

நானும் நண்பரும் ஒரே காலக்கட்டத்தில் எழுதத் தொடங்கினோம். இரண்டு நூல்களோடு எழுதுவதை நண்பர் நிறுத்திக்கொண் டார். மொழி அடர்த்தியுடன் எழுதக்கூடியவர். சமீபத்தில் அவரைச் சந்தித்தேன்.
“நன்றாகத்தானே எழுதிக் கொண்டிருந்தீர்கள். ஏன் எழுதுவதை நிறுத்திக்கொண்டீர்கள்?” என்று கேட்டேன்.
“நீங்கள் தொடர்ந்து புகழுக்காக எழுதுகிறீர்கள்” என்றார். நான் அப்படி அல்ல என்பது அதன் உள்பொதிந்த அர்த்தம்.
“எழுத்தாளன் எழுதுவது புகழுக்காகவா? புகழ் என்ன கிரீடமா, இல்லை உயிரைக் காக்கும் கவசமா?”
“பிறகு எதற்கு எழுதுகிறீர்கள்?”
நான் ஏன் எழுதுகிறேன் என்பதைவிட, புகழின் ஆபத்து குறித்து அவருக்குப் புரியவைக்க நினைத்தேன். “திருவிவிலியம் வாசித்திருக்கிறீர்களா?” என்றேன். ஆம் என்றார்.
“அதில் முதல் கொலை எப்போது நடக்கிறது? எதனால் நடக்கிறது? யார் யாரைக் கொல்கிறார்கள்?”
“நான்காவது பக்கத்திலேயே கொலை நடந்துவிடுகிறது. காயின், ஆபேல் இருவரும் சகோதரர்கள். காயின் மூத்தவன். ஆபேல் இளையவன். ஆபேல் ஆடு மேய்க்கிறான். காயின் நிலத்தைச் சீர்த்திருத்தி வெள்ளாமை செய்கிறான். காயின் நிலத்தில் விளைந்த ஒரு பகுதியைக் கடவுளுக்குக் காணிக்கையாகப் படைத்தான். ஆபேல் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீற்றுகளைக் (முதல் குட்டிகள்) கொடுத்தான். இருவரது காணிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட கடவுள், ஆபேலயும் அவனது காணிக்கையையும் கனிவுடன் நோக்கினார். ஆபேல் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று புகழடைந்தான். இதனால் பொறாமையும் கோபமும் அடைந்த காயின், ஒரு நாள் தம்பியையே கொன்றான்.”