

கேரளம் என்றாலே மலைகள், ஆறுகள், கடல் நம் கண் முன்னே வந்து செல்லும். இந்த முறை இந்தியப் பயணத்தில் மலைகள் நிறைந்த தேக்கடிக்குச் சென்றோம்.
அங்கு ‘பெரியாறு புலிகள் காப்பகம்’ எனும் கேரள அரசுக்குச் சொந்தமான இடத்தில் தங்கினோம்.
காட்டுக்குள் தங்குவதற்கான விடுதிகளை மிகவும் பாதுகாப்பாக அமைத்திருக்கி றார்கள். உயிரினங்களின் பாதுகாப்பு கருதி, இரவு நேரத்தை அவற்றுக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். இதனால் மாலை ஐந்தரை மணிக்கு மேல் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அறை முன்பதிவு செய்திருந்தாலும், அந்த நேரத்திற்குள் உள்ளே வந்தாக வேண்டும்.
‘வெல்கம் பெரியாறு டைகர் ரிசர்வ்' எனும் பதாகையில் உள்ள புலிகளைக் கடந்து சென்றால், திரும்பிய பக்கமெல்லாம் காடு. பகல் நேரத்தில் நடக்கலாம். உள்ளேயே படகுத்துறை இருப்பதால் படகில் செல்வது எளிது.
தங்கும் இடத்தின் வரவேற்பறையில் நேருவும் இந்திரா காந்தியும் கேரளம் வந்து சென்றதன் நினைவாக எடுத்துக்கொண்ட ஒளிப்படம் உள்ளது. பணியாளர்கள் மிகவும் உதவியாக இருந்தார்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாடினார்கள்.
என்ன தேவை என்றாலும் சிறப்பாகச் செய்துகொடுத்தார்கள். இடத்தை நேர்த்தியாக, மிகவும் தூய்மையாகப் பராமரிக்கிறார்கள். காலையும் மாலையும் காட்டு உயிரினங்கள் தண்ணீர்க் குடிக்க வரும் என்பதால், காலை ஏழு மணிக்குப் படகில் பயணிக்கத் தொடங்கினோம்.