Published : 27 Aug 2019 11:09 am

Updated : 27 Aug 2019 11:09 am

 

Published : 27 Aug 2019 11:09 AM
Last Updated : 27 Aug 2019 11:09 AM

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

chandrayan-2

தொகுப்பு: கனி

நிலவின் படம் அனுப்பிய சந்திரயான் 2

ஆகஸ்ட் 22: சந்திரயான் 2 விண்கலம், எல்ஐ-4 கேமராவில் எடுத்த நிலவின் முதல் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்தப் படம் நிலவின் பரப்பிலிருந்து 2,650 கிலோமீட்டர் தொலைவில் எடுக்கப்பட்டுள்ளது. அப்போலோ, மேர் ஓரியண்டல் பள்ளத்தாக்குகள் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரிகின்றன. செப்டம்பர் 7 அன்று சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சல்ஃபர் டை ஆக்ஸைடு உமிழும்நாடு

ஆகஸ்ட் 19: உலக அளவில் சல்ஃபர் டை ஆக்ஸைடு வாயுவை அதிகமாக உமிழும் நாடாக இந்தியா இருப்பதாக ‘கிரீன்பீஸ்’ தன்னார்வச் சூழலியல் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலக்கரியை எரிப்பதால் இந்த வாயு அதிக அளவில் உமிழப்படுகிறது. காற்று மாசுபடுவதற்கு முக்கியக் காரணமாக சல்ஃபர் டை ஆக்ஸைடு இருக்கிறது. இந்தப் பட்டியலில், இரண்டாம் இடத்தில் ரஷ்யாவும், மூன்றாம் இடத்தில் சீனாவும் இருக்கின்றன.

புதிய பாதுகாப்புச் செயலாளர்

ஆகஸ்ட் 21: புதிய பாதுகாப்புச் செயலாளராக அஜய் குமாரை அமைச்சரவை நியமனங்கள் குழு, நியமித்திருக்கிறது. பாதுகாப்புச் செயலாளர் சஞ்சய் மித்ராவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 23 அன்று நிறைவடைந்ததால், புதிய பாதுகாப்புச் செயலாளராக அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அமைச்சரவைச் செயலாளராக ராஜிவ் கவுபா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர்கள் பயிற்சித் திட்டம் தொடக்கம்

ஆகஸ்ட் 21: உலகின் மிகப் பெரிய ஆசிரியர்கள் பயிற்சித் திட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ‘NISHTHA’ என்ற பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான முழு முன்னேற்றத் திட்டத்தை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தொடங்கிவைத்தார். இந்த ஆசிரியர் பயிற்சித் திட்டத்தில், நாடு முழுவதும் இருந்து 42 லட்சம் ஆசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.

காஷ்மீர்: எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டம்

ஆகஸ்ட் 22: காஷ்மீரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இயல்புநிலை திரும்பத் தகவல் தொடர்பு சேவையை முழுமையாக வழங்க வேண்டும், ஊடகத்தினரைத் தடைகளின்றி அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டப்பேரவை என்பது மன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் டெல்லியில் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். இந்தப் போராட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பன்னிரண்டு எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன.

விண்வெளிக்குச் சென்ற மனித ரோபோ

ஆகஸ்ட் 22: ரஷ்யா, விண்வெளிக்கு ஃபெடர் (Fedor-Final Experimental Demonstration Object Research) என்ற மனித ரோபோவை சோயுஸ் எம்எஸ்-14 விண்கலத்தில் கஜகஸ்தானிலிருந்து விண்ணில் செலுத்தியிருக்கிறது. இந்த மனித ரோபோ, 10 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்களுக்கு உதவுவதற்கான பயிற்சி பெறுவதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனித ரோபோ, 5’11 அடி உயரத்தில், 160 கிலோகிராம் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கைதாகிறார் ப.சிதம்பரம்?

ஆகஸ்ட் 23: ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைதுசெய்தது. அவர் மீது சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் ஆகிய இரண்டு அமைப்புகளும் வழக்குப் பதிவுசெய்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் அவருக்கான முன்ஜாமீன் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

அருண் ஜெட்லி காலமானார்

ஆகஸ்ட் 24: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 66. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில், 2014-2019 வரை நிதி அமைச்சராகப் பதவிவகித்திருக்திருக்கிறார். 2009-2014 வரை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் 1999-2004 வரை, வணிகம், சட்டம் ஆகிய துறைகளில் அமைச்சராகப் பதவிவகித்திருக்கிறார்.

உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பி.வி. சிந்து

ஆகஸ்ட் 25: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தித் தங்கம் வென்றார் பி.வி.சிந்து. இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பி.வி. சிந்து.

4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைதேர்தல்

ஆகஸ்ட் 25: தேர்தல் ஆணையம், உத்தரப் பிரதேசம் (ஹமீர்புர்), திரிபுரா (பாதர்காட்), சத்தீஸ்கர் (தண்டேவாடா), கேரளம் (பலா) ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 23 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 27 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


சேதி தெரியுமாசல்ஃபர் டை ஆக்ஸைடுபாதுகாப்புச் செயலாளர்சந்திரயான் 2ஆசிரியர்கள் பயிற்சித் திட்டம்தலைவர்கள் போராட்டம்மனித ரோபோவிண்வெளிப.சிதம்பரம்அருண் ஜெட்லிஉலக சாம்பியன்ஷிப்இடைதேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author