

அமராவதி ஆற்றின் அக்கரைவெளியில் வாய்க்கால் நீர் பாய்ந்த நெல்வயல்கள் விரிந்திருந்தன. அதற்கு அப்பால் உதயப்பொழுதின் கீழே சீமை யோட்டுக்கூரை வேய்ந்த வீடுகளுடன் மதுக்கம்பாளையம் தெரிந்தது.
மதுக்கம்பாளையத்தின் மத்தியில் மாடவீடு உயரமாக நின்றது. மாடவீட்டைச் சுற்றிப் புறாக்கள் வட்டமடித்துப் பறந்தன. நெல் நாற்றங்கால் சேற்று உழவில் மும்முரமாக இருந்த அப்பாவிடம் நான் மாடவீட்டைக் காண்பித்துக் கேட்டேன்.
“அந்த வீடு ஆருதுங்கப்பா?” “தங்கம்மாளோட வீடுடா…” நான் மதுக்கம்பாளையம் மாடவீட்டை முதன் முறையாகப் பார்த்த தருணத்தின் ஞாபகச் சித்திரம் இதுதான். ரௌத்திரி வருடத்துப் புரட்டாசியின் தொடக்கக் காலம் அது.
எனக்கு எட்டு வயது. அன்றிலிருந்து அந்த மாடவீட்டின் உள்ளே சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் பீறிட்டுக்கொண்டே இருந்தது. நான் வளர்ந்து எழுத்தாளராகி, சென்னைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கிய பின், அந்த ஆர்வம் நிறைவேறாக் கனவாகவே போய்விட்டது.
சித்திரபானு வருடத்துப் பங்குனியில் நான் ஊருக்குப் போயிருந்தபோது குள்ளக்காளிப் பாளையம் பாலு என்னைப் பார்க்க வந்திருந்தார். பாலு இலக்கிய வாசிப்பு கொண்டவர். தீபம் நா.பார்த்தசாரதியின் தீவிர வாசகர். அன்று பாலு எதேச்சையாக என்னைக் கேட்டார்.
“இப்போ நாம மதுக்கம்பாளையம் மாட வீட்டைப் பார்த்துவிட்டு வரலாமாங்க?” எனக்குள் அளவிட முடியாத மகிழ்ச்சியும் பரவசமும்.
கோடை உக்கிரம் கடுமையாக வாட்டிய அந்த இளமதிய நேரத்திலேயே மொபட்டில் புறப்பட்டோம். நீர்வற்றிய அமராவதி ஆற்றின் மணற்பரப்பைக் கடந்து மதுக்கம்பாளையத்து வீதிகளில் நுழைந்தபோது பாலு சொன்னார்.