Published : 06 Aug 2019 10:55 AM
Last Updated : 06 Aug 2019 10:55 AM

போட்டித் தேர்வு: தோல்வியிலும் வெற்றி கண்ட போராட்டம் 

கோபால் 

இந்திய விடுதலைப் போராட்டம் 200 ஆண்டு வரலாற்றைக் கொண்டது.  1947 ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேய அரசிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றது, அந்தப் போராட்டத்தின் இறுதிக் கட்டம். அதற்கு ஆங்கிலேய அரசை உந்தித் தள்ளிய போராட்டமாக 1942-ல் நடைபெற்ற ‘வெள்ளை யனே வெளியேறு இயக்கம்’ அமைந்தது. 

ஆங்கிலேய அரசு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருந்த ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ 1942 ஆகஸ்ட் 8 அன்று மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது. அதனால் இது  ‘ஆகஸ்ட் இயக்கம்’ என்றும் அழைக்கப்பட்டது.  

போரில் ஈடுபட மறுத்த இந்தியா 

1939 முதல் 1945வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இதில் பிரிட்டனும் ஜெர்மனியும் எதிரெதிர் அணிகளில் இருந்தன. ஜெர்மனிக்கு எதிரான போரில் இந்தியாவும் ஈடுபட்டிருப்பதாக, இந்தியாவுக்கான வைஸ்ராய் லின்லித்கோ பிரபு அறிவித்தார். 1939-ல் வார்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ஜெர்மனி, இத்தாலி போன்ற பாசிச அரசுகளை இந்தியா எதிர்த்தாலும், ஆங்கிலேய அரசின் அடிமை நாடாக போரில் இந்தியா கலந்துகொள்ள முடியாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   

இதையடுத்து இந்தியா போரில் ஈடுபடக் கோரி, சில வாக்குறுதிகளுடன்கூடிய ஓர் அறிக்கையை வைஸ்ராய் வெளியிட்டார். அதில் போர் முடிந்த பிறகு இந்தியாவுக்கு விடுதலை அளிக்கப்படும் என்பதற்கான எந்த வாக்குறுதியும் இல்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மாநில அரசுகளில் பொறுப்பு வகித்துவந்த காங்கிரஸ்காரர்கள் பதவி விலகத் தொடங்கினார்கள். 

ஜப்பானின் ஆதிக்கமும் கிரிப்ஸ் குழுவின் தோல்வியும் 

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் அரசுக்கான நெருக்கடிகள் அதிகரித்தன. எதிரணியிலிருந்த ஜப்பான் ஆசிய நாடுகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றியபடியே இந்தியாவையும் நெருங்கிக்கொண்டிருந்தது.  பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், 1942 மார்ச் மாதம், ஸ்டஃபோர்ட் கிரிப்ஸ் என்பவரின் தலைமையிலான குழுவை  இந்தியாவுக்கு அனுப்பினார்.  

இந்தியாவைப் போரில் ஈடுபட வைப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் கிரிப்ஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. போர் முடிந்த பிறகு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து (பிரித்தானிய அரசரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட தன்னாட்சி பெற்ற நாடு), அரசியல் சாசனத்தை இந்தியாவே உருவாக்கிக்கொள்வதற்கான உரிமை, மன்னர்களால் ஆளப்பட்டு வந்த மாநில அரசுகள் தனி நாடுகளாகப் பிரிந்து செல்வதற்கான உரிமை ஆகிய வாக்குறுதிகளை கிரிப்ஸ் குழு அளித்தது. ஆனால்,  இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் ஏற்கவில்லை, முழு சுயாட்சியையே எதிர்பார்த்தது. எனவே, கிரிப்ஸ் குழுவின் முயற்சி தோல்வி அடைந்தது.  

‘செய் அல்லது செத்துமடி’ 

இதைத் தொடர்ந்து முழு விடுதலைக்கான குரல் வலுவடைந்தது. ஆங்கிலேய அரசை வெளியேற்றுவதற்காக  அகிம்சை வழியில் மாபெரும் மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க காந்தி திட்டமிட்டார்.  1942 ஜூலை 14 அன்று வார்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 8 அன்று மும்பையில் நடைபெற்ற பொதுக்குழு, இந்தத் தீர்மானத்துக்கு முழு ஆதரவு அளித்து, இதற்காக அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்தது.  அந்தக் கூட்டத்தில் பேசிய காந்தி 'செய் அல்லது செத்துமடி' என்று முழக்கத்தை முன்வைத்தார்.  

ஆகஸ்ட் 9 அன்று காந்தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரை ஆங்கிலேய அரசு கைதுசெய்தது.  ஆகஸ்ட் 11-க்குள் காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பலர் 1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகுதான் விடுவிக்கப்பட்டார்கள். 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சிறையிலும் போராட்டத்தைத் தொடர்ந்த  காந்தி,   மோசமான உடல்நிலை காரணமாக 1944-ல் விடுவிக்கப்பட்டார்.  

முஸ்லிம் லீக், இந்து மகாசபை உள்ளிட்ட கட்சிகள் 'வெள்ளையனே வெளியேறு இயக்க'த்தை எதிர்த்தன.  காங்கிரஸுக்குள்ளேயும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இருந்தாலும், போராட்டம் பல பகுதிகளில் தீவிரமாக நடைபெற்றது.  நகரங்களில் தொடங்கிய போராட்டம், கிராமங்களுக்கும் பரவியது.  உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் சில கிராமங்களில் தன்னாட்சி அரசுகள் நியமிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் ஆங்கிலேய அரசின் வன்முறைக்குப் பலியாயினர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டார்கள். 

போராட்டத்தின் விளைவு 

‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவில்லை. ஆனால், ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்திய மக்களை ஒன்றுதிரட்டியதிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான நிர்பந்தத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியதிலும், அந்த இயக்கத் துக்குப் பெரும் பங்கு உண்டு. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x