

புதுக்கோட்டையில் கரம்பக்குடி ஒன்றியத்தில் செங்கமேடு என்றோர் ஊர் உள்ளது. இந்த ஊர்ப் பெயரைக் கேட்கும் யாருக்கும் செங்கல் அடுக்கிய மேடோ என்று நினைக்கத் தோன்றும். அதுதான் இல்லை.
பண்டையத் தமிழர்கள் நீர்நிலை களைப் பல பெயரிட்டு அழைத்தார்கள். அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி, உறைகிணறு, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை, கடல், கம்மாய், கால், குட்டம், குட்டை, குண்டம், குண்டு, குமிழி, வாரி, கேணி, சிறை, தடம், தளிக்குளம், தாங்கல், நீராவி, பிள்ளைக்கிணறு, பொய்கை, மடு, மடை, மதகு... இப்படியாக. இவற்றில் சேங்கை என்பது ஒரு வகை நீர்நிலை.
சேங்கை என்பதற்குப் பாசி மண்டிய ஆபத்தான குளம் என்று பொருள். இவ்வூர்ப் பெயரிலிருக்கும் மேடு என்பது மேடு அல்ல, மடு. மடு என்றால் பள்ளம். சேங்கைமடு என்பதற்குப் பாசி மண்டிய அபாயகரமான பள்ளம் என்று பொருள்.