பீடி புகைக்கும் பெண்ணின் சித்திரம் | மயில்கள் அகவும் பெருநிலம் 38

பீடி புகைக்கும் பெண்ணின் சித்திரம் | மயில்கள் அகவும் பெருநிலம் 38
Updated on
3 min read

ஸ்ரீமுக வருடத்தின் வைகாசி. இளமதிய நேரத்து ஆகாயம் கார்மழைக்கான முகாந்திரத்தில் கருமுகில்களைத் திரட்டிக் கொண்டிருந்தது. ஏனோ கார்மழை இறங்காமல் வெயில் சுட்டெரித்தது.

எங்கள் தோட்டத்தின் ஈசானமூலையோர மிளகாய்க் காட்டில் நடவு நட்ட மிளகாய் நாற்றுகள் பட்டுக்கொண்டிருந்தன. வறண்ட காட்டோடையின் கங்குவில் (ஓரத்தில்) அந்த மிளகாய்க் காடு இருந்தது.

மிளகாய்க் காட்டைப் பார்க்கவந்த பெரியப்பாவிடம் அப்பா சொன்னார். “ஓடைக்கரையோட செவை (உக்கிரம்) அடிச்சு கால்வாசி நாத்து பட்டுப்போச்சு... இப்பப் பட்டநாத்து நடவுசெய்ய நாத்துக்கு எங்க போறது? பேசாம அழிச்சிட்டு வேற வெள்ளாமை வெச்சறலாமான்னு பார்க்கறேன்”.

“வேண்டாமுப்பா... நம்ம தோண்டிக் காட்டுத் தோட்டத்து செல்லமுத்து மாப் பிள்ளையோட நாத்துப் பட்டறையில மொளகா நாத்து இருக்கறதைப் பார்த்தேன்.” அப்பா அந்தியில் அந்த மிளகாய்க் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சி பட்ட நாற்று நடவுசெய்ய முடிவுசெய்தார்.

என்னிடம் தோண்டிக்காட்டுத் தோட்டம் போய் மிளகாய் நாற்றுப் பிடுங்கி வரச் சொன்னார். நானும் மிதிவண்டியில் புறப்பட்டேன். கோவில்பாளையத்தின் வடக்குப்புறத்தில் ஊரை ஒட்டித் தோண்டிக் காட்டுத் தோட்டம் இருந்தது.

ஊரின் வடக்குவளவில் தோட்டத்தைப் பார்த்தவாறே செல்லமுத்து மாமாவின் வீடும் இருந்தது. நான் வீட்டின் முன்பு தென்னோலைக் கீற்றுப் பந்தலின் கீழ் மிதிவண்டியிலிருந்து இறங்காம லேயே காலூன்றி நின்றபடி செல்ல முத்து மாமாவைத் தேடினேன்.

மிளகாய்க் காட்டில் ஆள்களோடு களைவெட்டிக்கொண்டிருந்த செல்லமுத்து மாமா, நிமிர்ந்து பார்த்துச் சத்தமிட்டார்.

“ஸ்ரீராமு... அப்படியே கடைக்குப் போயி எங்கணக்குல ரெண்டு கட்டு பீடி வாங்கிட்டு வாப்பா.

ஒண்ணு கணேசு பீடிக்கட்டு இன்ணொண்ணு பச்சைப் பீடிக்கட்டு”. அப்போது கணேஷ் பீடியும், பி.வி.எஸ். பீடியும்தான் கிராமப்புறங் களில் பிரபலம். பி.வி.எஸ். பீடியின் உறை பச்சை நிறத்தில் இருந்ததால் பச்சைப்பீடி என்றே பெயர் விழுந்து விட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in