

எங்கள் பகுதியில் வீட்டின் மாடியை ‘மச்சு’ என்பார்கள். சில வீட்டில் மச்சு என்பது தானியங்களைச் சேகரித்து வைக்கும் இடமாகவும் இருக்கும். அதனால்தான், ‘மச்சு நெல்லும் குறையக் கூடாது. மக்கமார் முகமும் வாடக் கூடாதுன்னா முடியுமா’ என்று சொலவடை சொல்வார்கள்.
அதாவது காசும் செலவழியக் கூடாது, அதேநேரத்தில் பிள்ளைகள் சந்தோஷமாகவும் இருக்கக் காசும் செலவழிச்சாகணும், இரண்டும் நடக்குமா என்று அப்படிச் சொல் வார்கள். எங்கள் வீட்டு மச்சு நல்ல பெரிய ஹாலுடன் கூடியது. ஹாலில் நான்கு சுவர்களிலும் பெரிய ஒளிப் படங்களும் ரவி வர்மா, எஸ்.எம். பண்டிட்டின் பெரிய காலண்டர்களும் சட்டமிடப் பட்டு மாட்டியிருக்கும்.
அப்பாவின் அப்பா சிவ பூசை செய்வதுபோல பெரிய படம் ஒன்றும் அதன் எதிரே அம்மாவும் அப்பாவும் உள்ள அதே அளவுள்ள படம் ஒன்றும் நடுநாயகமாக இருக்கும். அப்பா கோட்டும் சூட்டும் அணிந்து அழகான நாற்காலியில் அமர்ந்திருப்பார். அம்மா நகை நட்டுகளுடன் பட்டுச்சேலையில் அவர் பின்னால் நிற்பார். நானறிய அம்மா வெளியில் அதிகம் போனவரில்லை.
ஆனால், அந்தப் படம் எடுக்க ஸ்டுடியோவிற்குப் போனது எப்படி என்று அம்மாவிடம் கேட்டேன். அது வண்டியில் ஜங்ஷனுக்குப் போய், இம்பீரியல் ஸ்டுடியோவில் எடுத்தது என்றார். ஜங்ஷன் என்பது வீட்டி லிருந்து 3 கி.மீ. தூரமாவது இருக்கும். அப்படி வண்டி கட்டிப் போய் ஸ்டுடியோவில் ஒளிப்படம் எடுப்பது, அன்றைக்கு மகிழ்வான நிகழ்வு.