

பழகுகிற ஆள் வயதில் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் `நீங்க, வாங்க, போங்க’ என்று மரியாதையாகத்தான் அப்பா அழைப்பார். வீட்டில் அக்காவின் கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. ஒருபக்கம் பந்தல்காரர், நாகஸ்வர மேளவாத்தியக்காரர், சமையல் தவசுப் பிள்ளை என்று ஒவ்வொருவரையும் அழைத்து, கூலி பேசி அட்வான்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.
பலரிடமும் விசாரித்து ஒவ்வொரு துறையிலும் சிறப்பானவர்களைக் கூப்பிட்டுவிட்டி ருந்தார். இன்னொரு பக்கம் அழைப்பிதழ் அச்சடித்து வந்ததை கவருக்குள் போட்டு விலாசம் எழுதிக்கொண்டிருந்தார்கள். சிறுவர்களும் உதவிக்கொண்டிருந்தோம். அப்போது வழக்கமாகத் தபால் கொண்டு வரும் தபால்காரர் கடிதம் கொண்டு வந்தார்.