Last Updated : 09 Jul, 2019 12:00 PM

 

Published : 09 Jul 2019 12:00 PM
Last Updated : 09 Jul 2019 12:00 PM

வெற்றி நூலகம்: முரண்களின் மூட்டையா?

பாடத்திட்டத்தையும் பாடப் புத்தகங்களையும் வகுப்பதே கல்விக்கொள்கை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, ஒட்டுமொத்த தேசத்தின் போக்கைக் கோடிட்டுக் காட்டும் திட்டம் இது என்பதை அழுத்தமாக உணர்த்தக்கூடிய 12 கட்டுரைகளின் தொகுப்பாக, ‘இந்தியக் கல்வியின் இருண்டகாலம்’ என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. இந்திய மாணவர் சங்கம், மூட்டா ஆசிரியர் அமைப்புடன் இணைந்து பாரதி புத்தகாலயம் இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மூத்த கல்வியாளர்கள் எஸ்.எஸ்.ராஜகோபாலன், ச.மாடசாமி, கல்விச் செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு (நேர்காணல்), தமிழக அரசு புதிய பாடத்திட்டக் குழு உயர்மட்ட உறுப்பினர் ராமானுஜம், தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் பேராசிரியர் இரா.முரளி, கல்வியாளர்கள் ஆயிஷா இரா. நடராஜன், அ.மார்க்ஸ் உள்ளிட்டவர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்துத் தனது ஒரு கட்டுரையையும் சேர்த்து புத்தகமாக்கியிருக்கிறார் பேராசிரியர் நா.மணி. புதிய கல்விக் கொள்கை (வரைவு) 2019-ல் விவரிக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டம், பயிற்றுமுறை, இந்தியக் கல்வி கட்டமைப்பில் செய்யவிருக்கும் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கூறுகளை வெவ்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் இக்கல்வியாளர்கள்.

நன்மையும் தீமையும்

நீதி நெறிக் கருத்துகள் பாடத்திட்டத்தில் இடம்பெறுவதைப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்தியது பரவலாகப் பாராட்டப்பட்டது. ஆனால், என்ன மாதிரியான நீதி இதில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை, ‘பாலகர்கள் பத்திரம்! இந்தப் பூனையை நம்பவா?’ கட்டுரையில் நுட்பமாக ஆராய்கிறார் மாடசாமி.

ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, பழிவாங்குவது, யாரை விலக்குவது என்பதுபோன்ற கருத்துகளை முதன்மைப்படுத்தும் பஞ்சதந்திரக் கதைகளை விவரித்து அவற்றை நீதி போதனைகளுக்கான வழிகாட்டியாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறார்.

‘அரசியல் எதார்த்தத்தைப் புறக்கணிக்கும் அணுகுமுறை’ கட்டுரை மூலம் கல்விக் கொள்கையில் வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள், வரைவுக் கொள்கையின் தோல்விகள் ஆகிய இரண்டையும் பேசுபொருளாக்கியுள்ளார் ஆர். ராமானுஜம்.

தரமற்ற ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களை மூடிவிட்டுப் பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்புக்குள் ஆசிரியப் பயிற்சிக் கல்வியைக் கொண்டுவருவது, முன்பருவ மழலையர் முதல் 17 வயதுவரையிலான குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை நிலைநாட்டுவது, பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறைகளில் சாத்தியப்படக்கூடிய சீர்திருத்தத் திட்டங்களை அமல்படுத்தும் திட்டம், கலைகள், இலக்கியம், வரலாறு போன்ற மானுடவாழ்வு சார்ந்த பாடப் பிரிவுகளுக்கு மிகுந்த அழுத்தம் தரப்பட்டிருப்பது உள்ளிட்ட அம்சங்கள் வரவேற்கத்தக்கவை என்கிறார் ராமானுஜம்.

மறுபுறம், கல்வியின் தரம், ஆளுகை தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வை முன்வைக்கும் முயற்சியில் ‘பள்ளி வளாகத்தில் மாற்றம்’, ‘டிஜிட்டல் தொழில்நுட்பம்’, ‘தன்னார்வலர்களாக முன்வரும் ஆசிரிய உதவியாளர்கள்’ குறித்துப் பேசப்பட்டிருக்கிறதே தவிரச் சமூக அரசியல் சிக்கல்களோ சமூக நீதிக்கான இடமோ ஒரு முறைகூடப் பேசப்படவில்லை.

சாதி, வர்க்க, பாலின அடிப்படையில் வேரூன்றியிருக்கும் பாகுபாடு குறித்து வாய்திறவாமல் ‘எல்லோருக்குமான தரமான கல்வி’ என்ற லட்சியத்தை எட்ட ‘செயல்திறன் மிக்க நிர்வாகம்’ கொண்டுவருவதை மட்டும் பேசியிருப்பது பாசாங்கு என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஆட்டம்காணும் அஸ்திவாரம்

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கட்டுரைகள் புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், ‘அரசியல் சட்டமும் புதிய கல்விக் கொள்கை வரைவும்’ என்ற கட்டுரையில் கோத்தாரி கல்விக் குழுவினரது பட்டியலைப் புதிய கல்விக் கொள்கையைத் தயாரித்த குழுவினரின் பட்டியலோடு ஒப்பிட்டுச் செறிவான கருத்துகளைச் சுருக்கமாக எழுதியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

புதிய கல்விக் கொள்கைப் பட்டியலில் காலங்காலமாக கல்வி உரிமைக்காகப் போராடியவர்கள், இயக்கங்கள், கல்வியாளர்கள் எவரும் இல்லை என்பதை வருதத்தோடு பதிவுசெய்திருக்கிறார். கல்வியின் கட்டமைப்பில் செய்யப்படவிருக்கும் மாற்றங்கள்தாம் மிகவும் அச்சுறுத்துபவை, அஸ்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்பவை என்று, ‘ஒரு கல்வியாளனின் குறுக்கு விசாரணையில் உயர்கல்வி’ கட்டுரை மூலமாக உணர்த்தியுள்ளார் பேராசிரியர் முரளி.

ஒருபுறம் மாணவர்களுக்குப் பாடத்திட்டப் பளுவைக் குறைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுவது. மறுபுறம் மூன்று வயது முதலே மூன்று மொழிகளைக் கற்கச் சொல்வது. ஒருபுறம் கல்வி லாபத்துக்கானதல்ல என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் தனியாரிடம் கல்வியைத் தாரைவார்ப்பதற்காக அடிக்கல் நாட்டுவது அதுவும், ‘தனியார் அறக்கொடை’ என்ற வார்த்தைஜாலத்தை ஆங்காங்கே தூவுவது. இப்படி முரண்களின் மூட்டையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது கல்விக் கொள்கை என்பதே கல்வியாளர்களின் குரலாக ஒலிக்கிறது.

கடந்த காலப் பெருமையில் திளைக்கும் போக்கு, சமகாலத்து அரசியல் பண்பாட்டு சமூக நிதர்சனங்களைப் புறக்கணிக்கும் அணுகுமுறை, புதிய தாராளமயப் பொருளாதாரத்தின் அறிவிப்புகளை மாற்றுக் கருத்தின்றி வாரியணைக்கும் நிலைப்பாடு ஆகியவற்றின் தொகுப்பாகவே இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை இருப்பதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது இந்நூல்.

இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 – குறித்த கட்டுரைகள்

தொகுப்பு: பேரா.நா.மணி

பாரதி புத்தகாலயம்

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,

சென்னை – 600 018

தொலைபேசி:

044-24332424

விலை: ரூ.80/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x