

எழுத்தாளர் ஜெயகாந்தன் அப்போது ஒரு வார இதழில் பத்தி எழுதிக் கொண்டிருந்தார். அதில் ஒரு முறை சபரிமலைக்கு மாலை போட்டு ஐயப்பனைத் தரிசிக்கச் சென்றது பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததிலிருந்து எனக்கும் ஒரு முறை சபரிமலைக்குப் போய் வரலாமே என்று தோன்றியது. அப்போது வேலைக்குத் தீவிரமாக முயன்று கொண்டிருந்த காலக்கட்டம்.
26 வயதிற்குள் அரசு வேலைக்குச் செல்ல வேண்டும். எனக்கு 26 வயது முடிந்து கொண்டிருந்தது. வேலை கிடைத்தால் மலைக்கு வருவதாகக்கூட வேண்டிக் கொண்டேன். வங்கியில் வேலை கிடைத்தது. பக்கத்து வீட்டில் சங்கர்சாமி அண்ணாச்சியிடம் என் ஆவலைச் சொன்னேன். அவர் தெளிவும் கண்டிப்பும் மிக்கவர்.