

எங்கள் வீட்டில் `ஈஸ்டர்ன் ஸ்டார்’ என்று பழைய காலத்து சைக்கிள் ஒன்று இருந்தது. செக்குக் கனம் கனக்கும். ஆனால், ரிப்பேரே ஆகாது. அதனால் சைக்கிள் பழகும் எஞ்சோட்டுப் பையன்கள் பலருக்கும் அதை இரவல் தருவேன். எப்போதும் பச்சை டிராயர் போட்டிருப்பதால் `பசுங்கிளி’ என்று அழைக்கப்படும் சுப்பிரமணியன்தான் எனக்குப் பொறுமையாக சைக்கிள் சொல்லித் தந்தான்.
யாரும் எளிதில் இரவல் கொடுக் காத அக்காலத்தில், சைக்கிள் குருவான `பசுங்கிளி’ சுப்பிரமணியன் எப்போது கேட்டாலும் சைக்கிளை இரவல் தந்து விடுவேன். எத்தனை பேர் ஆனாலும் டபுள்ஸோ ட்ரிபுள்ஸோ அழகாக ஓட்டுவான். அப்போதெல்லாம் பெரும்பாலும் காலையில் தாமிரபரணி ஆற்றுக்குளியல்தான். பரிட்சை நேரத்தில் பள்ளிக்கு நேரமாகிவிடும் என்பதால் கல்லணை வாய்க்காலோ, பெருமாள் கோயில் தெரு வாய்க்காலோ போய்க்குதியாட்டம் போடுவோம். அதற்கெல் லாம் தெருவிலிருந்து ஒன்றுசேர்ந்து பட்டாளமாகத்தான் போவோம்.
சுப்பிரமணியன் காலையில் வந்து வீட்டு வாசலில் நின்று சைக்கிள் பெல்லை `ஒன், டூ த்ரீ, ஒன் டூ த்ரீ, ஒன்… டூ…. த்ரீ’ என்று ஸ்கூலில் ட்ரில் முடிந்து கலையும்போது கை தட்டுவதுபோல அடிப்பான். என்ன வேலையாக இருந்தாலும் போட்டுவிட்டு ஓடிவிடு வேன். அவனுடன் குளிக்கப் போவதே அலாதியான அனுபவம். அவனுக்குச் சில போலீஸ்காரர் களைத் தெரியும்.
ஆற்றுக்குப் போகிற வழியில் அப்படி யாராவது நின்றால், தூரத்திலேயே அவனுக்குக் கண்ணில் பட்டுவிடும். சடன் பிரேக் போட்டு சைக்கிளை நிறுத்தி, `ஏல, இறங்கிக் கிடுங்கலே’ என்பான். அப்படியே போலீஸ் பார்த்தாலும், இறங்கிவிட்டால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இல்லாவிட்டால் காற்றைப் பிடுங்கி விடுவார்கள்.