கோழித் திருடனின் புது அவதாரம் | மயில்கள் அகவும் பெருநிலம் 40

கோழித் திருடனின் புது அவதாரம் | மயில்கள் அகவும் பெருநிலம் 40
Updated on
3 min read

ஆங்கீரச வருடத்துத் தை மாதம். பின்பனிக் குளிர் நடுங்க வைக்கும் வைகறை. நல்லிமடத்தின் மேற்குவளவில் நெசவாளர் ஒருவர் உறக்கம் கலைந்து எழுந்தார். வீட்டு வாசலில் மூங்கில் கூடைக்குள் அடைத்திருந்த கட்டுச்சேவல்களைத் திறந்துவிடப் போனார்.

மூங்கில் கூடை திறந்து கிடந்தது. அதனுள்ளே அடைத்திருந்த ஐந்து கட்டுச்சேவல்களையும் காணவில்லை. நாய்களும் நரிகளும் கீரிகளும் நுழைந்து வேட்டையாடிச் செல்லச் சாத்தியமில்லாத இடம். நெசவாளர் மனதில் கட்டுச்சேவல்கள் திருடுப் போய்விட்டன என்று தோன்றியது. வீதியில் போய் நின்று சத்தமிட்டார்.

“நம்ம ஊருக்குள்ள கோழித் திருடன் புகுந்துட்டான்… கட்டுச் சேவலுக அத்தனையும் திருடுப் போயிருச்சுங்கோ….” ஊர்சனம் திரண்டு வந்து தேடியும் கோழித் திருடன் குறித்த தடயம் எதுவும் கிடைக்கவில்லை.

மறுநாள் செங்காட்டூரில் வெளித்திண்ணையின் அடியில் உள்ள கோழிக்கூண்டில் அடைத்திருந்த ஏழு வெடைக்கோழி களும் இரு குஞ்சுக்கோழிகளும் மொத்தமாகத் திருடுப் போயி ருந்தன.

அந்த வீட்டுக்காரர் வெளித் திண்ணையில் படுத்திருந்தும் கோழி களைத் திருடன் சாதுர்யமாகத் திருடியிருந்தான். ஒவ்வொரு நாள் விடிந்ததும் சுற்று வெளியில் ஏதாவது ஓர் ஊரிலிருந்து கோழித் திருட்டு நடந்த சேதி வந்த படியே இருந்தது. கோழித் திருடனை மட்டும் பிடிக்கவே முடியவில்லை. ஊர்சனங்கள் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவன் மீது சந்தேகப்பட்டனர்.

அவன் அரும்பு மீசைப் பருவத்தில் எங்கள் மேற்குத் தோட்டத்தில் செம்மறியாடுகள் மேய்ப்பவனாக இருந்தான். இளைஞனாக வளர்ந்தபோது அமராவதி ஆற்றங்கரையில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கும் சாராய வியாபாரியிடம் கைக்கூலியாகச் சேர்ந்துவிட்டான்.

நாள் தவறாமல் அந்தி மஞ்சள் வெயில் மங்கும்போது சிறிய வெள்ளை ஞெகிழிக் குடுவையில் கள்ளச்சாராயத்தை நிரப்பி மிதி வண்டியின் பின்புறத்தில் வைத்துக் கட்டிக்கொண்டு சுற்றுவெளி ஊர்களில் அவன் விற்றுவந்தான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in