

கிராமத்து மக்கள் வேளாண் தொழிலை முதன்மையானதாகக் கொண்டிருந்தபோது, ஆண்கள் காலை நேரத்திலேயே காட்டுக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு முந்தைய நாள் சமைத்ததில் இருந்து பழைய சாதத்தையோ அல்லது அப்போது சமைத்த உணவையோ கணவனுக்கும் கூலியாள் களுக்கும் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது.
இன்றுபோல் வகைவகையான பாத்தி ரங்கள் இல்லாத அன்றைய நாளில், சில பாத்திரங்களில் மட்டுமே உணவை எடுத்துச் செல்வர். இவற்றையெல்லாம் மூங்கிலால் உருவாக்கப்பட்ட வட்டவடிவக் கூடையில் வைத்து, தலையில் சுமந்தவாறு காட்டிற்குச் செல்வார்கள்.
இந்தக் கூடைக்குச் சாப்பாட்டுக் கூடை என்கிற பெயரும் உண்டு. காட்டுக்குச் செல்லும்போது மேய்ச்சலுக்காக ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் ஓட்டிச்செல்வது உண்டு. இவ்வாறு சாப்பாட்டுக் கூடையைத் தலையில் சுமந்தவாறு, உடன்செல்லும் பெண்களுடன் உரையாடிக்கொண்டு போகும் காட்சி கிராமங்களின் தனித்துவமான அடையாளமாக இருந்தது.
இந்த நேரத்தில் தான் உலக விஷயங்கள் முதல் உள்ளூர் விஷயங்கள்வரை பரிமாறிக்கொள்ளப்பட்டன. சும்மாடு உதவியுடன் தலையில் வைத்தி ருக்கும் கூடையைப் பிடித்தோ அல்லது பிடிக்காமலோ சென்றாலும் பாத்திரங்களில் உள்ள உணவு வகைகள் சிந்தாது, சிதறாது.
வயதுக்கு ஏற்ப வேகமாகவோ மெதுவாகவோ பெண்கள் நடந்துசெல்லும் அழகே தனிதான். இதுபோன்ற காட்சிகளை இன்று பழைய திரைப்படங்களில் மட்டுமே காண முடிகிறது.
புட்டி
அன்றைய நாளில் வட்டவடிவிலான பல்வேறு அளவுகள் கொண்ட மூங்கில் கூடைகளையே பலவற்றுக்கும் பயன்படுத்தினர். பெரிய அளவிலான கூடைகளை முடைவ தற்கான மூங்கில் குச்சிகளில் மீதமாகும் குச்சிகளைக் கொண்டு சிறிய கூடைகளை முடைந்தனர்.