

இன்றைய நவீன வாழ்க்கை முறை யில் விளையாட்டு என்பது ஒரு கையடக்கத் திறன்பேசிக்குள் சிறைபட்டு முடிந்துவிடுகிறது. கிரிக்கெட், கேரம், வீடியோ கேம், பரமபதம், செஸ் என்று எல்லாவிதமான விளையாட்டுகளும் இணையத்தில் கிடைக்கின்றன. விளையாட்டு என்றால் என்னவென்றே தெரி யாமல், வியர்வையே வெளியேறாமல் திறன்பேசியில் விரல்களைத் தேய்த்து நேரம் போவது தெரியாமல் குழந்தைகளும் விளையாடி வருகின்றனர்.
ஆனால், கால் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்த நிலை இல்லை. அன்றைக்குச் சட்டையில் கறை படாத, உடலில் மண் ஒட்டாத, கைகால்களில் சிராய்ப்பு ஏற்படாத குழந்தைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அத்தனை விதம்விதமான விளையாட்டுகள் அன்றைக்கு இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் கோலிக் குண்டு. அந்தக் காலத்தில் இந்த விளை யாட்டை விளையாடாத குழந்தைகள் குறைவு.