Published : 27 Aug 2019 10:39 AM
Last Updated : 27 Aug 2019 10:39 AM

ஆங்கிலம் அறிவோமே – 279: யாருக்குமே அறிவுரை பயன்படாது!

ஜி.எஸ்.எஸ்.

கேட்டாரே ஒரு கேள்வி

“Rebus புதிர்களமைந்த ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதில் “converse”, esrevnoc என்று போடப்பட்டிருந்தது. விடைகள் பக்கத்தைக் காணோம். விடை தெரியாமல் மண்டையே வெடித்துவிடும்போல இருக்கிறது. உதவுங்கள்’’.
நண்பரே, மண்டையைக் குணமாக்கிக்கொள்ள நீங்கள் எந்த ஒரு மருத்துவரையும் அணுக வேண்டாம். ஒரு சொல்லுக்கு இருவிதப் பயன்பாடுகளை மிக அழகாகக் கூறியிருக்கிறார்கள் அந்த ​நூலில்.

Converse என்றால் உரையாடுதல் என்று பொருள் உண்டு. அதை உணர்த்தும் வகையில் மேற்கோள் குறிகளுடன் “converse” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். Converse என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ஒன்றின் தலைகீழ் மாற்றம் என்று அதைத் தோராயமாகக் குறிப்பிடலாம். ‘He is happy but not rich’ is the converse of ‘He is rich but not happy’. Converse என்பதன் இந்தப் பொருளைக் குறிக்கும் வகையில் அந்தச் சொல்லை esrevnoc என்று தலைகீழாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உரையாடுதல் என்ற பொருளில் converse என்பதைப் பயன்படுத்தும்போது ‘கன்வெர்ஸ்’ என்றும், தலைகீழாக என்ற பொருளில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது “கான்வெர்ஸ்’’ என்றும் உச்சரிக்க வேண்டும்.

‘Let sleeping dogs lie என்ற பழமொழியின் பொருள் என்ன?’ என்று கேட்டிருக்கிறார் ஒரு நண்பர்.
எவை உணர்ச்சியைப் பொங்க வைக்கக்கூடிய விஷயங்களோ எவற்றைத் தொடுவதால் பிரச்சினைகள் வெடிக்குமோ, அவற்றையெல்லாம் கிளறக் கூடாது.

வேறு சில பொன்மொழிகளின் பொருள்களையும் தெரிந்துகொள்ளலாமே.
‘A ship with two captains sinks’ - ஒரு கப்பலுக்கு இரண்டு கேப்டன்கள் இருந்தால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரலாம். இருவரும் நேரெதிரான ஆணையை வெளியிட்டால் யார் கூறுவதைப் பின்பற்றுவது என்பதில் ஊழியர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு இரண்டையும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். இது அந்தக் கப்பல் ​மூழ்குவதற்கே வழிவகுக்கலாம்.
First deserve, then desire. முதலில் ஒன்றுக்கு நாம் தகுதியானவரா என்பதைப் பார்க்க வேண்டும். பிறகே அதற்கு ஆசைப்பட வேண்டும்.

Growing old is mandatory. Growing up? Definitely optional. Growing old என்பது ​மூப்படைவதையும், growing up என்பது வளர்ச்சி அடைவதையும் குறிக்​கின்றன. ஆக ஆண்டுகள் செல்லச் செல்ல ​மூப்படைவது இயல்பு. ஆனால், மனப்போக்கில் பக்குவமடைவது என்பது நம் கையில்தான் உள்ளது.

Wise men don’t need advice. Fools won’t take it. புத்திசாலிகளுக்கு அறிவுரை தேவையில்லை. முட்டாள்கள் அறிவுரையை ஏற்க மாட்டார்கள். எனவே, அறிவுரைகள் யாருக்கும் பயன்படப் போவதில்லை.
Diligence is the mother of good fortune - Diligence என்றால் விடாமுயற்சி. அதிர்ஷ்டம் என்று கருதப்படுபவை விடாமுயற்சியின் விளைவாகக் கிடைப்பதுதான்.

Except for poverty, incompatibility, opposition of parents, absence of love on one side and of desire to marry on both, nothing stands in the way of our happy union. – பொருளாதார ஏற்றத்தாழ்​வு, இணக்கமின்மை, பெற்றோரின் எதிர்ப்பு, ஒருதலைக்காதல் ஆகியவற்றைத் தவிர நாம் ஒன்றுசேர வேறெந்தத் தடையுமில்லை. (கூட்டாகச் செயல்படப் பல தடைகள் உள்ளன என்பதை நகைச்சுவையாக விளக்குகிறது இது).

“To crown it all” என்கிறார்களே அதற்கு என்னதான் அர்த்தம்?
வரிசையாகச் சிலவற்றைக் கூறிவிட்டு அவற்றில் கடைசியாக ஒன்றை அழுத்தந்திருத்தமாகக் கூற விரும்பினால் to crown it all என்பதைப் பயன்படுத்துவோம். It was midnight. It was raining heavily. There was a total power cut and to crown it all we had to walk home for two hours.

சிப்ஸ்

# கவசம் என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்லலாம்?

Armour அல்லது breastplate

# Running nose என்கிறார்களே மூக்கு ஓடுமா?

அழுக்கான பாதத்தை smelling feet என்கிறோமே. பாதம் வாசத்தை உணருமா?

# Dagger என்றாலும் Knife என்றாலும் ஒன்றுதானா?

Knife என்றால் கத்தி. இதன் முக்கிய நோக்கம் உயிரற்ற பொருள்களை வெட்டுவது. Dagger என்பது குறுவாள் அல்லது பட்டாக்கத்தி. இதன் முக்கிய​ நோக்கம் உயிருள்ளவர்களைக் குத்துவது.

(தொடர்புக்கு -
aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x