Published : 07 Mar 2017 10:49 AM
Last Updated : 07 Mar 2017 10:49 AM

மனதில் நிற்கும் மாணவர்கள் 01 - காலத்தின் ஆற்றல்

நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தை அவர்களின் ஒரு கருத்து இது: ‘மேலே செல்லச் செல்லச் சில பெண்கள்தான் உள்ளனர்’. எனக்குள் பல எண்ணங்களைக் கிளர்த்திய வாசகம். பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் முன்னேறியுள்ளனர் என்று சொல்லிச் சிலரை உதாரணம் காட்டுபவர்களின் முகத்தில் அறையும்படியான கருத்து. இதனுள் புதைந்திருக்கும் ஏக்கமும் ஆதங்கமும் சாதாரணமல்ல. மேலே செல்லச் செல்லப் பல பெண்களைக் காணும் நிலை என்றைக்கு வரும்? மேலே செல்ல முடியாமல் பெண்களைக் கீழ் இழுப்பவை எவை?

முதுகலைக்கு முதலில் வந்தவர்

யோசித்துக் கொண்டிருந்தபோது மனதில் திரும்பத் திரும்ப வந்த பெண்ணுருவம் கலைச்செல்வி. எங்கள் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் படித்தவர். முதன்முதலாக முதுகலைப் படிப்பு வந்தபோது சேர்ந்த முதல் குழு மாணவர்களுள் ஒருவர். ஆர்வமும் துணிச்சலும் கொண்டவர். இலக்கிய மன்ற நிகழ்வுகளில் பங்கேற்றுத் திறமையோடு பேசியவர்.

சுயநிதிக் கல்வியாகத் தொடங்கப்பட்ட முதுகலை படிப்புக்கு அந்தக் கல்வியாண்டு தொடங்கி இரு மாதம் கழித்தே அனுமதி கிடைத்தது. அதற்குள் மாணவர்களில் பெரும்பாலானோர் வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். நாங்களே எதிர்பாராத விதத்தில் மாணவியர் பலர் வந்து சேர்ந்தனர்.

அப்போதுதான் ஓர் உண்மை புரிந்தது. இங்கே முதுகலைப் படிப்பு வரவில்லை என்றால், இந்தப் பெண்கள் யாரும் எங்கும் சேர்ந்தி ருக்க மாட்டார்கள். பெற்றோர் அவர்களை வெளியூருக்கு அனுப்பிப் படிக்க வைத்திருக்கப் போவதில்லை. செலவு என்பதோடு அச்சமும் முக்கியமான காரணம். உள்ளூரிலேயே ஒரு படிப்பு தொடங்கப்படுவது பெண்களுக்கு வரப்பிரசாதம்.

நமக்கான வெளி எங்கே?

கலைச்செல்வியும் அவ்விதம் வந்து சேர்ந்தவர். கல்வி ஆர்வம் கொண்ட மாணவர்கள் வகுப்பில் இருந்துவிட்டால், ஆர்வமூட்ட வேண்டிய சிரமம் ஆசிரியருக்குக் குறைந்துவிடும். அவ்வகையில் எனக்குச் சந்தோசமாக இருந்தது. முதுகலை மாணவர்களுக்கு எனத் தனியாகக் கருத்தரங்கம் ஒன்றைத் தொடங்கினோம். ஒவ்வொரு வாரமும் இரண்டு பேர் கட்டுரை வாசிக்க வேண்டும் என்பது கட்டாயம்.

வெளி கிடைத்தாலும் பெண்கள் பயன்படுத்த முதலில் தயங்குவார்கள். இது நமக்கான வெளி என்னும் உணர்வைப் பெற்றுவிட்டால் அதில் தைரியமாகவும் தாராளமாகவும் உலவுவார்கள். கலைச்செல்வி அந்த உணர்வைப் பெற்றவர். கருத்தரங்கில் கட்டுரை வாசிப்பவர்கள், அவர்களே தலைப்பை முடிவு செய்துகொள்ளலாம். ஆசிரியர்கள் தலையிடுவதில்லை. ஆலோசனை கொடுப்பதோடு சரி. முதல் கருத்தரங்கில் கலைச்செல்வி கட்டுரை வாசிக்கப் பெயர் கொடுத்திருந்தார். ஆனால் தலைப்பைப் பற்றி ஆசிரியர் யாரிடமும் கலந்தாலோசிக்க வில்லை.

கட்டுரையை யார் எழுதிக் குடுத்தா?

