

ஏட்டுத் தவசுப்பிள்ளை என்றால் ஹெட் குக் என்று அர்த்தம். ஆறுமுகம்தான் நெல்லை டவுனில் அப்படிப் பேர் வாங்கியவர். அவரிடம் உதவியாளராக இருந்தவர்கள்தான் பின்னால் பிரபல சமையல்காரர்களாக விளங்கினார்கள். காந்தியடிகள் நெல்லைக்கு, எங்கள் உறவினர் சாவடி கூத்தநயினார் இல்லத்தில் விருந்தினராக வந்து தங்கியிருந்தபோது, ஆறுமுகம்தான் சமைத்துப் போட்டாராம்.
அவரின் கைப்பக்குவத்தைக் கண்டு வியந்த காந்தி, அவருக்குத் தனது கதர்க் குல்லாவை நினைவுப் பரிசாக வழங்கினாராம். அவர் மகன் ராமு என்கிற ராமலிங்கம் என் நண்பன். எங்கள் காலத்தில் ராமுவின் அப்பா சமையலை மேற்பார்வை யிடுவதில்லை.
ஆனால், விரும்பிக் கேட்டால் ஆக்குப்பிறைக்கு வந்து ருசி பார்த்துச் சொல்வார். வாசனையை வைத்தே சொல்லி விடுவார். ``ஏல, ரசத்தில ஒரு கை உப்பு போடுலே, ஏய் பேராச்சி, அவியலை அடிப் புடிக்க விடாதலெ, இன்னும் கொஞ்சம் கொழும்புத் தேங்காயெண்ணய விட்டுக் கிண்டி விடு” என மளமளவென்று உத்தரவு கள் பறக்கும்.
``ஒரு மூக்கு வாளியைக் கொண்டா” என்று கட்டளையிட்டு வாங்கி, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ போட்டு, ஒரு படித் தண்ணீர் விட்டு நன்றாகக் கரைக்கச் சொல்வார். ‘பச்சைக் கற்பூரம் நல்லா கரஞ்சிருக்கா’ என்று பத்துத் தடவையாவது கேட்பார். அதைத் போட்டாலே கரைஞ்சிரும், சமயத்தில் ஒரு துணுக்குக் கரையாது.
அது பல்லில் ஒட்டிக்கொண்டால் சூடத்தைச் சவைச்ச மாதிரி இருக்கும் என்று அவரே சமாதானமும் சொல்லிக் கொள்வார். அதைப் பாயசத்தில் சேர்த்த பின்தான் பாயசத்திற்கு அற்புதமானதொரு ருசி வரும். பெரிய கல்யாண வீடுகளில் அந்தப் பக்குவத்தை மட்டுமாவது நீங்கதான் செய்யணும் என்பார்கள்.
ரசம் அவர் பக்குவத்தில் வைத்துச் சாப்பிட வேண்டும். ரசம் வைப்பது அவ்வளவு பெரிய வித்தையா என்று கேட்கக்கூடும். எல்லாக் குழம்பும் நன்றாக வைக்கத் தெரிந்தவர்களுக்குக்கூட ரசம் வாய்க்காது. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அடிக்கடிச் சொல்வார், `ரசம் நல்லா வைக்கத் தெரிஞ்சா போதும், அந்தப் பொண்ணைக் கண்ணை மூடிட்டுக் கல்யாணம் கெட்டலாம்’ என்று. நன்றாகச் சமைக்கும் என் மனைவிக்குச் சமயத்தில் ரசம் வாய்க்காது என்று அவரே குறைபட்டுக்கொள்வார்.