Published : 27 Aug 2019 10:33 AM
Last Updated : 27 Aug 2019 10:33 AM

இந்திய விடுதலைக்குக் காரணமான போர்

கோபால்

2-ம் உலகப் போர்: 80 ஆண்டுகள்

ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் படைகள் போலந்து மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் இரண்டாம் உலகப் போர் 1939 செப்டம்பர் 1 அன்று தொடங்கியது. 1945 செப்டம்பர் 2 வரை ஆறு ஆண்டுகளுக்கு இந்தப் போர் நீடித்தது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரு அணியாக இணைந்து போரிட்டன. அவை அச்சு நாடுகள் எனப்பட்டன.

எதிரணியில் பிரிட்டன், ஃபிரான்ஸ், ரோலாந்து (இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் போலந்து நாட்டின் பெயர்) ஆகிய நாடுகள் இருந்தன. இவை நேச நாடுகள் என்று அழைக்கப்பட்டன. பின்னர் சோவியத் ஒன்றியமும் (இன்றைய ரஷ்யா) ஜெர்மனிக்கு எதிராக நேச நாடுகளுடன் இணைந்தது. இந்தப் போரில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கானோர் பலியாயினர்.

இந்தப் போரில் பிரிட்டிஷ் பேரரசு இந்தியா உள்ளிட்ட தன் காலனி நாடுகளையும் டொமினியன்களையும் (பேரரசுக்குக் கீழ்ப்படிந்த தன்னாட்சி அதிகாரம் பெற்ற நாடுகள்) ஈடுபடுத்தியது. பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலைக்கான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த நிலையில், இந்தியர்கள் பலர் இந்தப் பொரில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பிரிட்டிஷ் அரசுக்காகப் போரிட்ட இந்தியர்கள்

போருக்குப் பிறகாவது இந்தியாவுக்கு விடுதலை அளிக்கப்படும் என்ற திட்டவட்டமான வாக்குறுதியை பிரிட்டிஷ் அரசு அளிக்க மறுத்ததால், இரண்டாம் உலகப் போரில் இந்தியா ஈடுபட காங்கிரஸ் கட்சி சம்மதிக்கவில்லை. மாறாக 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு இயக்க'த்தை நடத்தி முக்கியத் தலைவர்களும் லட்சக்கணக்கான தொண்டர்களும் கைதாயினர். அனைவரும் 1945-ல் போர் முடிந்த பிறகே விடுவிக்கப்பட்டனர்.

மறுபுறம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரிக்காத முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் போர் சார்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவளித்தன. இது தவிர பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் நேச நாடுகளுக்கு ஆதரவாகப் போர்க்களம் புகுந்தனர். மொத்தம் 25 லட்சம் இந்தியர்கள் இரண்டாம் உலகப் போரில் படைவீரர்களாகப் பங்கேற்றதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

போரைப் பயன்படுத்திய போஸின் வியூகம்

முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசை வெளியேற்ற அகிம்சைப் போராட்டம் பயனளிக்காது என்று கருதினார். இதையடுத்து காங்கிரஸிலிருந்து அவர் வெளியேறியிருந்தார். இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசை நீக்குவதற்கான வாய்ப்பாக இரண்டாம் உலகப் போரை அவர் பயன்படுத்த முயன்றார்.

அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பானின் ஆதரவுடன் அவர் கட்டமைத்த 'இந்திய தேசிய ராணுவம்' எண்ணற்ற இந்தியர்களை உள்ளடக்கியிருந்தது. அச்சு நாடுகளுக்கு ஆதரவாகக் களம் கண்டது.
பர்மாவைக் (இன்றைய மியான்மர்) கைப்பற்றியிருந்த ஜப்பான் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை நோக்கி முன்னேறியது. 1944-ல் இம்பால், கோஹிமா உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளின் வழியாக இந்திய தேசிய ராணுவத்தின் துணையுடன் ஊடுருவ முயன்ற ஜப்பான் படைகளை பிரிட்டிஷ் இந்திய ராணுவம் தடுத்துவிட்டது.

வரலாற்றை மாற்றிய இந்தியர்களின் தியாகம்

ஜப்பானுக்கு எதிராகத் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் பிரிட்டிஷ் அரசுக்காகப் போரிட்ட இந்தியர் வீரர்கள் 36,000 பேர் பலியாகினர். 34,000 பேர் படுகாயமடைந்தனர். 67,000 பேர் போர்க் கைதிகளாயினர். இந்திய வீரர்களின் இந்த தியாகம் நிகழ்ந்திருக்கவில்லை என்றால், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் பல நாடுகளை ஜப்பான் கைப்பற்றியிருக்கும். அந்த நாடுகளில் போருக்குப் பிந்தைய அரசியல் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும்

ஆயுதங்களுக்கு அப்பால்

போர் என்பது களம் காணும் வீரர்களுடன் சுருங்கிவிடுவதில்லை, போர்க் களத்தில் காயமடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, படைகள் பயணிப்பதற்கான சாலைகளை அமைப்பது, போர்வீரர்களுக்கும் கைதிகளுக்கும் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அளிப்பது ஆகிய பணிகளிலும் இந்தியர்கள் பேரளவில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பிரிட்டிஷ் போர் வீரர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ராஞ்சியில் போர்க்கைதிகளைத் தங்கவைப்பதற்கான முகாம் செயல்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பங்களித்த போர் 1940-1943-ல் வங்கப் பகுதி பஞ்சத்தில் அடிபட்டது. அப்போது வங்கத்திலிருந்து உணவு ஏற்றுமதியை நிறுத்திவைக்க வேண்டும் என்ற இந்தியர்களின் கோரிக்கையை பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் நிராகரித்தார். இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டினியால் பலியாயினர். இந்திய விடுதலைக்கான தேசியவாதிகளின் கோரிக்கையை இது தீவிரப்படுத்தியது.

மறுபுறம் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் பேரரசின் நிதிநிலைமை கிட்டத்தட்ட திவாலாகும் நிலையை அடைந்திருந்தது. இந்திய தேசிய ராணுவத்திடம் கிட்டத்தட்ட தோல்வி அடைந்ததும் ஜப்பானுடனான போரால் ஏற்பட்ட இழப்புகளும் பிரிட்டிஷ் படைகள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இதனால் பிரிட்டிஷ் பேரரசு தன் காலனிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x