

தொட்டிப்பாலம் என்பது இரண்டு உயரமான நிலப்பகுதிகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கைக் கடந்து நீரைக் கொண்டுசெல்வதற்காகக் கட்டப்படும் பாலம்.
வில்லுக்குறி பாலம்
திருவனந்தபுரம் விமான நிலையம் செல்லும் போதெல்லாம் இயல்பாகவே கடந்து செல்லும் பாலம் வில்லுக்குறி பாலம். ஆனால், தனித் துவமான கட்டமைப்பைக் கொண்டது. என்எச் 66 நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் இருக்கும் இப்பாலம்தான் தேசிய நெடுஞ்சாலையிலிருக்கும் ஒரே தொட்டிப்பாலம்.
பாலத்தின் கீழே, தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் படிகள் உள்ளன. பராமரிப்பின்றி இருக்கும் இப்படிகள் வழியே மேலே சென்றால், கால்வாய் செல்வதைப் பார்க்கலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு அமைத்த பாலம். பல இடங்களிலும் திருவிதாங் கூர் அரசு இவ்வாறு தொட்டிப்பாலங்களை அமைத்திருக்கிறது.
வில்லுக்குறி தொட்டிப் பாலத்தில், அருகிலிருக்கும் மாம்பழத்துறையாறு அணையின் தண்ணீர் செல்கிறது. செல்லும் வழியில் மக்கள் குளிப்பதற்கு வசதியாகப் படித்துறைகள் உள்ளன. இங்கிருந்து வடமேற்கே ஏறக்குறைய 15 கி.மீ. தூரம் சென்றால், மாத்தூர் தொட்டிப்பாலம் வருகிறது. எழில் கொஞ்சும் இப்பாதையில் பயணிப்பதே இனிமையானது!