

ராமகிருஷ்ணன் ஓட்டத்தில் கில்லிதான். அதிலும் தவளை ரேஸில் ராமகிருஷ்ணனை யாராலும் ஜெயிக்க முடியாது. தவளைபோலத் தத்தித்தத்தி ஓட வேண்டும். ஓடுவதுகூட யாரும் செய்துவிடலாம். ஆனால், டிராக் மாறாமல் ஓடுவது கடினம். ராமகிருஷ்ணன் நூல் பிடித்தாற்போலத் தாவி வருவான். வேகமும் அவனைப் போல யாருக்கும் வராது.
எப்போதும் பள்ளிகள் அளவில் நடக்கும் தவளை ரேஸ் பந்தயங்களில் அவன் ஜெயித்துவருவான். அவனை எல்லாரும் `தவக்களை’ ராம கிருஷ்ணன் என்று கேலி செய்வதால், போட்டியில் கலந்துகொள்ள மாட்டே னென்று பிடிவாதமாகச் சொல்வான். டிரில் மாஸ்டர் என்னிடம், ``நீ சொன்னாத்தான் அவன் சம்மதிப்பான், அவனை எப்படியாவது சரிக்கட்டுடே. நம்ம ஸ்கூலுக்கு அவனால அஞ்சு பாய்ண்டு உறுதியாகக் கிடைக்கும்டே” என்பார்.
ராமகிருஷ்ணனும் நானும் வாரம் தவறாமல், குறைந்த கட்டணத்தில் இந்திப் படமோ இங்கிலீஷ் படமோ போவது வழக்கம். அப்போதெல்லாம் சனிக்கிழமை மாட்னி காட்சியிலும் ஞாயிற்றுக்கிழமை காலைக் காட்சி யிலும் குறைந்த கட்டணத்தில் இந்திப் படமோ இங்கிலீஷ் படமோ போடுவார்கள்.
சனிக்கிழமை பள்ளிக் கூடம் இல்லையென்றால் இரண்டு பேரும் `பிரைவேட் கிளாஸ்’ என்று சொல்லிவிட்டு, படம் பார்க்கப் போய்விடுவோம். பெரும்பாலும் ரத்னா, பார்வதி இரண்டு தியேட்டர் களிலும்தான் குறைந்த கட்டணத்தில் படம் போடுவார்கள். பெஞ்சு டிக்கெட் 18 பைசா, பேக் பெஞ்சு 31 பைசா.
எப்படியாவது இரண்டு பேரும் 18 பைசா தேற்றிவிடுவோம். அதுவும் முதலில் 15 பைசாவாகத்தான் இருந்தது. 1962 ஜனவரி முதல் தேதியிலிருந்து 18 பைசாவாக உயர்த்தி விட்டார்கள்.