Last Updated : 25 Jun, 2019 10:36 AM

 

Published : 25 Jun 2019 10:36 AM
Last Updated : 25 Jun 2019 10:36 AM

புதிய கல்விக் கொள்கை 2019: ஒற்றைப் பாடத்திட்டம் வன்முறையாகாதா?

பால்யப் பருவக் கல்வியில் தொடங்கி முதியோர் கல்விவரை ஒட்டுமொத்த தேசத்தின் கல்வியை நிர்ணயிக்கவிருக்கும் புதிய கல்விக் கொள்கை 2019-ன் வரைவு கடந்த ஆண்டு இறுதியிலேயே முழுவதுமாகத் தயாரிக்கப்பட்டுவிட்டது.

பிறகு ஐந்தரை மாதங்கள் கழித்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே பொதுமக்களின் கருத்துக்கேட்புக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் முடிவடையவிருக்கிறது.

இந்நிலையில் கல்விக் கொள்கை 2019-ன் தமிழ் மொழிபெயர்ப்பு நூலின் வெளியீடு, அதன் உள்ளடக்கத்தைக் குறித்த விவாதங்கள் எனத் தமிழகம் சூடுபிடித்திருக்கிறது.

நான்கு பாகங்களாகப் பிரித்து விரிவாக எழுதப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் மூன்றாவது பாகம் கல்வியில் தொழில்நுட்பம், தொழிற்கல்வி, வயதுவந்தோர் கல்வி ஆகியன குறித்த திட்டங்களை அடுக்குகிறது. இறுதி பாகம், பிரதமரின் தலைமையின்கீழ் கல்வியை உருமாற்றுவதற்கான திட்டத்தை முன்வைக்கிறது. இவற்றில் விவாதிக்கப்பட வேண்டியவைக் குறித்து ஒரு பார்வை:

கருவி தருகிறோம்!

அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய இளைஞர்களில் மிகக் குறைவானவர்களே முறையான தொழிற்கல்வி பயின்றிருக்கிறார்கள். ஆகையால் தொழிற்கல்வியைப் பரவலாக்க வரைவு பரிந்துரைக்கிறது.

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரையிலான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் ஒரு தொழிற்கல்விப் பாடப் பிரிவையாவது பயில வேண்டும். இளநிலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களில் 50 சதவீதத்தினரையாவது தொழிற்கல்வி படிப்பவர்களாக

2025-ம் ஆண்டுக்குள் மாற்ற வேண்டும். அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தொழிற்கல்வியைக் கொண்டுவர, அதற்குத் தேவையான நிதியை விநியோகிக்க, அது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க பிரத்தியேக தேசிய கமிட்டி ஒன்றை நிறுவுதல் ஆகியவை இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இதைப் பள்ளிகளில் கொண்டுவருவது என்பது ஏற்கெனவே படுதோல்வி அடைந்த திட்டம் என்று விமர்சிக்கிறார் சென்னை டி.ஜெ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வரும் தொழிற்கல்வித் துறையில் 35 ஆண்டுக் காலம் அனுபவம் வாய்ந்தவருமான பேராசிரியர் பிச்சைமணி.

“80களிலேயே பள்ளிகளில் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. நான் வேளாண்மை இயந்திரவியலைத்தான் பிளஸ் 1-ல் படித்தேன். படிப்பை முடிக்கும்வரை டிராக்டரைத் தவிரத் தொழிற்கல்வி சம்பந்தமான வேறெதையுமே எனக்குக் காட்டவில்லை. இந்தப் படிப்பின் அடிப்படையே செயல்வழிக் கற்றல்தான்.

ஆனால், தொழிற்கல்விக்குத் தேவையான கருவிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படாததால் பள்ளிகளில் ஏட்டுப்பாடம் மட்டுமே கற்பிக்கப்பட்டுவருகிறது. இதனால் இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பும் அனுகூலமாக இல்லை.

