

பிரமோதூத வருடத்து மார்கழியின் இளங் காலை. அமராவதி ஆற்றுநீர் ஆவியாகி மேலெழும்பியபடி இருந்தது. நானும் பெரியப்பாவும் சிறுகெண்டை மீன்கள் நீந்தும் நீருக்குள் மிதிவண்டியை உருட்டியபடி நிதானமாக மதுக்கம்பாளையம் நீர்த்துறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நெல் மூட்டைகளும் வைக்கப்புல்கட்டுகளும் ஏற்றிய பாரவண்டிகள் எதிராக வந்தவண்ணம் இருந்தன.
எங்கள் கீழ்கரைவெளி வயல் மதுக்கம்பாளையம் நீர்த்துறை மேட்டில் இருந்தது. நானும் பெரியப்பாவும் அக்கரையேறி, ஆலமரத்தின் அடியில் நீர்சொட்டும் மிதி வண்டியை நிறுத்திப் பூட்டினோம். தொங்கும் விழுதுகளின் கீழ் கவிழ்ந்து கிடந்த பரிசலிடம் நின்றவர் மக்கிரியைச் (பெரிய கூடை) சும்மாட்டுத் தலையில் தூக்கிவைத்தபடி எங்களோடு சேர்ந்து நடந்தார். அறுபது வயது முதுமை.