Published : 05 Jun 2018 11:33 am

Updated : 05 Jun 2018 11:33 am

 

Published : 05 Jun 2018 11:33 AM
Last Updated : 05 Jun 2018 11:33 AM

ஆயிரம் வாசல் 08: திருவிழாக் கோலம் கண்ட பள்ளி!

08

 


து சனிக்கிழமை காலை. பள்ளி வளாகத்தின் பரந்துவிரிந்த திடலில் அத்தனை மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றுகூடி இருக்கிறார்கள். அந்த வாரம் நடத்தப்பட்ட பாடங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான கூட்டம் இது. இனிமையான பாடல்களைப் பாடுவதன் மூலமாகவும், நளினமான நடன அசைவுகளின் வழியாகவும், அழகிய ஓவியங்களின் ஊடாகவும் தாங்கள் கற்றதை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறார்கள் அந்த மாணவர்கள்.

தமிழ்ப் பாடத்தின் வாழ்த்துப் பாடலுக்கு மூவர் நடனம், இருவர் பாடல், ஒருவர் தாளம், அரங்க ஏற்பாடுகளுக்கு ஒருவர் என ‘படிப்புக் கச்சேரி’ ஒன்று அசத்தலாக அரங்கேறுகிறது…இப்படியாகச் செயல்படுகிறது கடலூர் மாவட்டம் சின்னக்காட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளைத் தாமரைப் பள்ளி.

ஏட்டுக் கல்வி போதும்

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமப் பள்ளியில் அன்னையிடம் நேரடியாகக் கல்வி பயின்றவர்கள் அஜித் சர்க்காரும் செல்வி சர்க்காரும். அரவிந்தரின் கல்விச் சிந்தனையின் ஊடாகத் தாங்கள் கற்ற கல்வியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு வெள்ளைத் தாமரைப் பள்ளியைத் தொடங்கி நடத்திவருகிறார்கள்.

“தனிமனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மையப்படுத்தியதாகச் செயல்படுவதுதான் கல்வி என்று வலியுறுத்தியவர் அரவிந்தர். Physical, vital, mental, spiritual ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் கல்வியை அவர் முன்வைத்தார். நாங்கள் படித்த ஆசிரமப் பள்ளியிலும் நீச்சல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், ஜிம்னாஸ்டிக்ஸ், நடனம், நாடகம் போன்றவற்றுக்குத் தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஏட்டுக் கல்வி என்பதற்கே அங்கு இடம் இல்லை. வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம் கிடையாது. ஒரே வகுப்பறையோ, கட்டுப்பாடுகளோ, மதிப்பெண் முறையோ அங்குக் கிடையாது. ஆனால், அங்கு படித்த அனைவரும் திறனும் திறமையும் பெற்றவர்களாக வளர்ந்தோம். அந்தப் பள்ளியின் மாணவர் என்கிற சான்றிதழோடு உலகில் எந்தப் பகுதியில் உள்ள கல்லூரியிலும் மேற்படிப்புக்கான அனுமதியைப் பெற முடிந்தது. பட்டப் படிப்பை முடித்தும் ஆசிரமப் பள்ளியிலேயே ஆசிரியராக நாங்கள் இருவருமே வேலைபார்த்தோம்” என்கிறார்கள் அஜித் சர்க்கார், செல்வி சர்க்கார்.

5CH_Ajit Sarkar அஜித் சர்க்கார் கனவை மெய்படுத்தியவர்கள்

1968வரை ஆசிரமப் பள்ளியில் உடற்கல்வி, விளையாட்டுப் பயிற்றுனராகப் பணிபுரிந்திருக்கிறார் அஜித். அங்கு நடனம் கற்பித்திருக்கிறார் செல்வி. 68-க்குப் பிறகு பிரான்சில் சில காலம் இருவரும் பணிபுரிந்தார்கள். அங்கு இந்தியக் கலைகளுக்கான கலாச்சார மையத்தை நிறுவினார்கள். எளிய மக்களுக்கு இலவசமான தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்ற கனவை மெய்படுத்த 2006-ல் வெள்ளைத் தாமரைப் பள்ளியை நிறுவினார்கள்.

“பாடத்திட்டத்தைத் தாண்டி பரதநாட்டியம், அயல் நாட்டு நடன வகைகள், யோகா, கராத்தே, விளையாட்டு, இசை, ஓவியம், தோட்டக்கலை போன்றவற்றைத் தனிப் பாடங்களாக எங்களுடைய பள்ளியில் கற்பிக்கிறோம். அலாதி பிரியத்துடன் இவற்றைக் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். நடனம், ஓவியம் உள்ளிட்டவை பற்றி அறிவார்தமான உரையாடலிலும் மாணவர்கள் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருகிறோம். ஆசிரியர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு பிரான்ஸிலிருந்து வரும் தன்னார்வலர்கள் மூலமாகவும் செயல்படுத்திவருகிறோம்” என்கிறார் செல்வி சர்க்கார்.

