Published : 13 Aug 2019 12:47 PM
Last Updated : 13 Aug 2019 12:47 PM

அந்த நாள் 45: நாயக்கர் வீழ்ச்சியும் பிரிட்டிஷ் எழுச்சியும்

ஆதி வள்ளியப்பன்

“மக்களுக்குச் செய்த நற்பணிகளால் ராணி மங்கம்மாள் பிரபலமாகியிருந்தாலும், கணவர் சொக்கநாதரைப் போலவே மங்கம்மாளுக்கும் மற்ற பகுதிகள்லேர்ந்து வந்த நெருக்கடிகள் அதிகமாகவே இருந்துச்சு. ஆனா, பல போர்கள்ல அவர் வெற்றிபெற்றார். அந்தக் காலத்துல வலிமையான வட இந்திய அரசரா முகலாய மன்னர் ஔரங்கசீப் இருந்தார். தென்னிந்தியாவரை அவருடைய கவனம் நீண்டதால், மதுரைப் பகுதியை ஆள்வதற்கு திறை (வரி) செலுத்தி மங்கம்மாள் ஆட்சியைத் தக்கவெச்சுக்கிட்டார்.”

“கடைசியா முகலாயர்களின் கவனம் தென்னிந்தியா மேலயும் திரும்பிடுச்சா?”
“ஆமா, ஆனா ஔரங்கசீப்தான் முகலாயர்களில் வலிமையா திகழ்ந்த கடைசி மன்னர். அவருக்கு வரி செலுத்தியதால், மதுரை நாயக்கர்கள் ஏற்கெனவே இழந்திருந்த சில பகுதிகளை மங்கம்மாள் போரிட்டு மீட்டுக்கிட்டார்.”
“அவரே போர்க்களங்களுக்குப் போனாரா?”
“அது பத்தி ஆதாரபூர்வமா சொல்ல முடியல. ஆனா, எல்லா போர்கள்லயும் அவர் சார்பா தலைமை வகிச்சு தளபதி நரசப்பய்யா போனதை உறுதியாச் சொல்ல முடியும்.”
“ஆட்சி நிர்வாகத்துக்கு அரசர்கள்னா, போர்களுக்குத் தளபதிகள்தான் முக்கியம், இல்லயா?”
“மங்கம்மாளை குறைச்சு மதிப்பிட்ட மைசூரு மன்னர் சிக்கதேவராயர் திருச்சியைக் கைப்பற்ற படையை அனுப்பினார். சிக்கதேவராயரின் கணக்கு வேற வகையில தப்பாகிடுச்சு. அதே நேரத்திலேயே, மைசூருவை நோக்கி மராட்டியர்கள் படை திரட்டி வந்துக்கிட்டிருந்தாங்க. இதனால, திருச்சியைக் கைப்பற்றும் எண்ணத்தைக் கைவிட்டு, மைசூரு படை தாய்நாட்டைக் காக்கத் திரும்பிடுச்சு.

வடமேற்குலேர்ந்து இப்படின்னா, பக்கத்திலேயே இருந்த தஞ்சை மராட்டிய மன்னர் ஷாஜியோட ஆட்கள் திருச்சிப் பகுதியில் கொள்ளையடிக்கிற வேலைகள்ல ஈடுபட்டாங்க. இதைக் கட்டுப்படுத்தவும் தளபதி நரசப்பய்யாவைத்தான் மங்கம்மாள் அனுப்பினார். நரசப்பய்யாவாலயும் கொள்ளையைத் தடுக்க முடியால.
முள்ளை முள்ளால்தானே எடுக்க முடியும்? கொள்ளிடம் ஆத்துல வெள்ளம் குறைஞ்சப்போ தனது படைவீரர்களுடன் சென்று தஞ்சையில் கொள்ளையடிக்க முற்பட்டார் நரசப்பய்யா. இதை அறிஞ்ச தஞ்சை முதலமைச்சர் பாலோஜி, கொள்ளையைத் தடுக்குறதுக்காக நரசப்பய்யாவுக்குப் பணம் கொடுத்து ஒப்பந்தம் செஞ்சுக்கிட்டார்."
“இப்படி ரெண்டு ஆபத்துகளையும் மங்கம்மாள் வெற்றிகரமா சமாளிச்சிட்டார். போர் ஆபத்துகள் இத்தோட முடிஞ்சிடுச்சா?”
“இல்ல. திருவாங்கூரை ஆண்டுவந்த ரவிவர்மன், மதுரை நாயக்கர்களுக்குச் செலுத்திவந்த திறைப் பணத்தை நிறுத்திட்டார். இதனால திருவாங்கூர் மீது போர் தொடுத்துச் சென்ற நரசப்பய்யா வென்று திரும்பினார். அப்புறம் மேலேர்ந்து மைசூரு படை வந்த மாதிரியே இன்னொரு ஆபத்து கீழேர்ந்தும் வந்துச்சு.”
“அது என்ன?”


