செய்திப்பிரிவு

Published : 27 Aug 2019 11:24 am

Updated : : 27 Aug 2019 11:24 am

 

சைபர் சட்ட நிபுணர் ஆகலாம்

become-a-cyber-legal-expert

பவித்ரா

அரசு, வர்த்தகம், தனி வாழ்க்கை என அனைத்துத் தளங்களிலும் இணையப் பயன்பாடென்பது அத்தியாவசியமாகி உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அரசு நிறுவனங்களும் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் செய்திகளையும் தரவுகளையும் பாதுகாப்பதன் மூலமே குடிமக்கள், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறமுடியும். தகவல்கள், செய்திகள், தரவுகளைப் பாதுகாப்பதற்கான திறன்வாய்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் 10 லட்சம் பேர் இந்தியாவுக்குத் தேவை என்று நாஸ்காம் அறிக்கை கூறியுள்ளது.

தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர்கள் (நெட்வொர்க் அண்ட் சிஸ்டம்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ்), காவல்துறை, ராணுவத் துறை நிபுணர்கள், சட்ட அமலாக்க நிபுணர்கள், தகவல் தொழில்நுட்பத் தணிக்கையாளர்கள், இணைய வர்த்தகத் தள டெவலப்பர்கள், சைபர் குற்ற உளவாளிகள் எனப் பலவிதமான புலங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக் கான தேவைகள் உருவாகியுள்ளன.

செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்

செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்கள், தகவல் திருட்டு, சட்டவிரோதப் பிரதியெடுப்பு, அனுமதியில்லாமல் புகுவது போன்றவற்றைத் தடுப்பவர்கள். கணிப்பொறி வலைப்பின்னல்கள், மொபைல் கருவிகள், தகவல் அமைப்புகள், பணம் செலுத்தும் இணையவழிகள் போன்றவற்றைப் பாதுகாப்பதுதான் இவர்களின் வேலை.

செக்யூரிட்டி இன்ஜினீயர்


பாதுகாப்புப் பொறியாளர்கள் கணிப்பொறிப் பாதுகாப்பு அமைப்புகளைப் பிறர் அத்துமீறிப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான திட்டமிடுதல், அமலாக்கம், மேற்பார்வை, மேம்படுத்துதல் பணிகளைச் செய்வார்கள். இப்பணிக்கு மென்பொருள் அறிவு, வெப் டெவலப்மெண்ட், ஹார்டுவேர், நிரல் சேகரிப்புக் கருவிகளைப் பற்றித் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

கிரிப்டோகிராஃபர்

ரகசிய சமிக்ஞைகள் வழியாகத் தகவல்களைப் பரிமாறுவதற்கான முறையீடு செய்வதை என்கிரிப்ஷன் (encryption) என்று சொல்வார்கள். அப்படி என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவலை விடுவிப்பவரது பணியை டிகிரிப்ஷன் (decryption) என்பார்கள். இவர்கள் குற்றங்கள், இணையவழி அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் வரும் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு உதவுவார்கள். இணையத்தில் சேமிக்கப்படும் ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான நிரல்களை உருவாக்குவதிலும் கிரிப்டோகிராஃபர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள்.

செக்யூரிட்டி ஆர்க்கிடெக்ட்

பாதுகாப்புக் கட்டுமானப் பொறுப்பாளர் என்பவர்தான் சைபர் பாதுகாப்பு நடைமுறைகளை வடிவமைப்பது, சோதனை செய்வது, அமல்படுத்துவது ஆகிய பணிகளைச் செய்கிறார். பாதுகாப்புக் கட்டுமான பொறுப்பாளருக்குக் கணிப்பொறித் தொழில்நுட்பமும் நவீன இணையப் பாதுகாப்பு நடைமுறைகளும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப வலைப்பின்னலின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் அதைப் பயன்படுத்துபவர்களுக்கிடையே பாதுகாப்பு தொடர்பான புரிதலை உருவாக்குவதும் இவரது பணி.

சோர்ஸ் கோட் ஆடிட்டர்

சோர்ஸ் கோட் ஆடிட் எனப்படும் மூல நிரல் தணிக்கை என்பது நிரலாக்க அடிப்படையில் உள்ள பிழைகளையும், தவறு ஏற்படும் வழிகளையும் கண்டுபிடிப்பதற்கான நடைமுறையாகும். சி, சி பிளஸ் ப்ளஸ், ஜாவா போன்ற உயர் நிரலாக்க மொழிகளைக் கற்றவர் மட்டுமே இதில் நிபுணத்துவம் பெற முடியும்.

சைபர் சட்ட நிபுணர்செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்செக்யூரிட்டி இன்ஜினீயர்கிரிப்டோகிராஃபர்சோர்ஸ் கோட் ஆடிட்டர்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author