

சென்னையில் அலியான்ஸ் பிரான்சேஸ், கதே இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து ’சக்தி’ என்கிற ஜவுளிக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. ஆடைகளை உருவாக்கு வதில் இந்தியாவைப் போலவே ஐரோப்பாவிலும் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது.
அதன் அடிப்டையில் துணிகளைக் கொண்டு பெண்களின் சக்தியை விளக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட கலைக்காட்சி இது. அலியான்ஸ் பிரான்சேஸ் கட்டிடத்தின் மாடியில் இருந்து தொங்கவிடப்பட்டிருந்த பெரிய திரை ஒன்று வாசலில் வரவேற்றுக் கொண்டிருந்தது. ஜெர்மானியக் கட்டிடக் கலைஞர் பெட்டினா மிலெட்டா உருவாக்கிய ஓவியத்திரை அது.
சென்னை, காஞ்சிபுரம் போன்ற இடங்களுக்குச் சென்று, பெற்ற அனுபவங்களைக் கொண்டு ஓவியங்களுக்குப் பதிலாகக் கட்டிடங்கள் வரும்படி அமைத்திருந்தார். இந்தத் துணியைத் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வைத்து ஒளிப்படமெடுத்து, அதையும் காட்சிப்படுத்தி இருந்தார்.
இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடு களைச் சேர்ந்த கலைஞர்களின் உருவாக்கங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் முதலே இந்தியா வந்து இங்கு ஜவுளித் துறையில் பணியாற்றும் பெண்களுடன் உரையாடியும், தயாரிப்பு முறைகளைப் பார்வையிட்டும் கலைஞர்கள் தங்கள் கலைப்படைப் புகளை உருவாக்கியுள்ளனர்.