

ஓவியம்: முத்து
வஞ்சிபாளையம் பிரிவின் மேற்கே மேய்ச்சல் தரிசு நிலமெங்கும் அந்தி மஞ்சள் வெயில் விரவியிருந்தது. பூ பூத்த ஆவாரம் புதர்களையும் எருக்கஞ்செடிகளையும் கருந்தும்பிகள் சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன.
நானும் நண்பர் சு.வெங்குட்டுவனும் தரிசு நிலத்தின் ஊடே வறண்டு நீண்டிருந்த பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டக் கிளை வாய்க்கால் கரைமேட்டு மண்தடத்தில் மௌனமாக நடந்தபடியிருந்தோம்.
கவிஞரும் எழுத்தாளருமான சு.வெங்குட்டுவன், ஜோதிடரும்கூட. மண்தடத்துப் புழுதி யில் குரலிட்டபடி சண்டையிட்ட நாகண வாய்கள் எழுந்து பறந்த தருணத்தில் வெங்குட்டுவன் பேசினார். “ரெண்டு நாளைக்கு முன்னால எங்கிட்ட ஜோதிடம் பார்க்க ஒரு அக்கா வந்தாங்க. ஜாதகம் பார்க்கறப்ப அந்த அக்கா தன்னோட துயரமான வாழ்க்கையவே கதை மாதிரி சொன்னாங்க.
எனக்குக் கண்ணீரே வந்திருச்சுங்க… அந்த அக்காவோட வாழ்க் கைய நீங்க கதையாகவே எழுதலாம் ராம்.” இருவரும் முதன்மை வாய்க் காலில் இருந்து, இந்தக் கிளை வாய்க்கால் பிரியும் காரைமதகு விளிம்பில் ஏறி அமர்ந்தோம். அந்தி மங்கும் ஆகாயத்தைப் பார்த்தபடி வெங்குட்டுவன் அந்த அக்காவின் துயரமான வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்கினார்.
விடிந்து பொழுது கிளம்பற நேரம். வெங்குட்டுவனின் வீட்டு வெளித் திண்ணையில் நாற்பது வயதுத் தோற்றம் கொண்ட ஓர் அக்கா ஜாதகம் பார்க்க வந்து அமர்ந்திருந்தார். அந்த அக்கா ஏதோ அவசர காரியமாக ஜாதகம் பார்க்க வந்திருக்கிறார் என்று வெங்குட்டுவன் ஊகித்துக்கொண்டார்.
அவர் மஞ்சள் பையிலிருந்து அவருடைய மூத்தமகனின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார். ஜாதகப்படி அவரின் மூத்தமகனுக்கு இருபத் திரண்டு வயது. தற்போது கிரக தசாபுத்திகள் சற்று சரியில்லாமல் இருந்தன. வெங்குட்டுவன் அந்த அக்காவிடம் கேட்டார்.