Last Updated : 24 Mar, 2014 12:00 AM

Published : 24 Mar 2014 12:00 AM
Last Updated : 24 Mar 2014 12:00 AM

எந்த வயதிலும் 10, +2 படிக்கலாம்

உளவியல், இந்தியக் கலாசாரம், ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேஷன்ஸ் இது போன்ற துறையில் 12ஆம் வகுப்புப் படிக்க வேண்டுமா? தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open Schooling) அதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுபோல 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் தவறியவர்களும்/பாதியில் விட்டவர்களும் இந்தப் பள்ளியில் இணைந்து தங்களுக்கு விருப்பமான பாடத்தைப் பயிலலாம்.

பொதுவாகத் திறந்தவெளிப் படிப்பு என்றால் படிப்புக்கு மதிப்பு இல்லை என நினைப்பார்கள். ஆனால் இங்குப் பாடத்திட்டம் மாநில பாடத்திட்டத்துக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கும் இடையிலான தரம் கொண்டதாக இருக்கும். தேர்வில் தவறிய மாணவர்கள் மட்டும் கல்வி மையம் மட்டுமல்ல இது. தேசிய திறந்தநிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்து ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று ஐ.ஐ.டி. உள்ளிட்ட புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருபவர்கள் உண்டு. அதேபோல், அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருவோர் அநேகர்.

எவ்வித அடிப்படைக் கல்வித் தகுதி இல்லாதவர்களும் தேசியத் திறந்தநிலைப் பள்ளியில் சேர்ந்து நேரடியாக 10-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம். அதன் பிறகு அவர்கள் விரும்பினால் பள்ளியில் பிளஸ்-1 சேரலாம். அல்லது 2 ஆண்டு கழித்து தொடர்ந்து பிளஸ்-2 தேர்வு எழுதி பிறகு கல்லூரியில் சேரலாம். தேசியத் திறந்தநிலைப் பள்ளிக்கு நாடு முழுவதும் 19 மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிக்கான சென்னை மண்டலம் அண்மையில்தான் தொடங்கப்பட்டது. சென்னை மண்டல இயக்குனர் பி. ரவி அட்மிஷன் நடைமுறைகளை விவரிக்கிறார்:

குறைந்தபட்சம் 14 வயது நிரம்பிய எவர் வேண்டுமானாலும் தேசியத் திறந்தநிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு சேரலாம். எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும். இதற்கு அவர்களே சுயஉறுதிமொழி அளிக்கலாம். வயது வரம்பு ஏதும் கிடையாது.

பிறந்த தேதிக்கு மட்டும் அத்தாட்சி சமர்ப்பிக்க வேண்டும். தேசியத் திறந்தநிலைப் பள்ளியின் இணையதளத்தில் (www.nios.ac.in) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 5 பாடங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் ஒன்று அல்லது 2 பாடங்கள் மற்றும் கணிதம், அறிவியல்-தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளாதாரம், வர்த்தகக் கல்வி, மனையியல், உளவியல், இந்திய கலாசாரம்,

ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேசன்ஸ-இவற்றில் தங்களுக்குப் பிடித்தமான 3 அல்லது 4 பாடங்களைத் தேர்வுசெய்து கொள்ளலாம். மேலும், விருப்பமான ஒரு தொழில்கல்விப் பாடத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

அட்மிஷன், புத்தகம் உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து கட்டணம் ரூ.1,030. பெண்கள் என்றால் ரூ.780, எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.580 மட்டுமே. கட்டணத்தை ஆன்லைனில் நெட்-பேங்கிங் மூலமாகவோ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்திவிடலாம். அட்மிஷன் போட்டுவிட்டால் வீட்டு முகவரிக்கு புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.

இதேபோல், பிளஸ்-2 சேர வேண்டுமானால் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.1,130. பெண்களுக்கு ரூ.930. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மற்ரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.655 மட்டும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் ஏதேனும் ஒன்று அல்லது 2 பாடங்களையும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்கவுண்டன்சி, ஓவியம், மனையியல், உளவியல், சுற்றுச்சூழல், மாஸ் கம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆபரேஷன்ஸ் ஆகிய 18 பாடங்களில் ஏதேனும் 3 அல்லது 4 பாடங்களை தேர்வுசெய்து படிக்கலாம். விரும்பம் இருந்தால் கூடுதலாக 2 பாடங்கள் எடுத்தும் படிக்கலாம்.

வகுப்புகளுக்கு விருப்பம் இருந்தால் செல்லலாம். கட்டாயமில்லை. சேர்க்கை மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஒன்று. செப்டம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை ஒன்று இரு நிலைகளில் நடக்கிறது. தமிழ்வழியில் பாடங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இப்பணி முடிந்ததும் தமிழக மாணவர்கள் தமிழ்வழியிலும் படிக்கலாம்.

சந்தேகங்களுக்கு: சென்னை மண்டல அலுவலகத் தொலைபேசி எண்: 044-28442237


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x