Published : 23 Oct 2018 11:40 AM
Last Updated : 23 Oct 2018 11:40 AM

வேலை வேண்டுமா: கட்டுமானத் தொழிலாளர் நல வாரியப் பணி

தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இளநிலை உதவியாளர் பதவியில் 66  காலியிடங்களும் கணினி இயக்குபவர் (Data Entry Operator) பதவியில் 111 காலியிடங்களும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. 

தேவையான தகுதி

இளநிலை உதவியாளர் பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குபவர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினியில்  சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு ஒரு மணி நேரத்தில் 8  ஆயிரம் எழுத்துக்களைத் தமிழ், ஆங்கிலத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

1.7.2018 தேதியின்படி, வயது  18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் பி.சி., எம்.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்படும்.

எனினும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.), பொதுப்பிரிவில் உள்ள கணவனை இழந்த பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சக் கல்வித் தகுதியான எஸ்.எஸ்.எல்.சி.-யைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி (பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டம்) பெற்றிருந்தால்  அவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.

தேர்வு விவரம்

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது. கணினி இயக்குபவர் பணிக்கு மட்டும் கூடுதலாகக்  கணினி தட்டச்சுத் திறன் தேர்வு நடத்தப்படும். இரண்டு பதவிகளுக்கும் அடிப்படைச் சம்பளம் ரூ.19,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி,  வீட்டுவாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவ படி போன்றவற்றைச் சேர்த்தால் சம்பளம் தோராயமாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும். உரிய கல்வித்தகுதியும்,  வயது வரம்புத் தகுதியும் உடையவர்கள் தமிழ்நாடு தொழிலாளர் துறையின் இணையதளத்தில் (www.labour.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும், விண்ணப்ப கட்டணமாக "The  Secretary, TNCWWB" என்ற பெயரில் ரூ.100-க்கு எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலையையும் (Demand Draft) இணைத்து "செயலாளர், தமிழ்நாடு  கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034" என்ற முகவரிக்கு நவம்பர் மாதம் 2-ம்  தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர்,  பழங்குடியினர், அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள்  விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கூடுதல் விவரங்களைத் தமிழ்நாடு தொழிலாளர் துறையின் இணையதளத்தில் விரிவாக  அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x