Published : 30 Jul 2019 10:52 am

Updated : 31 Jul 2019 10:45 am

 

Published : 30 Jul 2019 10:52 AM
Last Updated : 31 Jul 2019 10:45 AM

கரும்பலகைக்கு அப்பால் 27: கடிதம் விடு தூது! 

short-film-introduction

படிக்கும் காலத்தில் பாடங்களை எழுதுவதில் நிறைய நேரமும் தாள்களும் கழிகின்றன. அது பெரும்பாலும் பார்த்து எழுதுவதாகவே இருக்கிறது. பார்க்காமல் எழுதுவது மனப்பாடம் செய்ததை அப்படியே மனத்திலிருந்து தாளுக்கு மாற்றுவதாகவே இருக்கிறது. கட்டுரைப் பயிற்சி என்பது ஆசிரியர் எழுதிப்போடுவதை அப்படியே நகலெடுப்பதாகவே பெரும்பாலும் இருக்கிறது.

தகவல் சார்ந்த பாடங்களைப்போலவே தாய்மொழிப் பாடத்தையும் மனப்பாடமாகவே ஆக்கிவைத்திருக்கிறோம். எனவேதான் சொந்தமாக எழுதுவதற்காக நாட்குறிப்பு எழுதுதல் போன்ற பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறோம். இருப்பினும், படிப்பு முடிந்தபின் ஒரு நாளுக்கு எத்தனை வார்த்தைகள் எழுதுகிறோம் என்ற கேள்வி சமீப காலமாக மனத்துள் எழுந்தது. இப்படியான பல்வேறு எண்ணங்களுடன் ஒன்பதாம் வகுப்பில் கடிதம் குறித்த உரையாடலைத் தொடங்கினேன்.

அஞ்சல்காரர் எழுதிய கடிதம்

ஒரு செய்தியை இன்னொருவருக்குச் சொல்வது, மனத்தில் இருப்பதைச் சொல்வது, புறாவின் காலில் கட்டி அனுப்பினார்கள், என்று நீண்ட உரையாடல் இன்று வாட்சப்பில் செய்திகள் பகிரப்படுவது குறித்த பகிர்வுகளோடு நிறைவடைந்தது.

‘கடுதாசி’ குறும்படத்தைத் திரையிட்டேன். தனது பேத்திக்குக் கடிதம் எழுதிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருக்கும் ஓய்வுபெற்ற அஞ்சல்காரர் பற்றிய படம். அவரின் நினைவுகளின் ஊடே அவரது பணிக்கால அனுபவங்கள் விரிகின்றன.  பல்வேறு உணர்வுகளின் கலவையான அனுபவங்களும் அவர் எழுதும் இறுதிக்கடிதமும் மனத்தில் நெகிழ்வான உணர்வை ஏற்படுத்தின.

நீங்களே எழுதுங்க!

“போஸ்ட்ல எதுவுமே வர்றதில்லை!”

“சொந்தக்காரங்க விசேஷம் வச்சா பத்திரிகை போஸ்ட்ல வருது.”

என்று சில நினைவுகளை மாணவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

மு.வ., அறிஞர் அண்ணா, நேரு, மாவீரன் நெப்போலியன், ஓவியர் வான்கா ஆகியோர் எழுதிய கடிதங்கள் குறித்துக் கூறினேன்.

“நீங்களா ஒரு கடிதம் எழுதுங்க. நண்பர், உறவினர், பொருட்கள், இயற்கை என்று யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம். அதன்பிறகு ஒவ்வொருவரும் அஞ்சல் அட்டையில் யாருக்காவது கடிதம் எழுதி அனுப்பலாம்” என்றேன்.

ஓரிரு நாட்களில் ஏராளமான கடிதங்களை மாணவர்கள் எழுதிவந்தார்கள்.

சூரியனை நண்பனாக எண்ணி எழுதப்பட்ட கடிதம், ‘நண்பா, தினசரி உன்னைப் பார்க்கிறேன். முழுசா பார்க்க முடியாமல் கண்கள் கூசுகின்றன. உன் அருகே வந்து பேச ஆசை. அப்படி வந்தால் நான் என்ன ஆவேன்?’ என்று ஆர்வத்தோடு கேட்கிறது.

அன்புள்ள என் பேய்! என்று தொடங்கும் கடிதம், ‘நீ எந்தவித பயமும் இல்லாமல் எல்லோரையும் பயமுறுத்துகிறாய். உன்னைப்பற்றி நான் எழுதுவதை நினைத்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது’ என்று பயம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

மரம், வளர்ப்பு ஆடு ஆகியவற்றிற்கும் எழுதப்பட்ட கடிதங்கள் வார்த்தைகளோடு அன்பு கலந்தவை.
மனப்பாடம் செய்ததை மட்டுமல்ல, மனதுள் எழும் உணர்வுகளையும் எழுதுவதுதானே எழுத்து!

- ரெ.சிவா, எழுத்தாளர், பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: artsiva13@gmail.com


கரும்பலகைக்கு அப்பால்குறும்படம் அறிமுகம்கடிதம் குறும்படம்கடிதத்தின் முக்கியத்துவம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

cartoon

தளை அறுந்தது!

வெற்றிக் கொடி