

‘சைக்கிள் பழகினாலும் பழகினான் வாராவாரம் சனி, ஞாயிறு என்றால் படிக்காமல் எங்காவது ஊர் சுற்றப் புறப்பட்டு விடுகிறான்’ என்று நடு அண்ணன் என்னைப் பற்றி ஆவலாதி சொல்லிக் கொண்டே இருப்பான். அவனுக்கு சைக்கிள் ஓட்ட வராது. அதனால் பல நல்ல வேலைகள் அவனுக்குக் கிட்டாமல் போயின.
1960களில் தபால் இலாகாவில் பெரிய வேலைநிறுத்தம். நிலைமையைச் சமாளிக்கத் தற்காலிக சம்பளத்தில் ஆளெடுத்தார்கள். பின்னால் நிரந்தர வேலைக்கு ஆள் எடுக்கும் போது முன்னுரிமை தரப்படும் என்கிற உறுதிமொழி கொடுத்திருந்தார்கள்.
அண்ணன் தபால்காரர் வேலைக்குச் சேர்ந்தி ருந்தான். நான்கு கி.மீ. தூரத்திலுள்ள பக்கத்துக் கிராமத்தில் வேலை. அங்கு பஸ் போகாது. அண்ணனின் நண்பன் சைக்கிளில் காலையில் கொண்டுபோய் விட்டு வருவான். மாலையில் நடந்தே வந்துவிடுவான்.
கிராமத் திற்குப் போன பின்னும் தினமும் நல்ல வெயிலில் நடந்தே தபால்களை விநியோகம் செய்திருக்கிறான். ஒரு வாரத்தில் ரொம்பவும் களைத்துப் போய் விட்டான். நல்லவேளை வேலைநிறுத்தம் முடிந்துவிட்டது. அப்புறம் நிரந்தர வேலைக்கு ஆள் எடுத்தபோது சைக்கிள் ஓட்டத் தெரியாத தால் அண்ணனை எடுக்கவில்லை.
நாங்கள் வாராவாரம் சைக்கிளை எடுத்துக் கொண்டு பக்கத்திலுள்ள சுத்தமல்லி அணைக்கட்டு, மருதூர் அணைக்கட்டு, திருணாங் கோயில் என்கிற திருவேங்கடநாதபுரம், கிருஷ்ணாபுரம் என்று சுற்றுவோம். ஆற்றிலோ அணையிலோ குதியாட்டம் போட்டு விட்டு வருவோம்.