தேவையான தகுதி

இந்தப் பள்ளியில் அனுமதி பெற இரண்டு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று, அந்தப் பள்ளி அமைந்திருக்கும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குழந்தையாக இருக்க வேண்டும். இன்னொன்று, ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளாக இருக்க வேண்டும். இங்கு படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் விளிம்புநிலையைச் சேர்ந்த குழந்தைகளே.

“வகுப்புக்கு 20 மாணவர்கள். 20 மாணவர்களைச் சேர்க்க 70 விண்ணப்பங்கள்வரை பெறுகிறோம். அவர்களில் இருந்து மிகவும் புறக்கணிக்கப்பட்ட சூழலில் இருக்கும் குழந்தைகளை தான் வளர்த்தெடுக்கிறோம். மாநில அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தைப் பின்பற்றிவருகிறோம். பாடங்கள் இருமொழியில் கற்றுத் தரப்பட்டாலும் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி. கூடுதலாகப் பிரெஞ்சு, இந்தி ஆகிய மொழிப் பாடங்களையும் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். புதுமையான கற்பிக்கும் முறைகள், இனிமையான கற்றல் சூழல், ஈடுபாட்டுடைய ஆசிரியர்கள் ஆகியவற்றை உறுதி செய்துள்ளோம்” என்கிறார் அஜித்.

கொண்டாட்டமாகப் படிப்போம்!

தங்களுடைய பள்ளியில் நடைபெறும் சிறப்புப் பயிற்சிகள், வருடாந்தர விழாக்கள் குறிப்பிடத்தகுந்தவை என்கிறார்கள் அஜித்தும் செல்வியும். “சென்ற ஆண்டு வன விலங்குகள் பற்றிய விழா ஒன்றைத் திட்டமிட்டோம். கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு என நான்கு பிரிவுகளாக இந்தியாவின் வனங்களைப் பிரித்தோம். ஒவ்வொன்றைப் பற்றியும் புத்தகங்கள், வீடியோ காட்சிகளின் துணைகொண்டு காடுகளின் சிறப்பம்சங்களைத் தொகுத்தோம்.

5CH_Selvi Sarkar செல்வி சர்க்கார்

பின்பு மாணவர்கள் காடுகளைப் பற்றி என்னவெல்லாம் தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பட்டியலிட்டோம். திசைவாரியாக இருக்கும் காடுகள் எவை, அங்குள்ள விலங்குகள் யாவை, அந்தக் காடுகளின் பிரத்தியேகமான தாவரங்கள் எவை, புலிகள், யானைகள் ஊருக்குள் புகுவது ஏன்?... இப்படி ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து என்ன செய்யலாம் எனச் சேர்ந்து கலந்துரையாடினார்கள் மாணவர்கள்.

ஒவ்வொரு குழுவிலும் ஆரம்பப் பள்ளித் துளிர்கள் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள்வரை இந்த விழாவில் பங்கேற்றனர். பழைய காகிதங்கள், காய்ந்த மரக் குச்சிகளைக் கொண்டு மரங்களையும் யானைகளையும் பாம்புகளையும் வடிவமைத்து வண்ணம் தீட்டினார்கள். இந்த விழாவுக்குத் தயாராக, கல்வி ஆண்டில் தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கினோம்” என்கிறார்கள்.

கடந்த ஆண்டின் தலைப்பு புவியியல் என்றால் இந்த ஆண்டு வரலாறு. ‘நமது நாடு’ என்ற தலைப்பில் இந்த விழாவை நடத்தி இருக்கிறார்கள். தங்களுடைய கிராமத்தில் இருந்து கடலூர்கூடச் செல்லமுடியாத குழந்தைகளும் ஒட்டுமொத்தத் தேசத்தையும் உணரவைக்கும் முயற்சியாக இதை முன்னெடுத்திருக்கிறார்கள். ஒற்றுமையில் வேற்றுமை, அனைவருக்கும் வாய்ப்பளித்தல், உலகம் தோன்றிய விதம்…போன்றவற்றைக் கூட்டு முயற்சியின் மூலம் எடுத்துச்செல்கிறார்கள். ஒரு வாரம் நடக்கும் இந்த விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள், அக்கம்பக்கத்துப் பள்ளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளப் பள்ளியின் ஆண்டுவிழா அந்தப் பகுதியின் திருவிழாவாகக் களைகட்டுகிறது!

கட்டுரையாளர்: கல்விச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x