Published : 23 Jul 2019 11:48 am

Updated : 23 Jul 2019 11:48 am

 

Published : 23 Jul 2019 11:48 AM
Last Updated : 23 Jul 2019 11:48 AM

ஆங்கிலம் அறிவோமே 274: நண்பனா இல்லை வழிப்போக்கனா?

learning-english

ஜி.எஸ்.எஸ். 

கேட்டாரே ஒரு கேள்வி


 ‘அழகு காண்பித்தல்’ என்கிறோமே அதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது?

“Goblet என்றால் என்ன?” என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர். தான் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஒருவேளை இவர் ஹாரி பாட்டரின் ரசிகராக இருந்து ‘Harry Potter and the Goblet of fire’ என்ற நூலைப் படித்துவிட்டு இந்தச் சொல்லின் பொருளைக் கேட்டிருக்கலாம். Goblet என்றால் கோப்பை. பெரும்பாலும் அழகாக வடிவமைக்கப்பட்ட மதுக் கிண்ணத்தை இது குறிக்கிறது. இதற்குச் சற்றே நீளமான ஒரு அடிபாகம் இருக்கும். தீக்கிண்ணம் என்ற உருவகமான பொருளில் Goblet of fire என்று கூறியிருக்க வேண்டும்.

Harry Potter தொடர்பான வேறு சில சொற்களையும் தெரிந்துகொள்வோமே. முதல் ஹாரி பாட்டர் புதினத்தின் பெயர், Harry Potter and Sorcerer’s Stone. Sorcerer என்றால் மந்திரவாதி (அதாவது சூனியம் வைப்பவர்).
Harry Potter and the half blood prince என்பது மற்றொரு நூலின் தலைப்பு. Half blood என்றால் ஒருவழி உறவு. இரண்டு பெற்றோர்களில் ஒருவரைப் பொதுவாகக் கொண்டவர்களின் உறவு முறையை half blood எனலாம். ஒருவரின் மனைவிக்கும், துணைவிக்கும் பிறந்த குழந்தைகள் ஒருவருக்கொருவர் half blood ஆவார்கள்.
“Harry Potter and the deep hallows” என்றும் ஒரு நூல் உண்டு. Hallow என்றால் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது என்றுபொருள். The Ganges is hallowed as a sacred river.

கே.ஒ.கே. நண்பரே, அழகு காண்பித்தலை displaying one’s beauty எனலாமா? ஓ! நீங்கள் உதட்டைச் சுழித்து எதிராளியைப் பழிப்பு காட்டுவதுபோல முகபாவம் காட்டுவதை ‘அழகு காண்பித்தல்’ என்கிறீர்களோ?
Sardonic facial expression என்று இதைக் கூறுவதுண்டு.

“Neighbour, bystander, friend ஆகியோருக்கிடையே உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகக் கூற முடியுமா?”
Friend என்றால் நண்பர் (முகநூல் நண்பர்களை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை). 
Neighbour என்றால் அருகில் வசிப்பவர்.
Bystander என்றால் ஒரு நிகழ்வு நடக்கும்போது அதைப் பார்ப்பவர். அதேநேரம் அதில் பங்கெடுத்துக் கொள்ளாதவர்.

“நீதிமன்றச் செயல்பாடுகளில் impugn என்ற சொல்லைக் கேள்விப் பட்டிருக்கிறோமே. இதற்கு என்ன பொருள்?’’
ஒருவரை விமர்சிப்பதன் மூலம் அவரது தரத்தையோ, தன்மையையோ மக்களிடம் குறைக்கச் செய்வது. “Are you impugning my competence as a singer?” என்றால், “எனது பாடும் திறமையை நீ பிறரின் சந்தேகத்துக்கு உள்ளாக்குகிறாயா?”என்று பொருள். Impugn என்பதற்குச் சமமான சொற்களாக call into question, challenge ஆகியவற்றைக் கூறலாம்.


Nocent என்ற சொல் நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கக்கூடும். குற்ற மனப்பான்மை கொண்ட (guilty) என்று அதற்குப் பொருள்.
சுவாரசியம் என்னவென்றால் இதற்கு நேரெதிரான அர்த்தம் கொண்ட ஆங்கிலச் சொல் நமக்கு மிகவும் அறிமுகமானது. அது innocent (அப்பாவித்தனமான).
போட்டியில் கேட்டுவிட்டால்
The government has ordered a ________ inquiry into the police firing.
(a) governmental
(b) penal
(c) judicial
(d) cosmetic
Inquiry என்றால் விசாரணை. Cosmetic என்றால் மேலோட்டமாக என்று ஒரு பொருள் உண்டு. எந்த அரசும் (அதன் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும்) ஒரு ‘மேலாட்டமான விசாரணைக் குழு’வை அமைக்க 
உத்தரவிடாது. 
ஒரு Government-டே governmental inquiry-க்கு உத்தரவிடாது. அது அபத்தம். அதற்குப் பதிலாக The government has ordered an inquiry into the police firing என்று எழுதிவிட்டுப்போகலாமே!
விசாரணையின் முடிவில் தண்டனை அளிக்கப்படும். ஆனால், தண்டனைகளுக்காகவே ஒரு விசாரணை உருவாக்கப்படக் கூடாது (ஏனென்றால், குற்றம் நடந்ததா என்பது தெளிவான பிறகுதான் தண்டனையைப் பற்றியே பேச்சு.). எனவே, penal inquiry என்பதும் சரியல்ல.
ஒரு நீதிபதியின் தலைமையில் அமைக்கப்படும் விசாரணைக் குழுவை Judicial Commission என்பதுண்டு. அந்த விதத்தில் The government has ordered a judicial inquiry into the police firing என்பது சரியான வாக்கியம்.

 சிப்ஸ்

# Gotcha என்ற சொல் காமிக்ஸில் அடிக்கடி இடம்பெறுகிறது. இதற்கு என்ன பொருள்?

I have got you (முக்கியமாக ஒருவர் தவறு இழைத்து, அதை மற்றவர் கண்டுபிடித்துவிடும்போது கூறப்படும் சொல்).

# Waning என்றால்?

மெல்ல மெல்லக் குறைதல். நிலவைப் பொறுத்தவரை தேய்பிறை.

(தொடர்புக்கு: - aruncharanya@gmail.com)

Harry Potterஆங்கிலம் அறிவோமேThe Goblet of fireGotchaSorcererஅழகுவாசகர்Waning

You May Like

More From This Category

More From this Author