“மங்கம்மாள் திருச்சியில ஆண்டுகிட்டிருந்த காலத்துல ராமநாதபுரம் கிழவன் சேதுபதி என்ற ரகுநாதர் மதுரையைக் கைப்பற்றிட்டார். இதையடுத்து மங்கம்மாள் அனுப்புன நரசப்பய்யா தலைமையிலான படை சேதுபதியை வீழ்த்தி, ராமநாதபுரத்துக்கே விரட்டி அடிச்சிடுச்சு. அதுக்குப் பின்னாடி தஞ்சை மன்னன் ஷாஜியோட சேர்ந்துகிட்ட சேதுபதி, பொ.ஆ. 1702-ல் மீண்டும் போர் தொடுத்துவந்தார். இந்தப் போர்ல நரசப்பய்யா கொல்லப்பட்டு, மதுரைப் படை தோல்வியடைஞ்சது. சேதுபதியால மதுரையைக் கைப்பற்ற முடியலேன்னாலும், சேதுநாடு தனி உரிமை பெற்றதா மாறிடுச்சு.”
“நரசப்பய்யா இல்லாமப் போனது, மங்கம்மாளுக்குப் பின்னடைவு தானே.”
“ஆமா, அடுத்த சில ஆண்டுகள்லயே மங்கம்மாளும் காலமானார். 1706-ல பேரன் விஜயரங்க சொக்கநாதரே 17 வயசுல ஆட்சிக்கு வந்திட்டார். 1732 வரை அவரோட ஆட்சி நடைபெற்றுச்சு. விஜயரங்க சொக்கநாதருக்கு வாரிசு இல்ல.”
“அப்ப அவருக்குப் பின்னாடி யாரு ஆட்சிக்கு வந்தா?”
“மங்கம்மாள் மாதிரியே விஜயரங்க சொக்கநாதரின் மனைவி மீனாட்சி, தத்துப்பிள்ளை சார்பா ஆட்சிக்கு வந்தாங்க.”
“ஓ! இவங்கதான் நீ முன்னாடி சொன்ன ரெண்டு பெண் ராணிகள்ல இன்னொருத்தரா, குழலி?”
“ஆமா. ஆனா மங்கம்மாள் அளவுக்கு ஆட்சி நிர்வாகத்துல மீனாட்சிக்குத் திறமை பத்தல. முகலாயத் தளபதிகள்ல ஒருத்தரா இருந்த சந்தா சாகிப் முதல்ல பணம் வாங்கிக்கிட்டு ராணி
மீனாட்சியோட ஒப்பந்தம் செஞ்சுக்கிட்டார். ஆனா, ரெண்டு வருசத்துக்குப் பின்னாடி திருச்சி கோட்டைக்குள்ள நுழைஞ்சு, அவரே ஆட்சியைக் கைப்பற்றினார். சந்தா சாகிப்பிடமிருந்து இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதன் மூலம் தமிழகத்துல முதன்முதலாவும், அங்க தொடங்கி தென்னிந்தியா முழுசையும் பிரிட்டிஷார் தங்களோட கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டுவந்துட்டாங்க, செழியன்.”

மத நல்லிணக்கம்

மதுரை நாயக்க ஆட்சிப் பகுதிகளுக்கு அருகிலிருந்த மறவர் நாடும் தஞ்சையும் கிறிஸ்தவ மதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. ஆனால், அதேநேரம் கிறிஸ்தவ மதத்தைப் போதித்தவர்கள், தழுவியவர்களுக்கு மங்கம்மாள் பாதுகாப்பு அளித்தார். முஸ்லிம்களின் பள்ளிவாசல், தர்கா கட்டுவதற்கு மங்கம்மாள் நிலமும் வழங்கியுள்ளார்.

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக் கான வரலாற்றுப் பகுதி, பள்ளி வரலாற்றுப் பாடம்

கட்டுரையாளர்
தொடர்புக்கு:
valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x