இத்தகைய சூழலில் புதிய கல்விக் கொள்கை சொல்வதுபோல 9-ம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வியைக் கற்பிக்கும் கனவு நிஜமாக ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களுடன் பள்ளிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தலாம்.

எங்களிடம் உள்ள தொழிற்கல்விக்குரிய கருவிகள், வசதிகளைப் பள்ளிகளுக்கு நல்குவதன் மூலமாக மட்டுமே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது யதார்த்தத்தில் சாத்தியப்படும்” என்கிறார் பிச்சைமணி.

குலக் கல்வித் திட்டமாகிடுமோ?

இது மட்டுமின்றி என்னென்ன தொழிற்படிப்புகள் கற்றுத் தரப்படும், இதற்கான பாடத்திட்டம் என்ன போன்றவை இந்தக் கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. ‘சிறப்பு கவனத்துக்குரிய துறைகள்’ என்ற தலைப்பு இடம்பெற்றிருந்தாலும் அதில் உதாரணமாக மட்டுமே ஜவுளி, தையல், கட்டிடக்கலை, மருத்துவம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், நீர்வளப் பாதுகாப்பு ஆகிய துறைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இவற்றில் பாரம்பரியமிக்க தொழிற்திறன்கள் நம் சமூகத்தில் வேரூன்றி இருப்பதால் இவற்றைப் பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இத்தகைய பார்வை, குலக் கல்வியாக இத்திட்டம் மாறுவதற்கான அபாயத்தைக் குறிப்பதாகவே சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதிலும் ‘சமூகப் படிநிலையும் தொழில் கல்வியும்’ என்ற தலைப்பின்கீழ் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்விக்கான இடம் மங்கிப்போகக் காரணம், வேலையில் சமூக அந்தஸ்து பார்க்கும் அணுகுமுறைதான் என்கிறது வரைவு.

மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை மட்டும் உயர்வாகக் கருதும் எண்ணம்தான் என்கிறது. ஆனால், இந்தியத் தலைநகரில் முனைவர் பட்டம் படித்து வந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன், ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா, மும்பை தேசிய மருத்துவக் கல்லூரி மாணவி பாயல் தத்வி எனக் கல்வி நிறுவனங்களுக்குள் பல உயிர்களைப் பலி வாங்கிய சாதியம் குறித்து ஒரு வார்த்தைகூட இந்தப் பத்தியில் பேசப்படவில்லை.

கல்வி நிலையங்களில் சீழ் பிடித்திருக்கும் சாதியத்தை எதிர்கொள்ளாதவரை அதற்கான தீர்வும் கிடைக்கப்போவதில்லை. அப்படியிருக்கத் தொழிற்கல்வியைத் தாழ்வாகப் பார்க்கும் போக்கு வெறும் தனிநபர் மனப்பான்மையாகச் சித்தரிப்பது என்பது உண்மையை மறுக்கும், மறைக்கும் செயலாகும்.

வாய்ப்பந்தல் போடாதீங்க

15 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 26.5 கோடிப் பேர் படிப்பறிவற்றவர்களாக இருப்பதாக 2011-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்நிலையை மாற்றி 2030-க்குள் 100 சதவீத இளையோர், வயது வந்தோருக்கு எழுத்தறிவிக்கும் இலக்கை இந்த வரைவு முன்வைக்கிறது.

வயது வந்தோர் கல்விக்கான மத்திய நிறுவனம் என்ற தன்னாட்சி நிறுவனத்தை நிறுவத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வயது வந்தோர் கல்விக்குரிய தேசியப் பாடத்திட்ட வடிவமைப்பை என்.சி.இ.ஆர்.டி. உருவாக்கும். அடிப்படை எழுத்தறிவு, கணித அறிவைப் பயிற்றுவித்தல், தொழில் திறன்களை வளர்க்கும் திறன் பயிற்சி அளித்தல், அடிப்படைக் கல்வி கற்பித்தல் ஆகியவை இவற்றில் கவனம்பெறும்.

