

சித்தார்த்தி வருடத்துத் தை மாதம். மாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள். நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த நான் பள்ளி விடுமுறை என்பதால் கோவில்பாளையத்திற்கு அப்புச்சியைப் (அம்மாவின் தந்தை) பார்க்கப் போனேன்.
தோட்டத்துக் கிணற்றுமேட்டில் வெள்ளாட்டுக் குட்டிகளுக்குத் தழுஞ்சி இலைக் கொத்து களை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்த அப்புச்சி, என்னை மானாவாரி மேய்ச்சல் காட்டுவெளியில் அழைத்துப்போனார்.
தங்க அரளிப் புதர்களின் நடுவே விரிந்து பரவிய குடைசீத்தை மரத்தினடியில் சேவல் கட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாட்டுச்சாணம் கொண்டு மெழுகியிருந்த சேவல் கட்டுக்களத்தில் கட்டுச்சேவல்களின் ஆக்ரோஷமான மோதல்கள் நிகழ்ந்தபடி இருந்தன.
வலிமை மிகுந்த கட்டுச்சேவல்கள் மூர்க்கமாகப் பாய்ந்து தங்கள் காலில் கட்டப்பட்ட கத்தியினால் எதிரி சேவல்களைக் கீறி ரத்தம் சிந்தி சரணடையச் செய்துகொண்டிருந்தன. சுற்றிலும் சேவல்கட்டுக்காரர்கள் சூழ்ந்து நின்று கூச்சலிட்டபடி இருந்தனர். இந்தச் சேவல்
கட்டை ஏற்பாடு செய்திருந்த நல்லிமடம் ராமலிங்கம் பெரியப்பா, சேவல் கட்டுக்களத்தின் முன்பகுதியில் நின்றபடி கோச்சை கட்டுபவர் களை (ஜாக்கி) அதட்டிக் கொண்டிருந்தார். “கோச்சை (சேவல்கட்டில் மோதும் சேவல்) ஜெயிச்சவங்க தோத்தவங்க எல்லாம் களத்த வுட்டு வெளியே போங்கப்பா… அடுத்த சேவல் களைக் களத்துல நட வேண்டாமா?” சேவல்கட்டுக்களத்தில் கட்டுச் சேவல்கள் வெல்வதும் வீழ்வதுமாக இருந்தன.
என் மனதைச் சேவல்கட்டின் பிரமிப்பு ஆட் கொண்டது. பெரிய ஆளான பின்னால் நானும் கட்டுச்சேவல்களை வளர்த்துச் சேவல்கட்டில் ஈடுபட வேண்டும் என்கிற வேட்கை ஏற்பட்டது. உச்சிப்பொழுது மேற்கே சரிந்தது. திடீரென கிழக்கே மண்பாதையிலிருந்து ஒருவர் கத்தியபடி ஓடி வந்தார்.
“போலீஸ்…போலீஸ்…” அடுத்த கணம் சேவல் கட்டுக்காரர்கள் தங்கள் சேவல்களைத் தாவியபடி நாலாத் திக்கும் காய்ந்த ஊசிப்புற்களின் ஊடே சிதறி ஓடினர். கட்டுச்சேவல்களின் கொக்கரிப்புகள் கேட்டபடியே இருந்தன. மண்பாதையில் வந்து நின்ற நீலநிற ஜீப்பிலிருந்து குதித்திறங்கி ஓடிவந்த காவல்துறையினர், கையில் சிக்கியவர்களை அடித்து உதைத்து இழுத்துப் போயினர்.