Published : 30 Jul 2019 10:52 AM
Last Updated : 30 Jul 2019 10:52 AM

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019: சிறப்புக் குழந்தைகளுக்கான இடம் எங்கே?

உலக மக்கள்தொகையில் சுமார் 15 சதவீதத்தினர் மாற்றுத்திறனாளிகள் என்று உலக சுகாதார அமைப்பும் உலக வங்கியும் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் 45 சதவீதத்தினர் படிப்பறிவற்றவர்கள். ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் சிறப்புக் குழந்தைகளிலும் 48 சதவீதத்தினர் எட்டாம் வகுப்பைத் தாண்ட முடிவதில்லை. எஞ்சியுள்ளவர்களில் மேல்நிலைக் கல்வி பெறுபவர்கள் 23 சதவீதத்தினர் மட்டுமே.

ஒவ்வோர் ஆண்டும் தொடக்கப் பள்ளியில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் சேர்க்கை எண்ணிக்கை குறைவதாகவும், உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்படுவதாகவும் யுனெஸ்கோ தெரிவிக்கிறது. இதற்கு வீடு, பள்ளி, சமூகம் எனப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் எல்லாவிதமான தடை களையும் தாண்டி நூறு சதவீதம் கல்வியறிவை எட்டச் செய்ய வேண்டி யது அரசின் கடமை என்கிறது இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.

பழசு புதிதாகுமா?

இந்தப் பின்னணியில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவில் இடம்பெற்றுள்ள ‘சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் கல்வி’ என்ற பிரிவை மேலோட்டமாகப் பார்த்தால், அனைத்தும் சிறப்பாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ல் உள்ள பல அம்சங்களே இப்போது புதிய தேசிய கல்விக் கொள்கையில் தரப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு, பள்ளியில் தடையற்ற சூழல், கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும்படியான கழிவறைகள் எல்லாப் பள்ளிகளிலும், அரசுக் கட்டிடங்களிலும் இருக்க வேண்டும். சிறப்புக் குழந்தை களுக்குத் தேவையான குறிப்பிட்ட கற்றல் கருவிகள் எல்லாப் பள்ளிகளிலும் இருப்பது உறுதி செய்யப்படும் எனப் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளவை யாவும் 2016-லேயே சட்டமாக்கப்பட்டுவிட்டன. தமிழ்நாடு அரசு 2018 ஜூலை மாதம் இதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டுவிட்டது. ஆனால், நடைமுறைப்படுத்த காலக்கெடு ஏதும் அளிக்கப்படாததால், இன்றுவரை பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சிறப்பு ஏற்பாடுகள் எங்கே?

இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் நாடு முழுவதும் இந்தி ஆசிரியர்களின் நியமனத்துக்கென ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறப்புக் குழந்தைகளின் கல்விக்காகப் பணம் ஏதும் ஒதுக்கப்பட்டுள்ளதா, இல்லையெனில் வரைவில் கூறப்பட்டுள்ளவை எப்படி நடைமுறைக்கு வரும்?


மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் அருகில் உள்ள வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் பார்வை சவால் உள்ள மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் தேவைக்கு ஏற்றாற்போல பெரிய எழுத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அல்லது பிரெய்லி புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் புதிய கல்விக் கொள்கை வரைவில் கூறப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அந்தப் பள்ளிகளில் உள்ள சராசரி ஆசிரியர்களுக்கு பிரெய்லி முறையில் கற்பிக்கத் தெரியுமா, அவர்களுக்கு அத்தகைய பயிற்சி அளிக்கப்படுமா?

தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் சிறப்புக் குழந்தை களுக்கென உள்ள நவீனக் கணினிச் செயலிகளைக்கொண்டு கற்பிப்பது குறித்து அரசு ஏன் சிந்திக்கவில்லை? காது கேளாத சிறப்புக் குழந்தை களுக்கு சைகை மொழியில் கற்பிக்க வகை செய்யப்படும் என்கிறார்கள். உள்ளடங்கிய கல்வியில் பிற குழந்தைகளுடன் இவர்களை இணைத்துக்கொண்டு கற்பிக்கையில் ஆசிரியர்கள் இவர்களுக்கென சைகை மொழியில் தனியாக எப்படிக் கற்பிப்பார்கள்?, இதற்கு ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுமா?

வழக்கமான பள்ளிகளில் சிறப்புக் குழந்தைகள் மனிதநேயத்துடன் நடத்தப்படுவதை உறுதிசெய்ய மாவட்ட, மாநில அளவில் தகுதிவாய்ந்த பிரதிநிதிகள் நியமிக்கப் பட்டு ஆய்வுகள் நடத்தப்படுமா? ஆதார வள மையங்களில் பதினைந்து பள்ளிகளுக்கு ஒரு சிறப்பாசிரியர் மட்டும்தான் உள்ளார். இதனால் அப்பள்ளிகளைப் பார்வையிட்டு ஆவணங்களைப் பராமரிக்க மட்டுமே நேரம் உள்ளது. பள்ளி தோறும் ஒரு சிறப்பாசிரியராவது நியமிக்கப் பட்டாலன்றி இந்தத் திட்டம் முழுமை பெறாது.

