ட அதே விரக்தி, ஏமாற்றம், எனக்கு, செப்டம்பர் ஆறாம் தேதி பின்னிரவு, (12 மணி தாண்டிவிட்டதால் ஏழாம் தேதி அதிகாலை) விக்ரம் லாண்டர் நிலவில் தரையிறங்கத் தவறியபோது, மீண்டும் ஏற்பட்டது.
பூமிக்கும் நிலவுக்குமிடையே 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர். அவ்வளவு நெடிய தூரம் வெற்றிகரமாகப் பயணம் செய்து கடைசி 2 கிலோமீட்டரை அடையமுடியாமல் போனபோது, ராப்பகலாக உழைத்த அந்த விஞ்ஞானிகளுக்கு எப்படி இருந்திருக்கும்!

பிரதமர் மோடி மறுநாள் காலை எட்டு மணிக்கே இஸ்ரோ அலுவலகம் வந்து விஞ்ஞானிகளிடம் பேசினார். அவர், அவர்களுக்காக அல்ல, எனக்காக, என்னைப் போன்ற மனமொடிந்துபோன கோடிக் கணக்கான இந்தியர்களுக்காகப் பேசியது போலிருந்தது. “உங்களால் மன எழுட்சி பெற வந்திருக்கிறேன்” (I have come here to be inspired by all of you) என்றார். அந்த விஞ்ஞானிகளின் கடின உழைப்பைப் பாராட்டினார். நிலவில் நீர் இருக்கிறது என்பதை நாம்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்பதை நினைவுபடுத்தினார்.

செவ்வாய் கிரகத்தை நாம்தான் முதலில் சென்றடைந்தோம் என்பதைச் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் பெருமையை அயல்நாட்டினர் முன் நிலைநாட்டியவர்கள் நீங்கள் என்ற உண்மையை அங்கீகரித்தார். கலங்காதீர்கள், நாடு, நாட்டின் நூறு கோடி மக்கள், உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது, இருக்கிறோம் என்று சொன்னார். நேர்மறையான விஷயங்களைச் சொல்லிக்கொண்டே வந்தவர் முத்தாய்ப்பாக ஒன்றைச் சொன்னார். அட, ஆமால்ல, என்று மனம் நிமிர்ந்து உட்கார்ந்தது. அவர் சொன்னது: “அறிவியலில் வெற்றி தோல்வி என்று ஏதும் இல்லை. முயற்சி என்பதுதான் உண்டு”. உண்மைதானே?

எது வெற்றி, எது தோல்வி?

குகைக்குள் இருந்த மனிதனை நிலவுக்குக்கொண்டுபோனது முயற்சிதானே? அறிவியலில் மட்டுமல்ல, விளையாட்டிலும் அப்படித்தான். விஸ்வநாத் நூறு அடிக்க முடியாமல்போனது தோல்வியா அல்லது 96 அடித்தது வெற்றியா? அறிவியலில், விளையாட்டில் மட்டுமல்ல, இதழியலில், இலக்கியத்தில், சினிமாவில், கலையில், கல்வியில் ஏன் வணிகத்திலும்கூடக் கொண் டாடப்பட வேண்டியது முயற்சிதான்.+

இந்தியா தன் முயற்சியில் என்றும் தளர்ந்தது இல்லை. நாம் அணுகுண்டு வெடித்ததைக் காரணமாகச் சொல்லி சூப்பர் கம்ப்யூட்டர் வாங்குவதற்காகச் செய்திருந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. உலகம் நம்மை அப்போது ஒதுக்கி வைத்திருந்தது. நாமே நமக்கான சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அமெரிக்கா நமக்குக் கொடுப்பதாகச் சொன்னதை விட 28 மடங்கு கூடுதல் ஆற்றல் கொண்ட பரம் 8000 என்ற சூப்பர் கம்ப்யூட்டரை நாம் மூன்றாண்டுகளில் உருவாக்கினோம்.

முயற்சிகளைக் கொண்டாடுவோம்!

சந்திராயன்-2ம்கூட முயற்சிகளின் திரட்சிதான். சந்திரனின் தென் துருவத்தில் இறங்க யாரும் முயன்றதில்லை. ஆனால், நாம் அங்கு இறங்கலாம் என்று முடிவெடுத் தோம். சவால்களைக் கண்டு பின் வாங்காமல், அதை நாடிச் சென்று எதிர்கொள்வது நம் முயற்சிகளின் மீது நமக்கிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதானே.
பிரதமரின் உரையைக் கேட்ட விஞ்ஞானிகள் நெகிழ்ந்து போனார்கள். பிரதமரை வழியனுப்ப வந்தபோது இஸ்ரோ தலைவர் கண் கலங்கினார். பெரும் சாதனைகள் நிகழ்த்தப் போகிறோம் என்று நம்பிக்கையூட்டி ஏமாற்றிவிட்டோம் என்ற குற்ற உணர்வில் வந்த கண்ணீர் அல்ல அது. எங்களைப் புரிந்துகொண்டீர்களே, நன்றி என்ற நெகிழ்வில் வந்த நீர்ப் பெருக்கு அது.

சந்திராயன்-2 தோல்வி அல்ல. ஆர்பிட்டர் சுற்றி வருகிறது. சந்திரனின் மேல் பரப்பு பற்றிய தகவல்களையும் படங்களையும் அனுப்பி வருகிறது. விக்ரமைக் கண்டு பிடித்துவிட்டோம். அது அங்கேயேதான், இறங்கத் தீர்மானித்த இடத்திற்கு அருகில் 500 மீட்டர் தள்ளி விழுந்து கிடக்கிறது. அதனுடன் தகவல் தொடர்புகளை உயிர்ப்பிக்கலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொள்கிறார்கள். அது நடந்தால் மகிழ் வோம். இல்லையென்றால் இடிந்து போகமாட்டோம். அதன் பின் உள்ள முயற்சியைக் கொண்டாடுவோம்.

தமிழ் மனம் அப்படித்தான் கொண்டாடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கள் அய்யன் எங்களுக்குச் சொல்லித் தந்திருக் கிறான்: வலிவு மிகுந்த யானைக்குக் குறி வைத்து அந்தக் குறி தப்பினாலும் கூட, அது, வலிவற்ற முயலுக்குக் குறி வைத்து அதை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்பானது (“கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது”)
முயற்சிகள் தவறாலாம். ஆனால் முயற்சிக்கத் தவறலாமா?

கட்டுரையாளர்
தொடர்புக்கு: maalan@gmail.com


முயற்சிஉணவுதவறியத் தருணம்வெற்றிதோல்விமுயற்சிகள்சந்திரன்Chandrayan 2சந்திராயன்-2தமிழ் மனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author