மகாபாரதம் பற்றிய கட்டுரை. புராணத்திற்கு உரிய உயர்வு நவிற்சி உள்ளிட்ட இயல்புகளை அறியாமல் எதார்த்தத்தோடு ஒப்பிட்டு வாசிப்போருக்கு மிக எளிதாகத் தோன்றும் தர்க்கக் கேள்விகளில் சிலவற்றைத் தொகுத்துக் கட்டுரை ஆக்கியிருந்தார். அந்தக் கேள்விகளில் புனைவுத் தருக்கம் பற்றிய புரிதல் இல்லை என்பதை, அவருக்கு விளங்கும்படி சொல்ல வேண்டும் என நினைத்திருத்தேன். கருத்தரங்குக்குத் தலைமை ஏற்றிருந்தவர் வேறொரு பேராசிரியர். அவருக்கு அந்தக் கட்டுரை ஆச்சரியம் தந்திருந்தது.

அந்த வியப்பை அவர் இயல்பாக வெளிப்படுத்திப் பாராட்டியிருக்கலாம். ஆனால் அவர் இப்படிக் கேட்டார், ‘இந்தக் கட்டுரைய யார் எழுதிக் குடுத்தா?’ எல்லாருக்கும் முன்னிலையில் இப்படி அவர் கேட்டது கலைச்செல்வியின் தன்மானத்தைக் காயப்படுத்திவிட்டது. காயச் சிலிர்ப்போடு ‘நாந்தாங்கய்யா எழுதுனன்’ என்றார் கலைச்செல்வி. தலைநிமிர்த்தி அவர் அப்படிச் சொன்ன பதில் அவ்வாசிரியரின் அகங்காரத்திற்குக் குறிவைத்தது.

அவர் ‘தமிழாசிரியர் யாரோ இத எழுதிக் குடுத்திருக்கறாங்க, உண்மையச் சொல்லு’ என்று மிரட்டுவது போலக் கேட்டார். கலைச்செல்வி தயங்கவில்லை. ‘இல்லீங்கய்யா. நானேதான் எழுதுனன்’ என்றார். ‘அந்தளவுக்கு நீ மகாபாரதம் படிச்சிருக்கறயா.’ ‘படிச்சிருக்கறங்கய்யா.’ ‘அப்படீன்னா அதுல நான் கேக்கற கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா?’ ‘கேளுங்கய்யா சொல்றன்.’ ‘துரோணருடைய மகன் யாரு?’ ‘அசுவத்தாமன்.’ ‘அவன் எப்படிப் பொறந்தான்?’ ‘குதிரைக்குப் பொறந்தான். அசுவம்னா குதிரைன்னு அர்த்தம்.’ இப்படிச் சில கேள்விகள். அதற்கு உடனடியான பதில்கள்.

கசப்பைக் கடந்தவர்!

‘திருவிளையாடல்’ படத்தின் தருமி சிவன் உரையாடல் என் மனக்கண் முன் வந்தது. சிவனைப் போலக் கம்பீரத்தோடு கலைச்செல்வியின் பதில்கள் வந்தன. ஆசிரியருக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. பதற்றம் கொண்டார். சட்டென உள் புகுந்து நான் ஒரு கேள்வியைக் கேட்டுத் திசை திருப்பினேன். மாணவர்களும் கேள்விகள் கேட்டனர். என்றாலும் அவரின் முகம் சரியாகவில்லை. அடுத்த கட்டுரை வாசிக்கும்போது ‘நீங்க பாத்துக்கங்க’ என்று என்னிடம் சொல்லிவிட்டு அவர் வெளியேறிவிட்டார்.

மாணவர்களுக்கான பல அரங்குகளை நடத்துவதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர் அவர். தம் சொந்தப் பணத்தைப் போட்டுக்கூடச் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார். அவருக்கு இப்படி ஒரு சிக்கல் நேரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விஷயம் அத்துடன் முடியவில்லை. அடுத்த நாள் கலைச்செல்வியை அழைத்தவர் ‘நான் கேள்வி கேட்டா, நீ பதில் சொல்லுவியா?’ என்று கேட்டுத் திட்டியிருக்கிறார். அது மட்டுமல்ல. ‘இன்னமே கருத்தரங்குல கட்டுர எதும் வாசிக்கக் கூடாது. வந்தமா போனமான்னு இருக்கணும்’ என்று கட்டளை போட்டுவிட்டார். அச்சம் கொண்ட கலைச்செல்வியை அப்புறம் தேற்றவே முடியவில்லை. அதன்பின் எந்தக் கருத்தரங்கிலும் கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவேயில்லை.

காலத்தின் ஆற்றலை யார் மதிப்பிட முடியும்? இன்றைக்குக் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் கலைச்செல்வி. ‘என்னம்மா மாணவர்கள மெரட்டறியாம்மா?’ என்று கேட்டால் மென்மையாகச் சிரிக்கிறார். அதில் ஓர் கசப்பும் கசப்பை விழுங்கித் தேறிய நம்பிக்கையும் தெரிகின்றன.

பெருமாள்முருகன், நாவலாசிரியர்,
தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x