Last Updated : 11 Jul, 2017 11:20 AM

Published : 11 Jul 2017 11:20 AM
Last Updated : 11 Jul 2017 11:20 AM

வண்ண விழிகளின் பின்னணி என்ன?

வித்தியாசமான வண்ணக் கண்கள் நாள் - ஜூலை 12

உலகின் வண்ணங்களைப் பகுத்துணரும் உங்கள் விழிகளின் வண்ணம் என்ன? கறுப்பு, பழுப்பு மட்டுமல்ல நீலம், பச்சை எனப் பல விதமான நிறங்களிலும் விழிகள் உண்டு. பரிணாமத்தில் இவை உருவானதும், மரபு ரீதியாகத் தொடரும் பின்னணியும் சுவாரசியமானது. இந்த வண்ண விழிகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுவது மட்டுமல்ல, ஒரே நபரின் இரு விழிகள் தமக்குள் வண்ணத்தால் வேறுபடுவதும் உண்டு.

கண்ணுக்குக் கண்ணாக

ஒளி, அழுத்தத்துக்கு ஏற்றவாறு நமக்கான காட்சிகளைக் கண்டுணர உதவுபவை கண்கள். லட்சக்கணக்கான நிறங்களைப் பிரித்து உணரும் திறன் மனிதக் கண்ணுக்கு உண்டு. கண்ணிலிருக்கும் குச்சி மற்றும் கூம்பு வடிவச் செல்களில், கூம்பு செல்களே நிறங்களை உணரும் பணியைச் செய்கின்றன. கைரேகை போலக் கண்களையும் ஆராய்ந்தால் இரட்டைப் பிறவிகள் உட்பட யாருக்கும் அவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த விழிகளின் வேறுபாட்டில் வெளிப்படையாகத் தெரிபவை அவற்றின் வண்ணங்கள்.

கண்ணின் வண்ணம்

மனிதரின் தோல், முடியின் நிறத்துக்குக் காரணமாவது ‘மெலனின்’ என்ற நிறமி. அதேபோல, கருவிழிகளில் மெலனோசைட்டுகள் (Melanocytes) உற்பத்தி செய்யும் மெலனின் கண்ணின் நிறத்தைத் தீர்மானிக்கின்றன. சருமத்தின் அடிப்பகுதியில் இருந்துகொண்டு மெலனினை சுரக்கும் அணுக்கள் மெலனோசைட்டுகள்தான்.

உலகில் கறுப்பு மற்றும் பழுப்பு நிறக் கண்களே அதிகம் காணப்படுகின்றன. மெலனின் செறிவாகக் காணப்படுவதே அவற்றுக்குக் காரணம். அடுத்தபடியாக ஐஸ்வர்யாராய், ஹிரித்திக் ரோஷன் போன்ற பச்சைக் கண்கள் உடையவர்கள் வருவார்கள். இதனையடுத்துக் குறைவான நிறமிகளுடன் எலிசபெத் டெய்லர் போன்றோரின் நீல நிறக் கண்கள் இடம் பிடிக்கின்றன. நிறமிகள் பற்றாக்குறையுடன் தென்படும் சாம்பல் நிறக் கண்கள் அரிதானவை.

இவை மட்டுமல்லாது பல நிறங்களின் சேர்க்கையாகக் காணப்படும் கண்களை ஹேஸல் கண்கள் (Hazel) என்கின்றனர். பெரும்பாலும் பச்சை மற்றும் பழுப்பு நிறங்களின் சேர்க்கையாக அவை காணப்படும். கருவிழிப் படலத்தின் நிறத்தைத் தீர்மானிப்பதில் நிறமிகளுடன் புரதங்களின் சேர்க்கையும் காரணமாகலாம். கருவிழிப் படலத்தின் மெலனின் உற்பத்தியை மரபு ரீதியான காரணங்களும் தீர்மானிப்பதுண்டு.

நிறத்தைத் தீர்மானிக்கும் மரபணு

நவீன அறிவியலில் கருவிழிப் படலத்தின் நிறத்தைத் தீர்மானிக்கும் மரபணுக்களைக் அடையாளம் கண்டுள்ளனர். கருவிழிப் படலத்தின் ஒன்பது வகையான நிறங்களைத் தீர்மானிப்பவை 16 வகையான மரபணுக்களே என்று சமீபத்திய ஆய்வுகள் உறுதிபடுத்தி உள்ளன. 15-வது குரோமோசோமில் இடம்பிடித்திருக்கும் இந்த மரபணுவில் பிரதானமானவை OCA2 மற்றும் HERC2. இவற்றில் பழுப்பு மற்றும் நீல நிறக்கண்களுக்கான நிறமிகளில் நான்கில் 3 பங்கை OCA2 தீர்மானிக்கிறது.

கண்ணுக்கு ஒரு வண்ணம்

கருவிழிப் படலத்துக்கு மாறாகப் பச்சை, நீலம் எனக் கண்களின் நிறம் வேறுபடுவதை பலர் கவர்ச்சிகரமாகக் கருதுகிறார்கள். கருவிழிப் படலத்தின் நிறத்தை மாற்றுவதற்காகக் காண்டாக்ட் லென்சுகள் அணிவது முதல் கருவிழிப் படல அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதுவரை வண்ண மோகம் அதிகரித்துவருகிறது. வண்ண விழிகளின் கூடுதல் ஈர்ப்பாக, ஒரே நபரின் ஒவ்வொரு கண்ணிலும் வெவ்வேறு வண்ணங்கள் தென்படுவது ஹெடரோகுரோமியா (Heterochromia) எனப்படுகிறது. மனிதர்கள் மட்டுமன்றி நாய், பூனை, குதிரை போன்ற விலங்குகளிடமும் இந்த வண்ணக் கண்களைப் பார்க்கலாம். இந்த நிற மாறுபாடுகள் மரபணு அமைப்பின் காரணமாக மட்டுமல்லாமல் நோயின் அறிகுறியாகவோ காயம் காரணமாகவோகூட நிகழலாம்.

வண்ணங்களைக் கொண்டாட

ஆதியில் வாழ்ந்த மனிதக் குழுக்களின் விழிப் படலத்தின் நிறம் அடிப்படையான கறுப்பு அல்லது பழுப்பு நிறம் மட்டுமே இருந்தது. கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் நீல நிறக் கண்களும் அதன் பின்னரே ஏனைய நிறக் கண்களும் உருவானதாக அறிவியல் வரலாறு கூறுகிறது. ஆப்பிரிக்க, ஆசியப் பிராந்தியத்தில் வாழும் மனிதர்கள் அடிப்படையான கருவிழிப் படலத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஐரோப்பிய நாடுகளில் வண்ணக் கண்களை அதிகம் காணலாம். கருவிழியிலிருந்து வித்தியாசப்படும் வண்ணக் கண்களைப் பற்றி அறிந்துகொள்ளும்விதமாக ஆண்டுதோறும் ஜூலை 12 அன்று வித்தியாசமான வண்ணக் கண்கள் நாள் (Different Colored Eyes Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கண்களின் மருத்துவ அறிவியல், பண்டைய மனிதச் சமூகம் குறித்த ஆய்வுகள், செயற்கை உடல் அவயங்களின் ஆய்வுகள் போன்றவைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x