பள்ளி வளாகத்துக்குள்ளேயே வயது வந்தோருக்கான மையங்களும் திறக்கப்படும். ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் தனிக் கவனம் கொடுத்துக் கல்வி கற்பிக்கப்படும் என்கிறது.

மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டது வயது வந்தோர் கல்வி. மணி அடித்துத் தொடங்கும் பள்ளி வகுப்பா அது? நேரம், இடம், பாடம் - எல்லாமே நெகிழ்வுத்தன்மை கொண்டவை. இந்தப் பார்வையின்றி, வயது வந்தோர் கல்விக்குத் தேசிய அளவில் அமைப்பை உருவாக்குவது, மையமான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவது, பள்ளிகள், நூலகங்களில் வகுப்பு நடத்துவது, படித்த இளைஞர்களைத் தொண்டர்களாகத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி வழங்குவது, கற்பித்தலுக்கு மொபைல் ஆப்ஸைப் பயன்படுத்துவது- என்றொரு வாய்ப்பந்தல் போடுகிறது கல்விக் கொள்கை என்று கடுமையாக விமர்சிக்கிறார் மூத்த கல்வியாளர் மாடசாமி.

அனுபவசாலிகளிடம் ஆலோசித்திருக்கலாமே!

“ ‘இது சந்திரன் மேல கால வச்ச காலம்; நீயும் கைநாட்டு போடுறது அலங்கோலம்!’ என்பதுபோன்ற கலை வடிவப் பிரச்சாரங்கள் 90-களில் எழுத்தறிவு இயக்கத்தின் உயிர்நாடியாக இருந்தன. ‘கற்பித்தல் அல்ல; உரையாடல்’ என்பது நாங்கள் பெற்ற பயிற்சியின் சாராம்சமாக இருந்தது.

அறிவொளியின்போது, தமிழ்நாடு முழுக்க ஒரே பாடம் என்பதே பிரச்சினையாக இருந்தது. மதுரையில் ‘இருமல்’ என்றால் நெல்லையில் அது ‘தொரத்தல்’. பட்டா என்பது அறிவொளியின் முதல் சொல். எழுத எளிதான சொல். பொதுவாகப் பட்டா என்பது நிலப் பட்டா; ஆனால், சில இடங்களில் பட்டா என்பது வளைந்த இரும்பு வடம்.

இளைஞர் சிலருக்கோ உடனடியாக ஞாபகத்தில் ‘பட்டா கத்தி பைரவன்!’. அன்று எழுத்தறிவு இயக்கத்தில் இரவு பகலாய் உழைத்தவர்கள் பலர் இன்றும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக்கூடக் கலந்து ஆலோசிக்காமல் வயது வந்தோர் கல்வித் திட்டத்துக்கான வரைவு தயாராகி இருக்கிறது. டம்பமான வார்த்தைகளில் ‘கோச்சிங் சென்டர்’ விளம்பரம்போல் இருக்கிறது அறிக்கை. அர்த்தமும் அக்கறையும் உள்ள யதார்த்தமான ஓர் அறிக்கைதான் நம் எதிர்பார்ப்பு” என்கிறார் மாடசாமி.

அனைவருக்கும் கல்வி என்பது உயரிய நோக்கம். ஆனால், அனைவருக்கும் ஒற்றைப் பாடத்திட்டம் என்பதும் அதை ஒரு அதிகாரம் படைத்த குடையின்கீழ் கொண்டுவர முயல்வதும் சமூகநீதிக்கு எதிரான திட்டம். புதிய கல்விக் கொள்கை 2019 வரைவில் தலைகாட்டும் இத்தகைய அம்சங்களைக் களைந்து மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே இது அனைவருக்குமான கல்விக் கொள்கை எனலாம்.

கட்டுரையாளர்

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x