

நெய்வேலி நகரியம் திட்டமிட்ட முறையில் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம். சராசரியாக 500 குடியிருப்புகள் அடங்கிய 1 சதுர கி.மீ. பரப்பு கொண்ட ஒரு வட்டம் என 30 வட்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு வட்டத்துக்கும் இடையே இரு வழிச் சாலைகள், சாலையை ஒட்டி மரங்கள், மின்கம்பங்கள், வடிகால்கள் என அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பொருள்கள் வாங்க வட்டத்திற்கொரு சிறுவணிக மையம், பொதுவான வணிகத்திற்கு முதன்மை வணிக அங்காடிகள் அமைக்கப் பட்டுள்ளன. நகரியத்திற்கு அப்பாற்பட்டவர்கள் வரும்போது பயன்படுத்த பொதுப் பாதாளக் கழிப்பிட வசதி ஏற்படுத்தி, சுகாதாரமும் பேணிக் காக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும்விட மிகவும் தனித்துவ மான அம்சம் என்றால், நெய்வேலியின் தெருப் பெயர்கள்தான்! இந்தச் சாலைகளுக்கும் தெருக்களுக்கும் பெயர் சூட்டிய நெய்வேலி நகரியத்தைத் திட்டமிட்டவர்களுக்கு, பெயர் சூட்டும் பணியை வேகமாக முடிக்க வேண்டிய நெருக்கடி இருந்திருக்க வேண்டும்!
எளிய தெருப் பெயர்கள்
நெய்வேலி நகரியத்துக்குள் இருக்கும் தெருக்களுக்கு அத்தி, வேப்பமரம் உள்ளிட்ட மரங்களின் பெயர்கள், அல்லி, செம்பருத்தி எனப் பூச்செடிகளின் பெயர்கள், கரண்டி, கடப்பாரை எனக் கருவிகளின் பெயர்கள், பால்காரர், எழுத்தாளர் எனத் தொழில் சார்ந்த பெயர்கள் எனப் பட்டியல் நீள்கின்றன.
60 ஆண்டுகளுக்கு முன்னரே சாதிப் பெயர்களைத் தவிர்த்து, தமிழ்ப் பெயருக்கு இணை யாக ஆங்கிலச் சொற்கள் கொண்ட பெயர்களை வைத்து அழகு பார்த்தது நெய்வேலி நகரிய நிர்வாகம். எடுத்துக்காட்டுக்கு ஈட்டி தெரு என்பதை Lance Street எனவும், கொத்தனார் தெருவை Mason Street எனவும் பெயர்ப் பலகை வைத்து, இருமொழிக் கொள்கையை வெளிப்படுத்தியது.