பாடத்திட்டத்தில் மாற்றம் அவசியம்

மனவளர்ச்சியற்ற குழந்தைகள், ஆட்டிசக் குழந்தைகளுக்கு நடத்தை தொடர்பான பிரச்சினைகளும் இருப்பதால் மனநல ஆலோசகர்களின் உதவியும் தேவை. பல சிறப்புக் குழந்தைகளுக்கு பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பேச்சுப் பயிற்சி போன்றவையும் தேவைப் படுவதால் அத்தகைய நிபுணர்களும் தேவையான எண்ணிக்கையில் பணியமர்த்தப் பட்டால்தானே இவர்களுக்கு அளிக்கப்படுவது முழுமையான கல்வியாக இருக்கும்!

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் சிறப்புக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கத் தேவையான பயிற்சிகள் பாடத்திட்டத்துடனே இணைக்கப்பட வேண்டும். குழந்தைகளின் குறைபாட்டுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டம், தேர்வு முறைகள், மதிப்பீட்டு முறைகளில் நெகிழ்வுத்தன்மை தேவை.

சவாலுக்கு மேல் சவால்

தனியே வெளியில் செல்ல இயலாத பல சிறப்புக் குழந்தைகளுக்குப் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உதவி தேவைப்படுகிறது. இதுவே பெருத்த சவால் என்றால் 3, 5, 8 வகுப்புகளில் பொதுத் தேர்வு, 9-ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர் பொதுத் தேர்வுகள் என எட்டுப் பொதுத் தேர்வுகளும் அதற்குப் பிறகு தகுதித் தேர்வு என்பதும் இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்பதால் உயர்கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடுமல்லவா?

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி பலவகையில் நன்மை தரும் என்றாலும், இதுவரை பெரிதாகச் சாதித்துள்ள மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளிகளில் படித்தவர்களாகவே உள்ளனர். மற்ற குழந்தைகளுடன் வழக்கமான பள்ளிகளில் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியில் படித்த மாற்றுத்திறனாளிகள் (சிறப்புத் தேவை உடையோர், பார்வை அற்றோர், காது கேளாதோர், ஆட்டிசக் குறைபாடு உள்ளோர்) பெரிதாகச் சாதித்துள்ளனரா, இது குறித்த ஆராய்ச்சி ஏதும் உண்டா?

புதிய வழி உண்டா?

சிறப்புக் குழந்தைகள் NIOS திட்டத்தில் பயில வசதி செய்யப்படும் என்கிறது தேசியக் கல்விக் கொள்கை. மாநில அரசு தரும் சலுகைகளால் இரண்டாம் மொழி விலக்கு பெற்று 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு அணுகும்போது கல்வி நிறுவனங்கள் இவர்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை இச்சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமே அறிவார்கள். 

வழக்கமான பள்ளியில் படித்து வெறும் இரண்டாம் மொழி விலக்கு பெற்றவர்களுக்கே இந்தக் கதி என்றால் NIOS- ல் படித்து வருபவர்கள் மீதான பள்ளிகளின் கண்ணோட்டம் மாற ஆவன செய்யப்படுமா?

தானே எழுத இயலாத சிறப்புக் குழந்தைகளுக்குக் கல்வித்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு ஸ்கிரைபாக வருபவர்கள் குழந்தை சொல்வதைப் புரிந்துகொண்டு சரியாக எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. ஸ்க்ரைப் தேர்வு செய்யும் உரிமையை குழந்தைக்கோ குழந்தையின் பெற்றோருக்கோ தந்தால் குழந்தையின் மொழியை அவர்களால் எளிதில் புரிந்துகொண்டு தேர்வெழுத முடியும். இதில் முறைகேடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது தேர்வு கண்காணிப்பாளரின் கடமை அல்லவா?

இச்சிறப்புக் குழந்தைகள் தொடக்கக் கல்வி நிலையில் தனியார் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், 10-ம் அரசுத் தேர்வு முடிவு பாதிக்கப்படும் என எட்டாம் வகுப்பில் வடிகட்டப்பட்டு பள்ளி மாற்றுச் சான்றிதழ் கொடுக்கப் படுகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு என்ன வழி செய்யப்போகிறது?

மொத்தத்தில் தேசிய கல்விக் கொள்கை வரைவு சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி குறித்த பல விடைகளற்ற குழப்பமான கேள்விகளை நம் முன்வைத்துள்ளது. சிறப்புக் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி என்பது வெறும் சாய்வுதளம், கழிவறை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, முன்பருவ மழலைக் கல்வி தொடங்கி உயர்கல்விவரை பல சவால்கள் நிறைந்தது. முழுமையான, தரமான கல்வி மட்டுமே இக்குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஒளிகூட்டுவதாக இருக்கும் என்பதால், தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடங்கி எல்லா மட்டங்களிலும் இது குறித்த சிறப்புக் கவனம் அவசியம் .

- பிரியசகி, எழுத்தாளர், நிறைவகம், டான்போஸ்கோ 
உளவியல் நிறுவனம், சென்னை.
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x